வேட்டைச்சமூகத்தில் இருந்து நாகரிக சமூகமாக மனிதன் மாறிய காலந்தொட்டு  இன்று வரை, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்குவது என்பது தொடர்கதையாக உள்ளது. பிராமணர்கள் சூத்திரர்களை ஒடுக்குவது, ஆண்கள் பெண்களை அடக்குவது, ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவது என்பது காலம் தொட்டு  நடந்து வருகிறது.

 

இவ்வொடுக்குமுறை அனைத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும் இன்று பல NGO-க்கள்,சங்கங்கள்,நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. அரசாங்கமும் ஒடுக்கப்பட்ட,ஒடுக்கப்டுவோரின் முன்னேற்றத்திற்காக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பல சலுகைகளை வழங்கி வருகிறது.

 

ஆனால், இந்த நவீன காலத்தில் கூட அரசாங்கத்தாலும் கைவிடப்பட்டு, மக்களாலும் நிராகரிக்கப்பட்டு, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, அடிப்படை தேவைகளே பூர்த்தி செய்ய இயலாமல் மிக கடினமான வாழ்க்கை வாழும் LGBTQ+ சமூகத்தினர் குறித்து பொதுவெளியில் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டாள் மிக சொற்பமே.

பிராமணர்>சூத்திரர்>பெண்கள்>LGBTQ+

என்றுதான் இந்திய சமூகம் கட்டமைக்கப் பட்டுள்ளது. இதில் சூத்திரன்(OBC,தலீத்) அரசியல் பேச பலர் உள்ளனர், பெண்களின் நலனுக்காக பெண்ணியம் பேச பலர் உள்ளனர், ஆனால் இச்சமூக கட்டமைப்பிப் அதள பாதாளத்தில் உள்ள பால்புதுமையினர் குறித்து பேசுபவர்கள் மிகச் சிலரே.

 

பால்ய  காலம் என்பது அனைவருக்கும் வசந்த காலமாக இருக்கும், ஒரு மனிதன் தன்னுடைய கடைசி காலம் வரை பால்ய  காலத்தை நினைத்து பார்ப்பது என்பது திகட்ட திகட்ட இனிப்பூட்டும் விஷயமாக இருக்கும். ஆனால் இக்கூற்று LGBTQ+ சமூகத்தினருக்கு பொருந்தாது.

தவுழும் குழந்தை ஒரு வயதுக்கு பின்னர் தத்தி தத்தி நடக்கும்,ஆட்டம் பாட்டம் விளையாட்டு என்று தன் குழந்தை பருவத்தை கடக்கும், அதற்கு பின் வருவது  தான் அழகான பதின் பருவம். இப்பதின்பருவத்திலேயே ஒரு மனிதர் தான் ஒரு Lesbian,Gay,Bisexual,Transgender, CisHet என்பதை உணர்கிறார், Cis-Het என்றால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால்  LGBTQ+-ல் ஏதாவது ஒன்றாக ஒருவர் இருக்குமாயின் மெத்தென்ற பூக்களை மிதித்த வந்த அவர்களின் பாதம், கற்களையும் முட்களையும் மிதிக்க போகிறது என்று அர்த்தம். ஆம், அன்பாக பழகிய நண்பர்கள் பலர் முகம் சுழிக்க ஆரம்பிப்பார்கள்,ஆசிரியர்கள் அவர்களிடம் பழக தயங்குவார்கள், பள்ளி தான் இப்படி என்றால் வீட்டில் பெற்றோர்கள் அதைவிட மோசம், பிள்ளைக்கு என்னவோ நோய் வந்து விட்டது(அ) பேய் பிடித்துவிட்டது என்று எண்ணி ஊர் ஊராக கோவில் கோவிலாக மருத்துவர் மருத்துவராக அழைத்து சென்று அந்த பிஞ்சு நெஞ்சை பல இன்னல்களுக்கு ஆளாக்குவர், எந்த மருத்துவமும் எந்த கோவிலும் இதற்கு தீர்வாகாது என்று தெரிந்த பின்னர்,”உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தேன்”,”என் ராசா” என்று வசனம் கூறிய பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர் என்ன சொல்வார்கள் என்று அஞ்சி வீட்டை விட்டு விரட்டி அடிப்பர்.

“கொடிது கொடிது வறுமை கொடிது, கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை”  என்ற ஒளவையாரின் கூற்றுக்கு இணங்க மிகக் கொடியதாய்  இருக்கும் LGBTQIA மக்களின் வாழ்க்கை, என்ன செய்வது  என்று அறியாமல் தன்னந்தனியாக இருப்பர்,  சரி எதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் யாரும் வேலையும் தர மாட்டார்கள், முக்கியமாக திருநர்களுக்கு. பசிக்கொடுமையால் வேறு வழியின்றி பாலியல் தொழிலுக்கும் பிச்சை எடுப்பதற்கும் சென்று விடுகின்றனர்.பலர், மன அழுத்தினால் தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

 

 

இந்திய அரசியலமைப்பு சட்டம்

Article 21 “தனிநபர் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பது இந்த சட்டப்பிரிவு.இந்த சட்டத்தின் மூலமாக எந்த ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட முடியாது,கூடாது.” என்று சொல்கிறது.

 

ஆனால் பல மதவாதிகள்,அடிப்படைவாதொகள்,பிற்போக்குவாதிகள் Homophobia-வை பரப்புகிறார்கள்.

ஒரு மனிதர் தன்னுடைய பாலினத்தையும் பாலியல் அடையாளத்தையும் தேர்ந்தெடுப்பது என்பது தனிப்பட்ட சுதந்திரம், அச்சுதந்திரத்தை பயன்படுத்த இச்சமூகம் எதிர்க்கிறது.

பால்புதுமையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், இந்திய நாட்டில் பால்புதுமையினரின் நிலைக்கும் காரணங்களாக அமைவது 1.அரசாங்கம் 2.திரைப்படம் 3.மதங்கள் 4.பொதுமக்கள் 5.முற்போக்குவாதிகள்

 

1.LGBTQ+ மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு,சலுகை வழங்க வேண்டும் என்ற பல நாள் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.  அரசாங்கம் நினைத்திருந்தால் பால்புதுமையினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கலாம்,  LGBTQ+ மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்திருக்கலாம்.பல அரசியல்வாதிகளுக்கு  LGBTQ+ மக்கள் குறித்த அடிப்படை புரிதலே இல்லை, இந்நிலையில் அவர்களிடம் எப்படி நம் உரிமைக்கான குரலை ஒலிக்க செய்ய முடியும்?

 

 

2.திரைப்படம்,சினிமா என்பது ஒரு கருத்தை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த மிகப்பெரிய தளமாகும்.அதை நன்மை தரக்கூடியவை யாக பயன்படுத்தியிருக்கலாம், மாறாக LGBTQ+ சமூகத்தினர் மீது அவதூறுகள் பரப்பவும், தவறாக சித்தரிக்கவும், கேலி,கிண்டல் செய்யப்படும் ஒரு நகைச்சுவை பொருளாக காட்டவும் பயன்படுத்துகின்றனர். இது போன்றவற்றை கேட்கும், பார்க்கும் பொதுமக்களுக்கு LGBTQ+ மக்கள் குறித்து தவறான பார்வை ஏற்படுகிறது.

 

 

3.தலித்தாக பிறந்த ஒருவர், ஒடுக்குமுறைக்கு ஆளானால் கிறித்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறி தங்களின் உரிமைகளை பாதுகாத்து கொள்வர். ஆனால் பால்புதுமையினரின் நிலையோ வேறு, உலகத்தில் இருக்கும் எந்த மதமும் பால்புதுமையின மக்களை ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக, பால்புதுமையினரை தீய சக்திகளாகவும்,சாத்தானின் மறுபிறவியாகவும் தவறாக சித்தரிக்கின்றன. LGBTQ+ மக்களின் உரிமைகளுக்காக எழப்படும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் மதங்களை பின்பற்றும் அடிப்படை,பிற்போக்குவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

 

4.திரைப்படங்களாலும் மத நூல்களாலும் மூளை சலவை செய்யப்பட்ட மக்கள் பால்புதுமையினர் சமூகத்தினரை வேற்று கிரக வாசி போல் பார்க்கின்றனர், பால்புதுமையினரும் மனிதர்களே என்று நினைக்க அவர்களின் மனம் ஏனோ தயங்குகின்றது. பால்புதுனையினருக்கு எந்த வேலையும் கொடுக்க மறுக்கின்றனர், அதே நேரத்தில் பால்புதுமையினர் பிச்சை எடுப்பதற்கு பதிலாக உழைத்து வாழலாமே என்று வெட்டி நியாயம் பேசுவர்.

 

5.சமூக நீதி, பெண்ணியம்,தலித் அரசியல் பேசி முற்போக்குவாதி என்று தன்னை கூறிக் கொள்பவர்கள் கூட பால்புதுமையினர் குறித்து பேச தயங்குகின்றனர்.LGBTQ+ சமூகத்தினர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள இவர்கள், ஏனோ மௌனம் காக்கின்றனர். முற்போக்குவாதி என்று கூறிக்கொண்டு பால்புதுமையினருக்கு குரல் கொடுக்காமல் போனது பால்புதுமையினரின் இன்றைய நிலைக்கு பெரிய காரணமாய் அமைந்தது.

 

இந்த சமுக அநீதியை தகர்த்தெறியவும், LBGTQ+ மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பயன்படும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. பால்புதுமையினர் அனைவரும் கல்வி கற்க வேண்டும்,அதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவி புரிய வேண்டும். பால்புதுமையினர் கல்வி கற்பது கடினம் தான், ஆனால் இவ்வொரு விடயத்தை கடந்தோமானால் பால்புதுமையினர்களின்  வாழ்க்கை தரம் உயரும்.கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்த வேண்டும், கல்வி கற்றால் இச்சமூகம் மரியாதையுடன் நம்மை பார்க்கும், நம் பாலினத்தை பார்க்காமல் நம் பாலியல் தன்மையை பார்க்காமல் நம் மனதையும் திறமையையும் பார்ப்பர், யாரையாவது நம்பி  வாழ வேண்டும் என்ற நிலை மாறும்.. நாமும் இச்சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழலாம். அடுத்த Pride walk-ல் வண்ண வண்ண பலூன்கள், கொடிகள்,குடைகள், “Love has no gender”,” Love is Love” போன்ற வாக்கியங்கள் எழுதிய பதாகைகளுடன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சுயமரியாதையுடன் வீறு நடை போடலாம்.

 

 

 

 

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன