நமக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பொருள், ‘இது தான் வேணும்’னு ஆசப்பட்டு, அடம்பிடிச்சு வாங்கின ஒரு பொருள், பல நெருக்கடியான காலகட்டங்கள்லயும் நம்ம கூடவே நமக்காகவே இருந்த அந்த பொருள காலப்போக்குல தொலச்சுருப்போம், இவ்வளவு காலம் நம்ம பக்கத்துல/ நம்ம பார்வைலதான் அது இருக்குன்றத மொத்தமா மறந்துருப்போம். ஆனா, திடீர்னு ஒரு நாள் யாரோ ஒருத்தர் வந்து அந்த பொருளுக்கு உரிமை கொண்டாடும் போது /அந்த பொருள் மாதிரியே வேற ஒன்னு இன்னொருத்தர் கிட்ட இருக்குறத நாம பாக்கும்போது ‘ச்ச..நம்மகிட்டயும் இதே மாதிரி ஒரு பொருள் இருந்துச்சே, இப்ப இல்லயே.. எங்க போச்சு!?’னு மனசு யோசிக்கும்.. அவ்ளோ நாள நாம மறந்து/ தொலச்ச அந்த பொருள திரும்ப ஒரு பதட்டத்தோட தேட ஆரம்பிக்கும்.
அந்த தேடல்…
அந்த தேடல் நேரத்துல நமக்குள்ள இருக்குற தவிப்பும்.. ‘ஒரு வேல அந்த பொருள நிஜமாவே தொலச்சுட்டோமோ’னு யோசிக்கும் போது நமக்குள்ள வர ஏமாற்றமும், வலியும்…. அந்த பொருள தேடிட்டு இருக்குற நேரத்துல அது நமக்கு தர நியாபகங்களும்… இறுதியா நம்ம மொத்த தேடலோட முடிவுள அந்த பொருள் கிடைச்சதும் வர அளவில்லாத சந்தோஷமும்… அதவிட கிடைக்காம போனா நமக்கு வர மிகப்பெரிய ஏமாற்றமும், வலியும் இருக்கே…!! யோசிக்கும் போதே கஷ்டமா இருக்குல?!
நம்ம கூடவே இருக்குறதுனால பல அற்புதமான விஷயங்களோட மதிப்ப நாம உணர்வதே இல்ல.. இது பொருளுக்கு மட்டுமில்ல, நம்ம கூட இருக்க மனுஷங்களுக்கும் பொருந்தும்… உதாரணமா சொல்லணும்னா உங்க வீட்ல, இப்ப உங்க பக்கத்துல இருக்க அம்மாவயோ அப்பாவயோ நாம இப்படிதான் பல நேரத்துல கவனிக்காம இருப்போம். நமக்கு எப்பவும் நம்ம அம்மா, அப்பாவோட முகம் நாம ஸ்கூல் படிக்கும் போது பாத்த ஒரு முப்பது வயசுக்குள்ள இருக்குற முகமா தான் நம்ம மனசுல பதிஞ்சு இருக்கும். நாம எவ்ளோ வளந்தாலும் நம்ம மனசுல இருக்குற இளமையான முகத்துல தான் நம்ம அம்மா அப்பாவ பாத்துட்டு இருப்போம், அவங்களுக்கு முதுமை வரத நம்மளால அவ்வளவு சீக்கிரம் உணர முடியாது. அதுனாலதானோ என்னவோ தூரத்து சொந்தகாரங்க, இல்லனா ரொம்ப நாள் கழிச்சு பாக்குற நண்பர் ஒருத்தர் நம்மகிட்ட வந்து ‘உன் அம்மா ஏன் மெலிஞ்சு இருக்காங்க உடம்பு சரியில்லையா?’, ‘உன்னோட அப்பா இன்னுமா வேலைக்கு போறாரு..? இன்னும் சர்வீஸ் முடிய எத்தன வருஷம் இருக்கு?’னு கேக்கும் போது அந்த கேள்விக்கு ஒரு பதில சொல்லிட்டு சாதாரணமா கடந்து வந்துடுவோம். ஆனா, அந்த கேள்விக்குள்ள இருக்குற விஷயம் நம்ம மண்டைக்கு உறைக்கவே உறைக்காது. அவங்களுக்கு வயசாகுதுனு நம்ம மனசு எப்பவுமே ஏத்துக்காது.
சின்னவயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்ம கூடவே இருந்து பாத்து பாத்து நம்மள வளத்தவங்கள ஒரு நாள் நீங்க கவனுச்சு பாருங்க.. உங்க மனசுல இருக்க முப்பது வயசு முகம் இப்ப அவங்க கிட்ட இருக்காது. தலமுடி நரச்சு இருக்கும், கன்னம் சுருங்கி இருக்கும், நடைல கொஞ்சம் மாற்றமும் தளர்வும் இருக்கும், உக்காந்து எந்திரிக்கும் போது ஒரு பெரு மூஞ்சு இருக்கும், முகம், கைகள்ல இருக்க தோல் கூட சுருக்க ஆரம்பிச்சு இருக்கும்… ஆமா.. அவங்களுக்கும் வயசாகிட்டு இருக்கு.
சமீபத்துல நண்பர் ஒருத்தரோட அப்பா தவரிட்டாரு.. அப்ப நண்பரோட அழுகைல ஒரே ஒரு விஷயம்தான் இருந்துச்சு.. ‘கடசி வரைக்கும் அவருக்கு நா எதுவுமே பண்ணல’ணு சொல்லி சொல்லி அழுதாரு.. இத எழுதுறதுக்கு முக்கியமான காரணமும் அதுதான். நம்ம கூடவே இருக்குறதுனால அவங்கள நாம கவனிக்க மறக்குறோம். சில இடங்கள்ல பெத்தவங்களும் கூட பிள்ளைகள சரியா கவனிக்காத சூழல் இங்க நிறைய இருக்கு. பிள்ளைக படிப்பு, எதிர்காலம்னு பாத்து பாத்து பண்ற அப்பா அம்மாக்கள்கூட பிள்ளைகளோட உணர்வுகள புரிஞ்சுக்குறது இல்ல. சிலர் பிள்ளைகள ‘கண்டித்து வளக்குறேன்’னு சொல்லி பெத்தவங்க மேல ஒரு பயத்த உருவாக்கி வச்சுருவாங்க. அதனாலயே பிள்ளைகள் தங்களோட மனசுல தோணுற எதையும் வீட்ல இருக்குறவங்ககிட்ட சொல்லமுடியாத சூழல் இங்க உருவாகுது. பிள்ளைய டாக்டர்/ இஞ்சினியரிங் போன்ற பெரிய படிப்ப படிக்க வைக்குறது மட்டும் பெத்தவங்க கடமை இல்லயே.!? பிள்ளைகளோட உணர்வுகள புரிஞ்சுக்காம, அந்த உணர்வுகளுக்கு மதிப்பு தராம, அவங்க மனநிலையையும், வளர்ச்சியையும் அக்கறையோட கவனிக்காதவங்க எப்படி நல்ல பெற்றோர் ஆக முடியும்?? இத பத்தி சொல்லணும்னா பக்கம் பக்கமா நிறைய எழுதலாம்.
பொதுவா சமூக வலை தளங்கள் வழியா அறிமுகமான, இல்லனா புதுசா உங்க நட்பு வட்டத்துல சேர்ந்த ஒருத்தர் உங்களுக்கு மெசேஞ் பண்ணும்போது “நல்லா இருக்கியா? சாப்டியா?”னு ஆரம்பிச்சு.. “உடம்ப பாத்துக்கோ! குட் நைட், டேக் கேர்”னு சொல்லி முடிக்குற வரைக்கும் உங்க பேச்சுல இயல்பாகவே ஒரு அக்கறையும், கனிவும் இருக்கும். ஆனா அதே அக்கறையோட நாம ஏன் நம்ம கூட இருக்குற, நமக்காக இருக்குற மனுஷங்கள அணுகுறது இல்ல.?!
நான் முதல்ல சொன்ன மாதிரிதான்.. ஒரு பொருள் நம்மகிட்ட இருக்கும்போது அத கவனிக்க மறந்துட்டு, அது இல்லாதப்போ ‘ஐயோ.. தொலச்சுட்டேனே’னு புலம்புறதுல ஒரு பயனும் இல்ல.. முதல்ல உங்க பக்கத்துல இருக்குற, உங்களுக்காக இருக்குறவங்கள ஒரு நிமிசம் பாருங்க, அவங்களுக்காக உங்க நேரத்துல கொஞ்சம் ஒதுக்குங்க.. அது உங்க அம்மாவா, அப்பாவா, கனவனா, மனைவியா, உங்கமேல அதிக அக்கறை இருக்குற நண்பரா, உங்க வீட்டு நாய்குட்டியா கூட இருக்கலாம்.. அப்ப அப்ப கொஞ்ச நேரத்த அவங்களுக்கு ஒதுக்கி அவங்களையும் கொஞ்சம் அக்கறையோட பாத்துக்கோங்க..
தலைல சீப்ப வச்சுட்டு வீடு முழுக்க தேடிட்டு இருப்போம்.. திடீர்னு வீட்ல இருக்க ஒருத்தர் ‘என்ன தேடுறீங்க?’னு கேக்கும் போது.. ‘சீப்ப இங்கதா எங்கயோ வச்சேன்.. எங்கவச்சேன்னு தெரியல’னு புலம்புவோம்.. அவரு ‘உங்க தலைல தான் இருக்கு’னு சொல்லும் போது ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சுட்டு அந்த சீப்ப திரும்ப கைல எடுப்போம்ல…. இந்த பதிவும் அப்டிதான். நீங்க பக்கத்துலயே வச்சுட்டு மறந்த/ மறந்துட்டு இருக்குற உங்களுக்கு சொந்தமானவங்கள, உங்கள பிடிச்சவங்கள நீங்க தொலச்சுடாம கொஞ்சம் அக்கறையோட பத்தரமா பாத்துக்கோங்கனு சொல்றதுக்குதான் எழுதுனேன்.. பாத்துக்கோங்க..💕
நன்றி
வணக்கம்
– மதுரை கார்த்திக்