நாதியற்ற தெருவில்
நிர்க்கதியான நாங்கள்
நீங்கா இடம்பிடிக்க
காரணம் தேடிப்பாருங்கள்!
ஒவ்வொரு பக்கத்திலும்
உங்களை நீங்களே பார்க்கலாம்!
அன்று!….
எங்கள் ஆடைகளை அவிழ்க்க
சொன்னீர்கள்!
முலைகளை கசக்கினீர்கள்
கீழே தள்ளி ரத்தம் வடிய
புணர்ந்து தீர்த்தீர்கள்!
கூசி நின்ற இந்த சதை பிண்டத்தை
கீறி சிதைத்தீர்கள்!
உங்கள் ஆண்மையின் ஆணவத்தில்
என் மீது மூத்திரம் பெய்தீர்கள்!
நான் எதையும் மறக்கவில்லை
அதை மறைக்கவும் இயலவில்லை!
நீங்கள் அளித்த பரிசு
வடுவின் வேதனை!
சிறிதல்ல அவை
உங்களை சிதைக்க என்னை
செதுக்கிய உளிகள்!
இதோ அதே நாதியற்ற
தெருவில் மீண்டும் நடக்கிறேன்!
இம்முறை எனக்கான உடையோடு
எனக்கான அலங்காரங்களோடு
எனக்கான மக்களோடு!
இன்னும் ஒன்று புதிய வரவாய்!
என்றும் தீரா!
பெரும் சுயமரியாதையோடு!
வானவில் சுமந்து நடக்கிறேன்!
இதுவே எங்கள் போராட்டம்!
இதுவே எங்கள் வன்முறை
இதுவே எங்கள் வெற்றி!
