பிறரை முன்னால் செல்ல வைத்து, அவர்களைப் பின்னால் பழிக்கும் இச்சமூகம் LGBTQ+ சார்ந்த மக்களை மட்டும் அவர்கள் கண்முன்னே பழிக்க எப்பொழுதும் கவலை கொள்ளாது. இப்படியிருக்க தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன், வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, சென்னைக்கு வந்து பல இன்னல்களை சந்தித்து, இன்று எழுத்தாளர் ,கவிஞர், பேச்சாளர் என பன்முக திறமை கொண்டு சமூகத்தில் தனித்துவத்தோடு நின்ற திருநங்கை மோகனா அவர்களை பால் மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறது..
இவரின் தன்னம்பிக்கையின் அளவு சிறுவயதில் இருந்தே பிரமிக்க வைக்கிறது.சிறுவயதில் இருந்தே வார்த்தைகள் பேச திக்கும் இவருக்கு, மேடையேறி பேச ஆரம்பித்தால் வார்த்தைகள் தடுமாறாது.அதற்கு அவரின் தன்னம்பிக்கை மட்டுமே காரணம்.வேறுவழியின்றி வேலை கிடைக்காமல் கைதட்டும் இவர்களை, ஊர்கூடி கை தட்டி பழிக்க, இச்சமூகம் எப்பொழுதும் தயாராகவே இருக்கும். அப்படிப்பட்ட சமூகத்திலும், இவர்களின் வேலைவாய்ப்பிற்கும், வாழ்வாதாரத்திற்கும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.MSC பட்டப்படிப்பை முடித்திருக்கும் மோகனா அவர்கள் பா.லி.கா லைட்டிங் நிறுவனத்தில், ஸ்டாக் அசிஸ்டன்டாக வேலை பார்த்து வருகிறார். பல தொண்டு நிறுவனங்களோடு சேர்த்து சமூகப்பணி செய்துவருகிறார்.பத்து வருடங்களாக தோழி மற்றும் சகோதரன் என்கிற திருநங்கை அமைப்போடு சேர்ந்து LGBTQ+ மக்களுக்கு உதவி வருகிறார்.பல திருநங்கைளின் வேலைவாய்ப்பிற்க்கு விளக்கேற்றி வைத்துள்ளார். தன்னைப்போல் பிறரை இழி சொல்லுக்கு ஆளாக்ககூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக நிற்கிறார்.
எழுத்தே சமூக மாற்றத்திற்கான ஒரு முதற்படியாக அமையும்.சமூக அவலங்களை தனது எழுத்துக்கள் மூலம் இந்த சமூகத்திற்கு உணர்த்தி வருகிறார். கவிஞரான இவர், பல தலைப்பின் கீழ் எண்ணற்ற கவிதைகள் படைத்துள்ளார்.திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வும் கொடுமையான பல வலிகளும், அவமானங்களும் நிறைந்ததாகவே இருக்கும். வலிகளை உணர்ந்தவர்கள் அதே வலியை பிறருக்குத் தர விரும்பமாட்டார்கள். பொது
சமூகம் பல வலிகளை இவருக்கு தந்து இருந்தாலும் அவர்கள் மீது வெறுப்படையாமல் உலகில் தனது இடத்தை அவர்களுக்கு புரியும் வரை உணர்த்த முயற்சித்துவருகிறார். மேலும் அதே வலி பிறருக்கு கிடைக்காமல் இருக்க தனது கவிதைகள் மூலமும் எழுத்துக்கள் மூலமும் பொது சமூகத்தை ஒரு முற்போக்கு சமூகமாக மாற்ற முயற்சித்து வருகின்றார்.கலைத்துறை மற்றும் சமூக சேவைகள் சாதனைக்களுக்காகஅம்மா விருதில் தொடங்கி, இதுவரை 100 விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். சான்றிதழ்களும், விருதுகளும் அவரை இன்னும் சமாதானப் படுத்தவில்லை. அவர் திருநங்கை சமூகத்திற்கு கூற வருவது, “தன்னம்பிக்கையை மட்டும் மனதில் கொண்டு இறுதிவரை முயற்சி செய்யுங்கள், அந்த முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்! எத்தனை நிறுவனங்கள் வேண்டுமானாலும் ஏறி இறங்குங்கள், ஒரு வேலை வாய்ப்பை பெறுங்கள்” என திருநங்கைகளின் குரலாக ஒலிக்கிறார்.
என்றும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும், இன்னல்களையும் துயரமாக எண்ணாமல் அதனை உங்களின் வாழ்க்கைக்கு தூண்டுகோலாக நினைத்து முன்னேற முற்படுங்கள் என்றும் அதற்கு முன்னுதாரணமாக வாழும் திருநங்கை மோகனா அவர்களை பேராளுமை என்று அழைப்பதில் பாழ்மணம் மின்னிதழ் பெருமிதம் கொள்கிறது.
திருநங்கைகளைப் பற்றி நமக்குள் உருவாகியிருக்கும் அச்சத்தையும், கூச்சத்தையும் தவிர்த்து அவர்களின் வாழும் சூழலுக்கு, நம்மால் இயன்ற உதவியை செய்ய முற்படுவோம். இதுவரை அவர்களை ஒதுக்கியதை இனியும் தொடராமல், மனித சமுதாயத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் உருவாக நம்மால் இயன்ற செயல்களில் களமிறங்குவோம்.
நன்றி
வணக்கம்
– அருண்