காதலின் அழகியலைப் பற்றிக் கதைப்போம். பெண் ஓரினக் காதலர்கள் வாரமாம். நாம் என்றும் காதலையும் காதலர்களையும் செரித்துத் திளைக்கும் கூட்டமாயிற்றே. இரு பெண்களுக்குள் துளிர்க்கும் காதலானது ஒருவித கிறுக்குத்தனமான, அழகான, விலைமதிப்பற்ற ஒன்று. அவ்வித உணர்வை வார்த்தைகளுள் அடக்குதல் என்பது இயலாத காரியம்.
இருபெண்களைப் பற்றிப் பேசும்போது, தம்மைப் பெண்ணாய் உணரும் அனைவரும் பெண்டிரே, எதிர்பாலீர்ப்பு பெண்ணாய் இருப்பினும், திருநங்கையாய் இருப்பினும். Queer எனப்படும் பிறப்பால் பெண் அல்லாத, மனத்தால் தன்னைப் பெண்ணென்றுணர்ந்த ஒருவருக்கு மற்றொரு பெண் மேல் வரும் காதலும் ஓரினக் காதல் என்று கொள்வதே தகும்.
“நான் ஒரு பெண். தன்பாலீர்ப்பாளர். அதனால் நான் ஆணாக விழைகிறேன் என்றர்த்தமில்லை. ஆண்களை வெறுக்கிறேன் என்றுமில்லை. அதன் அர்த்தம் என்னை பெண்ணாய் உணர்ந்து, இன்னொரு பெண்ணின்பால் ஈர்க்கப்பட்டவள் என்பதே.”
ஒரு பெண்ணிடம் மற்றொரு பெண்ணை காதலிப்பதைப் பற்றி கேட்போமேயானால், இதுவே அவர்கள் பதிலாக இருக்கும்: “நாங்கள் கற்பனைக்குள் அடங்காதவர்கள். மரங்களைப் போல வாழ எத்தனிப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் சுயம்பாய் பற்றிப் படர்ந்து வளரும் காட்டுச்செடிகள் நாங்கள். மேனியில் காயங்கள் தோய்ந்திருப்பினும், குன்றாத வியப்போடு பூக்கும் ஆற்றல் விதைக்கப்பட்டுள்ளது எங்களுள்”. அவர்கள் காதலில் விழுதல் பாலினத்தைப் பார்த்தன்றி மனித மனத்தையுணர்ந்து, அந்த மனிதர் பெண்ணாய் அமைந்துவிடுகிறார். அவ்வளவே. ஏனெனில் அவ்வழியே அவர்கள் முழுமையடைகின்றனர். அவர்கள் கண்கள் சந்திக்கும் அப்பொழுது மட்டுமே வயிற்றுள் பல காலமாய் மறைந்திருந்த பட்டாம்பூச்சி உயிர்ப்பெற்று சிலிர்ப்பூட்டுகிறது.
செலி ரைட் என்றோ சொன்னார் “என்னால் நம்ப முடியவில்லை. இப்படியொரு பெண் என்னுடன் இருப்பது அளவிட இயலா மகிழ்ச்சியைத் தருகிறதெனக்கு. நாட்கள் நகர, சுதந்திரத்தினழகு தன்னைத்தானே சிறுகச்சிறுக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது”. அவர்கள் கண்களுக்குக் காதல் அழகு. அவர்கள் கண்களூடாக காண விழையுங்கள். அதையன்றி நாமென்ன செய்கிறோம்,
இகழ்கிறோம், கொல்கிறோம்.
மீளமுடியா பயத்துக்குள்ளாக்குகிறோம்,
தனிமைக்குள் தள்ளுகிறோம்,
சிறுபான்மை மனவழுத்தம் வேறு அவர்கள் சிறுபான்மை அல்லர், அல்லவே அல்லர்.
என்றேனும் அவர்களை அறிய விழைந்ததுண்டா, உங்கள் சுற்றம் அவர்களை தாழ்த்திப் பேசும்போது அதை எதிர்த்ததுண்டா இல்லவே இல்லை. ஏதோ ஓரிருவர் அதை விளக்க முயன்றாலும் காதைப் பொத்திக்கொள்கிறோம், ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதைப் போல. தன்பாலீர்ப்பாளர் மீதோ, இருபாலீர்ப்பாளர் மீதோ இருக்கும் பயத்தையோ, உமிழப்படும் வெறுப்பையோ என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதைப்பற்றி எவ்வளவோ யோசிப்பினும் அதை நியாயப்படுத்த முடியவில்லை என்னால். என்னைப் பொறுத்தமட்டில் நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள் என்பது அவசியமற்றது. ஆணோ, பெண்ணோ யாராயினும் நீங்கள் காதலிப்பது மட்டுமே முக்கியம். அதுமட்டுமே.
அவர்கள் சொல்வர், இது வாழ்க்கையின் சிறு “பகுதி” அல்லது இது மனநோய். அதுவும் அல்லவோ, நீ இன்னும் உனக்குப் பொருத்தமான் ஆணை கண்டடையவில்லையென்று.
இல்லை, ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பயணப்பாதையும் வேறு. நீர் ஒரு பெண்ணின் பால் காதல் வயப்பட்டால், அது அவ்வளவே. அதுவே உண்மை. அதை பலர் நோயாகக் கருதுவது அவர்களைப் பற்றி விவரிக்கிறதேவையன்றி தன்பாலீர்ப்பை பற்றியன்று.
என்னின் தேர்வுகளும் ஆசைகளுமே உங்களுடையதிலிருந்து வேறுபடும்போது, ஒருவர் மீதான என்னுடைய ஈர்ப்பு எப்படி ஒத்திருக்கமுடியும், அவ்வாறு எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
சரி ஒரு சிறுகதை கேட்போம்:
இருவர் சமுத்திரத்தில் ஒரு கப்பலில் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவன் இம்மகாசமுத்திரத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்வதாக இன்னொருவனிடம் கூறினான். மற்றொருவன் அப்படியொன்றும் என் கண்களில் புலப்படவில்லையே. ஆகையால் நீ சொல்வதை என்னால் நம்பவியலாது என்றான். நான் என்ன செய்தால் நீ ஒப்புக்கொள்வாய் என்றான் முதலாமவன். மற்றொருவன், நம் பீப்பாய்க்களில் ஒன்றில் நாம் சமுத்திரத்திலிருந்து தண்ணீரிரைப்போம், அதில் நீ சொன்னதுபோலிருந்தால் நான் ஒப்புக்கொள்கிறேன். அதன்படி அவர்கள் தண்ணீரிரைத்தனர். அதில் மீன்களை மட்டும் கண்டனர். அதனால் இரண்டாமவன் இச்சமுத்திரத்தில் மீன்களைத் தவிர வேறு எந்த உயிர்களுமில்லை என்று சொன்னான்.
“அம்முழு சமுத்திரமும் இப்பீப்பாய்க்குள் அடக்கமோ”
அதுபோலவே இவ்வுலகமும் ஒரு பெருஞ்சமுத்திரம். அதில் நாம் எதிர்நோக்கும் அனைத்தும் ஒரு பீப்பாயளவே. அள்ளிப்பருக சமுத்திரம் உள்ளது. தயவுகூர்ந்து பிறர் வெளிப்படுத்துவதை செவி கொடுத்து கேட்கவாவது செய்யுங்கள். அப்பாவிகளை ஆழ்பயத்திற்குள்ளாக்காதீர்கள்.
நன்றி
வணக்கம்
-வள்ளி,
பரதன் (மொழிபெயர்ப்பு)