பேராளுமை கஸ்ரோ பொன்னுத்துரை
குண்டு துளைத்த சுவர்களும், ரத்தத்தை நீர் போன்று பார்த்து சலித்த பல வீடில்லா மக்களும், முட்கம்பி வேலிக்குள் இருந்து உலகத்தை ரசிக்கும் குழந்தைகளும், என்றாவது நாமும் மனிதர்கள்தான் என எண்ணுவார்கள் என்று காத்திருக்கும் கைகால் இழந்த வீரர்களும், நமது இன மக்களுக்கு அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கும் பல அமைப்புகள் இருக்கும் தேசத்தில் உலகமே தள்ளி வைக்கும் LGBTQIA+ மக்களை பற்றிய புரிதல் இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு தான். ஆனால் அங்கு வசிக்கும் குயர் மக்களின் நிலைப்பாட்டை உறுதி செய்து அவர்களை பற்றி மக்களிடையே புரிதல் கொண்டு வந்து சேர்ப்பதும் இங்கே அவசியம் தானே.
இலங்கை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட விலங்கு மருத்துவரான கஸ்ரோ பொன்னுத்துரை அவர்கள் படிக்கும் காலத்திலிருந்து பல சமூக அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு பெண் உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைக்க செயல்பட்டு வந்தவர். ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு உதவியாக வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்.
குயர் மக்களின் வாழ்வில் இலங்கை, யாழ்ப்பாணம் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது வருங்காலத்தில் குயர் மக்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற நிலைப்பாட்டை உருவாக்க பாடுபட்டு வரும் நமது விலங்கு மருத்துவர் கஸ்ரோ அவர்கள் குயர் மக்களின் வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
ஆங்கிலமும் சிங்களமும் பேசும் குயர் மக்களுக்கென பல தொண்டு நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாட்டினை தமிழ்பேசும் மக்களிடையே கொண்டு சேர்க்க ஒரு விழிப்புணர்வு நிறுவனம் கண்டிப்பாக தேவை என்று எண்ணம் கொண்டு இலங்கை, யாழ்ப்பாணத்தில் அதனை தொடங்கி குயர் மக்களை பற்றி பிற மக்களுக்கு புரிய வைக்கின்றார் நமது விலங்கு மருத்துவர் கஸ்ரோ. தமிழ் மக்களின் வருங்கால சிந்தனை எந்த ஒரு குயர் மக்களையும் பாதிக்காத அளவுக்கு யோசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
குயர்மக்களைப் பற்றி அங்குள்ள தமிழ் மக்களுக்கு மிகச் சிறந்த முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் வருடந்தோறும் மற்ற இணை அமைப்புகளோடு கலந்துகொண்டு சுயமரியாதை மாதத்தினைக் கொண்டாடி வருகிறார். இது மக்களுக்கு தங்களின் இருப்பிடத்தை இருப்பையும் மற்றவர்களுக்கு தெரிவிக்க நடைபெறும் ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வாகும். அதனை வருடந்தோறும் நடத்தி வரும் நமது விலங்கு மருத்துவர், தமது அமைப்பில் உயர் மக்களுக்காக மட்டும் செயல்படாமல் இந்த கொரோனோ காலங்களில் அனைத்து மக்களுக்கும் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து அடுத்தவர் மனநிறைவோடு பெற்ற சந்தோஷத்தை கொண்டு வாழ்ந்து வருகிறார்.
பல தொண்டு நிறுவனங்களில் இணைந்து மக்களுக்காக பணியாற்றிவரும் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கஸ்ரோ பொன்னுத்துரை அவர்களை பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறது.
-அருண் தர்ஷன்