நான் ஒரு மென்மையான குழந்தையாய் இருந்தேன். நல்ல பிள்ளை என்ற பெயர் பெற்றேன். என் அம்மாவிற்கு நான் செல்லப்பிள்ளை. எனக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரன் உண்டு. என் அம்மா எனக்கு என் சகோதரியின் உடைகளை அணிவித்து அழகு பார்ப்பாள். என்னுள் பெண்மை இருப்பதை நான் அறிந்தேன். நாளடைவில் என்னை மீறி நான் என் சகோதரியின் உடைகளை விரும்பி அணிய ஆரம்பித்தேன். முதலில் விளையாட்டாக பார்த்த என் அம்மா நாளடைவில் என்னை கண்டிக்க ஆரம்பித்தாள். பட்டாம்பூச்சியாய் பறந்த என் இறக்கைகளை மடித்து சமூகம் சொல்லும் ஆண் பெண் விதிகளை என் மீது திணித்தாள்.
வலியின் உச்சத்திற்கு சென்ற நான் என் வலிகளை வெளியில் கூறாமல் நல்ல பிள்ளை என்ற வார்த்தைக்காக என் ஆசைகளை மறைக்க ஆரம்பித்தேன். இருப்பினும் ஒரு சில தருணங்களில் என் பெண்மை என்னை மீறி வரும்.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை என்னை நான் ஒரு ஆசிரியை போல பாவித்து விளையாடுவேன். ஒரு துண்டை என் தலையிலும் மற்றொரு துண்டை மடித்து முந்தி போல் என் தோளில் போட்டு என் கனவு உலகில் ஆசிரியை ஆகி விடுவேன் .
இதை ஒரு நாள் என் அம்மா கவனித்து என்னை அவ்வாறு செய்ய கூடாது “நீ ஒரு ஆண்” என்று அன்பாய் கூறினாள். அன்பாய் கூறியதால் என்னவோ நான் அதை நிறுத்திவிட்டேன்.
பள்ளியில் என்னை மீறி என் சக தோழர்கள் மீது அலாதியான அன்பு வந்தது. பெண் தோழிகளுடன் பழகுவேன் ஆனால் ஆண்கள் மீதே ஈர்ப்பு இருந்தது .
நான்காம் வகுப்பு முதல் என் வாழ்க்கை கடினம் ஆனது. படிப்பில் ஆர்வம் இல்லை, அதற்காக என்னை வீட்டில் வாட்டி வதைத்தார்கள். மேலும் என் பெண்மையை என் அப்பா கண்டிக்க ஆரம்பித்தார். இதனால் என்னுள் இருந்த பெண்மையை நான் ஒதுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் நான் அதை தொலைத்து விட்டேன்.
வருடங்கள் ஓடின, ஒரு ஜடம் போல் என் வாழ்க்கை பயணம் சென்றது இருப்பினும் ஆண்கள் மீதே எனது உணர்வுகள் இருந்தன. எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பர்கள் அவர்களின் பாலீர்ப்பு பற்றி பேசி கொண்டிருந்தார்கள். என்னிடம் என் நண்பன் “மச்சி உனக்கு எந்த பொண்ணு மேல டா க்ரஷ் (crush)” என்று கேட்டான் . ஒரு நிமிடம் என் மனம் ஸ்தம்பித்து போனது. நான் ஏதும் கூறாமல் “மேம் (Mam) கூப்பிட்றாங்க என்று மழுப்பி விட்டேன்”. வீட்டிற்க்கு சென்று இதை பற்றி யோசித்தேன் ஆயினும் என் படிப்பில் கவனம் சென்றதால் நாள் போக்கில் இதை மறந்து விட்டேன்.
ஒன்பதாம் வகுப்பு ஆரம்பித்தது, என் வாழ்க்கையில் நான் தொலைத்த பெண்மை என்னுள் துளிர ஆரம்பித்தாள். என் தமிழ் ஆசிரியை அணிந்து வரும் பட்டு புடவை எனக்கு மிகவும் பிடித்தது. அதை அணிய வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தது. அது மட்டும் இன்றி அவர் அணிந்து வரும் கம்மல், வளையல் மற்றும் செயின் (chain) எனக்கு பிடித்தது. அதை நான் அணிந்து களிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் துளிர்ந்தது. வீட்டில் என் அக்கா வைத்திருக்கும் பிரேஸ்லெட் (bracelet) அணிந்து மகிழ்ந்தேன். ஹேண்ட்பேக் (Handbag) அணிந்து என்னை நானே ஒரு பெண் போல கற்பனை உலகில் ஜொலித்தேன் .
பதினாறாம் வயதில் இருந்து எனக்கு மார்பகம் வளர ஆரம்பித்தது. கண்ணாடியில் அதை பார்க்கும் போது பேரானந்தம் அடைவேன். என் துளிர்விட்ட பெண்மையை வெளி உலகிற்கு நான் காட்டவே இல்லை. என் அறையில் உள்ள நான்கு சுவற்றுக்கு மட்டுமே தெரியும்.
நாட்கள் இவ்வாறாக ஓட நான் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்ல தயார் ஆனேன். கல்லுரியில் என் சக தோழர்கள் என் மார்பகத்தை கசக்கி என்னை பெண்கள் முன்பு ஏளனம் செய்வார்கள்.என் உடலை நான் வெறுக்க ஆரம்பித்தேன், இதன் விளைவால் நான் பட்டினி கிடக்க ஆரம்பித்தேன் முடிவில் அது என்னை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது. வீட்டிற்கு வந்த பின்பு நான் யார் என்ற தேடல் என்னுள் எழுந்தது. முதலில் என்னை நான் தன்பால் ஈர்ப்பாளர் என்று அறிந்தேன். அதை ஏற்று கொள்ள கடினமாக மற்றும் குற்றவுணர்ச்சியாக இருந்தது.
இதை பற்றி இணையத்தில் தேட “ஜான் கெவின்” என்ற நண்பரை சந்தித்தேன். என்னுள் தொலைந்த பெண்மையை வெளிகொண்டு வர அவர் உதவி புரிந்தார். மேலும் LGBTQ சமுகம் பற்றி தெரிந்து அவர்களுடன் பயணிக்க ஆரம்பித்தேன். சுயமரியாதை பேரணி (Pride Walk) என்ற ஒன்று நடப்பதை அறிந்து அங்கு வரும் பால் கடந்த அழகு பதுமைகளை பார்த்து வியந்தேன். என்னுள் ஒரு குரல், நானும் அவர்களை போல அழகு பதுமையாய் வளம் வர வேண்டும் என்று சொன்னது.
2024 சுயமரியாதை பேரணியில் என் நண்பர் அவரது திருநங்கை ஆசிரியை “மார்கரெட் மகிழினி” -யை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருடன் பல நாட்கள், பல மணி நேரங்கள் என்னுடைய தொலைந்த பெண்மை மற்றும் அவரது வாழ்க்கையில் அவர் பெண்மை உணர்த்த தருணத்தை பற்றி கதைப்போம்.
2025 சுயமரியாதை பேரணி வந்தது, இந்த முறை கண்டிப்பாக எனக்கு பிடித்த உடையில் செல்ல விருப்பப்பட்டேன். உடைகளை அமேசான்-இல் (amazon) வாங்கி என் வீட்டில் ஒளித்து வைத்தேன். நாளும் நெருங்க என்னால் உடைக்கு ஏற்ப அணிகலன்களை வாங்க முடியவில்லை. இதனால் விரக்தியில் நான் அந்த கனவை துறந்தேன். இருப்பினும் என் அன்பு தாய் மகிழினி என்னை ஊக்குவித்து அவருடைய அணிகலன்களை கொடுத்து என்னை வரவழைத்தார். எனக்கு அவருடைய ப்ராவையும் கொடுத்தார். பின்பு அன்பாய் என்னிடம் “இந்தா மீனு இத போட்டு பழகு” என்று கூறினார். மேலும் ஆசையாய் எனக்கு மேக்கப் (Make-up) போட்டு விட்டார். எல்லா ஒப்பனைகளும் முடிந்து கண்ணாடியை பார்த்து நான் பூரித்து போனேன். என்னுள் தொலைந்த பெண்மை என் கண்முன்னே நிற்கும் போது கண்ணில் கண்ணீர் சொட்டியது. பரவச நிலைக்கு சென்றேன். பத்து நிமிடம் என்னை நான் கண்ணாடியில் பார்த்து ரசித்தேன். சுயமரியாதை பேரணி நடக்கும் இடத்திற்கு காரில் கிளம்பினோம். என் தாய் மகிழினி என்னை இவ்வாறாக கடிந்தார் “ஏண்டி காலைலயே சொல்லிருந்தா டிரஸ்கு மேட்சிங் ஆ நான் வாங்கிருப்பேன்ல டீ“. நான் என் நண்பர்களிடம் எனக்கு கிளிப் ஆன் (Clip-on) கம்மல் வாங்கும் படி கோரிக்கை வைத்தேன். இதை கவனித்த ஓட்டுநர் “ஓரமா பேன்சி ஸ்டோர் (fancy store) இருக்கு நிப்பாட்டவா என்றார்” நானோ வேண்டாம் பேரணிக்கு நேரம் ஆகிவிட்டது என்றேன். மனதில் அவர் வைத்த அன்புக்கு மகிழ்ந்தேன். பேரணிக்கு சென்றோம், அங்கே என் அன்பு உறவுகள் என்னை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். வீட்டில் நான் சுயமரியாதை பேரணி சென்றது தெரிய கூடாது என்பதற்காக முகமூடி அணிந்தேன். நான் அந்த உடையில் நடக்க ஆரம்பித்த பொது என்னுள் அளப்பறியா சந்தோசம். என் அன்பு தோழி ஒருவர் “என்ன மீனு கைலயே பிடிக்க முடில பட்டாம்பூச்சி போல பறந்து போற” என்று கூறினார். நான் அவளிடம் “பல வருடங்கள் ஆசை இன்று தான் நிறைவேறியது” என்றேன் .நான் நடக்க நடக்க என்னுள் தொலைந்த மீனாட்சி எனக்கு நான் மீண்டும் வந்து விட்டேன் என்று உணர்த்தினாள்.
பேரணி முடிந்து என் தாயுடன் அவர் வீட்டுக்கு சென்றேன். ஒப்பனைகளை களையும் போது எனக்குள் தாங்க முடியாத வலி. மீண்டும் நான் எப்பொழுது “மீனா” வாக வாழுவேன் என்று என் உள்ளம் ததும்பியது .
இந்த பேரணியில் நான் தொலைத்த என் பெண்மையை மீட்டேன், இனி ஒரு போதும் இதை நான் தொலைக்க மாட்டேன். நல்ல பிள்ளை என்ற சர்டிஃபிகேட்க்கு “Certificate” பதில் நான் நானாக வாழ விரும்புகிறேன்.
மீண்ட பெண்ணாக என் வாழ்க்கை பயணம் இனிதே ஆரம்பித்தது, முகமூடிகளை களையும் காலமும் நெருங்கி கொண்டு இருக்கிறது ……..
அன்புடன்,
மீனாட்சி கிருஷ்ணன்

