ஆதிக்கவாதிகளால் சமூகத்தில் நடக்கும் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் அதன் பின்னிருக்கும் சமூக அரசியலையும் பற்றி வெவ்வேறு பாங்கில் வெவ்வேறு இயக்குனர்களால் எடுக்கப்பட்ட நான்கு குறும்படங்களின் தொகுப்பே பாவ கதைகள் என்னும் தொடர். இதில் முதல் குறும்படமான ‘தங்கம்’ பற்றி தான் இவ்விமர்சனத்தில் காணப்போகிறோம்.
1981 ஆம் ஆண்டைக் கதையின் காலகட்டமாகவும் , கோவை மாவட்டத்தின் காடம்பாளயத்தைக் கதைகளமாகவும் கொண்டுள்ளது ‘தங்கம்’. தன் கிராமத்தினர் தன்னிடம் ஒதுக்கம் காட்டி ஒடுக்குவது வலியைக் கொடுப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் மும்பை சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு தன் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் கனவோடு பணம் சேமித்து வைக்கிறாள் திருநங்கை சத்தார். தன் தந்தையே தன்னை வெறுக்க, மற்றவரிடம் தனக்கென பரிந்துபேசும் சிறுவயது நண்பன் சரவணன், அவளது தங்கத்தின் அன்பு மயிலிறகாய் வருட அவன்பால் காதல் கொண்டிருப்பவள் தனது அறுவை சிகிச்சைக்குப் பின் அவனை மணந்து கொள்ளும் கனவோடும் இருக்கிறாள். அவனது காதலோ சத்தாரின் தங்கை சாஹிராவாக இருக்க, தன் காதலை மறைத்து வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இவ்விருவரும் இணைய உதவும் சத்தார்க்கு ஏற்கனவே அவள்மீது வெறுப்பை உமிழும் சமூகம் இழைத்த அநீதியே ‘தங்கம்’ குறும்படம்.
ஷான் கருப்பசாமி கதை எழுத சுதா கொங்கரா இயக்கிய இக்குறும்படத்திற்கு இருவரும் இணைந்து வசனங்கள் எழுதியுள்ளனர். “சாஹிரா கூட இருட்டுல தனியா போய்டலாம் நான் அப்படி போக முடியாது” என்று சத்தார் கூறும் வசனம் இச்சமூகத்தின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது. தன் தங்கத்தின் மீதான காதல், அதுவே எட்டாகனியாக அவன் காதலின் மீதான ஏக்கம், ஒளிவு மறைவில்லா பேச்சு, கனவை சுமந்த விழிகள், என்று சத்தாராக தன் நடிப்பைச் செவ்வனே வெளிப்படுத்தியிருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். பிற முக்கிய கதாபாத்திரங்களான சாஹிராவாக வரும் பவானி ஸ்ரீ மற்றும் சரவணனாக வரும் சாந்தனு பாக்யராஜ், தங்களின் பங்கைச் சரியாக ஆற்றியிருக்கிறார்கள். இக்குறும்படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் ‘தங்கமே’ பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ஜோமோன் டி. ஜான் இக்குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எண்பதுகளின் காலகட்டத்தைக் காட்டும் காட்சிகளும் கோவை மொழியும் நம்மை படத்துடன் ஒன்றி போக வைக்கிறது. தங்கத்தின் மீதான சத்தாரின் காதல், தங்கம் தங்கம் என அவள் அழைக்க அவர்களின் உரையாடல் ரசிக்க வைத்தாலும் அவளுக்கு நேர்ந்த அநீதி அதற்கு நிகரான வலியையும் மனதில் விட்டு செல்லும் இக்குறும்படம்.
-அனு பாரதி
