இத்தாலிய அமெரிக்க எழுத்தாளரான ஆன்ட்ரெ ஆசிமன் (André Aciman) இயற்றிய புதினத்தின் தழுவலே ‘கால் மீ பை யுவர் நேம்’ (call me by your name) திரைப்படம். ஜேம்ஸ் ஐவரி (James Ivory) திரைக்கதை எழுத லூகா குவாடாக்னினோ (Luca Guadagnino) இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் இத்தாலியில் ஓர் கிராமத்தைக் கதைகளமாகவும் 1983 ஆம் ஆண்டைக் கதையின் காலகட்டமாகவும் கொண்டுள்ளது.
இத்தாலியில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வரும் எலியோவின் (Elio) வீட்டிற்கு தொல்லியல் பேராசிரியரான அவரது தந்தையிடம் கல்விசார் பயிற்சி பெற வந்து தங்குகிறார் அமெரிக்க இளைஞர் ஆலிவர் (Oliver). இசை மீதும் நூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட எலியோ, கோடை காலத்தைத் தனது சிறுவயது தோழமைகளுடன் கழிக்கிறார். ஆலிவர் மீது ஈர்ப்பு கொண்டுள்ள எலியோவிற்கு அவரது சிறு வயது தோழியான கியாராவுடனான ஆலிவரின் நெருக்கம் சிறு பொறாமையைக் கொடுக்க, இன்னுமொரு தோழியான மார்சியாவுடன் தான் நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். நெடுநாட்கள் தன் விருப்பத்தை மறைக்க இயலாத எலியோ, அதை ஆலிவரிடம் வெளிப்படுத்திவிட்டு தனக்கு பிடித்தமான குளக்கரைக்கு அவரை அழைத்து செல்ல, அங்கு எலியோவை முத்தமிடும் ஆலிவர் பின்வரும் நாட்களில் விலக்கம் காட்ட மீண்டும் மார்சியாவிடம் நெருங்குகிறார் எலியோ. வெகு சில நாட்களிலே மீண்டும் இணைந்துகொள்ளும் எலியோவும் ஆலிவரும் இவ்வுறவின் நிலையாமையை எண்ணி வருந்தினாலும் பின் வரும் சொற்ப நாட்களை அவர்கள் அழகாக கடத்திச்செல்வதே மீதி படம்.
எலியோவின் பெற்றோர் அவர் மீது காட்டும் அளவற்ற அன்பு, மகன் மீதான அவர்களின் புரிதல் என அவர்களின் குடும்ப அமைப்பு உவகை அளிக்கிறது. குயர் மக்களின் வாழ்வு, காதல் மீது குடும்ப சூழல் மற்றும் சமூக கட்டமைப்பின் தாக்கம் சற்று மிகுதியாகவே இருக்கிறது என்னும் நிதர்சனத்தை இத்திரைப்படம் பிரதிபலிக்கிறது. படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான எலியோவைச் சுற்றியே திரைக்கதை நகர, அப்பாத்திரத்தின் உணர்வுகளோடு முழுமையாக பொருந்தி தன் எதார்த்தமான நடிப்பால் காண்போரைத் திரைக்கதையோடு பயணிக்க வைக்கிறார் Timothée Chalamet. இசை மீது ஆர்வம் கொண்டவராக எலியோ இருக்க, படம் முழுவதுமே இசை பெரும்பங்காற்றி படத்திற்கு இனிமை சேர்க்கிறது. படத்தின் ஒளிப்பதிவு அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் இருக்க, காண்போரைக் கவர்ந்து, மீண்டும் படத்தைக் காணும் ஆவலைத் தூண்டும். அன்பின் வெளிப்பாடாய் ஒருவரின் பெயரை மற்றொருவர் மையலுடன் மாற்றி அழைத்துக்கொள்ளும் காட்சிகளைக் கொண்டு ‘call me by your name’ அவர்களின் ஏக்கம் நிறைந்த காதலை இனிமையாக இயம்புகிறது.
