இது சரியாக எனக்கு பத்தாவது சுயமரியாதை பேரணி. சுயமரியாதை பேரணி என்றாலே அதுவும் சென்னையில் நடக்கும் சுயமரியாதை பேரணி என்றாலே மனது கொள்ளை போகும் அளவிற்கு பேரானந்தத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும். இம்முறை என்ன உடை உடுத்தப் போகிறோம் முழுக்க முழுக்க வெள்ளையாக நாம் தெரியவேண்டும் என்பதில் நான் காத்திருந்து தேடி தைத்த சில உடைகளை உடுத்தி சுயமரியாதை பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.. என்னமோ தெரியவில்லை இந்த முறை பேரணிக்கு முந்தைய மற்றும் பேரணி நாளன்று நடக்கும் கொண்டாட்டங்களில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று மனது சொல்லவில்லை. இருந்தாலும் சுயமரியாதை பேரணியில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து சனிக்கிழமை இரவு கிளம்பி ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை எழும்பூரில் அறை எடுத்து தங்கி காத்திருந்தேன், இந்த முறை எந்த நண்பர்களுடனும் நான் தங்கவில்லை தனியாகத்தான் அறை எடுத்து தங்கி இருந்தேன் இருந்தபோதிலும் என் நலனை என்றும் விரும்பும் என் தோழமை என்னை அழைத்து எங்கிருக்கிறாய் என்று நலம் விசாரித்து மதியவேளை உணவு முடிப்பதற்குள் வந்து சேர்ந்தார், எனக்கான உடை நேர்த்தியை வெகு தீவிரமாக கண்காணித்துக் கொண்டு என்னை ஆட்டோ வரை புக் செய்து இருவரும் சேர்ந்தே பேரணி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டோம், அங்கு சென்றதும் கால்கள் ஆடத் தொடங்கி விட்டது கண்களுக்குள் புகுந்த பட்டாம்பூச்சி இதயத்தின் இறுதி வரை தொட்டு விட்டு சென்றதை நான் எப்படி விவரிப்பேன். ஆண்டுக்கு ஒரு முறை அனைத்து முகங்களையும் ஒருசேர பார்க்க முடியும் என்ற ஏக்கம் கலந்த அங்கலாய்ப்பு சொல்லி தீர்க்க முடியுமா என்ன. ஜிகு ஜிகு என்று என் உடையை பார்த்து மயங்கி மைக்குல் என் வாயை நோக்கி வந்தது, மன்னிக்கவும் மைக்குகள் மட்டும் தான் உங்கள் தவறான எண்ணங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன்.
பறை இசை முழக்கத்தோடு பேரணி தொடங்கியது ஆட்டத்துக்கு பஞ்சமில்லை, குதூகலம் கொஞ்சம் தான் என்ற பேச்சுக்கே இடமே இல்லை. நட்பு வட்டாரங்களின் புகைப்பட கிலுக்குகளும்,
நம்மை தூர இருந்து ரசித்தவர்களின் விரல் தொடுதலும் பேரணியை இன்னும் பேரானந்தம் கொள்ளச் செய்தது.
இடுப்பு நோக மூச்சு வாங்க ஆடி தீர்த்து தீர்ந்தபோது சூரியனும் கொஞ்சம் வீட்டுக்குச் செல்ல விடை பெற்றுக் கொண்டிருந்தது.
தன்னை மீறி பிஞ்சு கதிர்களை நமக்கு பரிசளித்துக் கொண்டு அடுத்த நாள் வருகிறேன் என்று பிரியாவிடை சொல்ல சூரியன் தயாராகிக் கொண்டிருந்தது.
சுயமரியாதை பேரணியும் முடியும் தருவாயை நெருங்கிக் கொண்டிருந்தது… எப்போதும் போல பேரணி முடியும் இடத்தில் ஆடலும் பாடலும் கண்ணை கட்டிக் கொண்டிருந்தது. அது என்னவோ தெரியவில்லை இந்தப் பேரணியில் என்னை சூழ்ந்து கொண்டு முத்தங்கள் கொடுத்த அத்தனை இதயங்களை நான் எப்படி சம்பாதித்தேன் என்று. ஒருவழியாக அனைவரையும் பார்த்தாகிற்று இனி அடுத்த வருடத்திற்கு தயாராவோம் அல்லது பெங்களூரில் நடக்கும் சுயமரியாதை பேரணிக்கு தயாராவோம் என்று மனதில் ஏக்கங்களை எழுத பேனாவை எடுத்து வைத்துக் கொண்டே ஆட்டோவை புக்ஸ் வருவதற்காக போனையும் எடுத்தாயிற்று.
ஆட்டோவை வருவதற்குள்
நேராக என்னை நோக்கி வந்த அந்த உயிர் என் முகத்துக்கு நேராக நின்று நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் உங்கள் உடையும் நேர்த்தியாக இருக்கிறது உங்களை தொடர்ந்து பேரணி முழுவதும் கவனித்து வந்தேன் என்று என்னை பார்த்து சொன்னது. அந்த உயிர் சொன்னது என்னால் கவனிக்க கூட முடியவில்லை ஏனென்று தெரியவில்லை ஒருவேளை அந்த உயிரை நான் ரசித்துக்கொண்டிருந்தேனோ எனக்கு பேச்சு வரவில்லை மூச்சும் தழும்பியது இருந்த போதும் இறுக்கிக் கொண்டு நீங்கள் யார் என்னை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன். இல்ல இல்ல இப்பதான் உங்கள முதல் தடவை பார்க்கிறேன் என்று அந்த உயிர் என்னிடம் மெல்லிய குரலில் சொன்னது. எனக்கு எதுவும் புரியவில்லை அந்த உயிர் என்னை அரவணைத்து ஒரு முத்தமும் கொடுத்தது அந்த முத்தத்தை வாங்கத்தான் இவ்வளவு தூரம் சென்னை வரை வந்தேனோ என்ற ஏக்கத்தை தீர்த்தது போல் முத்தத்தை வாங்கிக் கொண்டேன், ஏக்கம் தீர்ந்த இமைகளை திறப்பதற்குள் உயிர் எனக்கு இதழ் முத்தமும் கொடுத்தது ஒருவேளை என் இதழுக்கு மோட்சம் கிடைத்து விட்டது என்று அமைதியாக நின்று கொண்டிருந்தேனா என்று தெரியவில்லை. என் கண்கள் அந்த உயிரின் கண்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தது. யானையின் சின்னஞ்சிறிய கண்ணன்களைப் போல் என்னை பார்த்து அந்த கண்ணை என்னால் துளி அளவு கூட மறக்க முடியவில்லை. என்ன பேச என்று தெரியவில்லை அந்த உயிரின் விரல்களைப் பிடித்து சிறிது தூரம் நடந்தேன் என்னென்னமோ பேசிக் கொண்டேன் என்ன பேசினேன் எதுவெல்லாம் பேசினேன் என்று யூகிக்க கூட முடியவில்லை, என்ன நடக்கிறது தெரியாமல் நடந்து கொண்டிருந்தேன் நேரம் கடந்தது இருவரும் பிரிந்து சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தது. கைகள் நழுவி பிரியப் போகிறோம் என்பது மட்டும் தெரிய வந்தது. எப்படியும் சந்தித்து விடுவோம் , சந்திப்பதற்கான தேவைகள் எதுவையும் உருவாக்கிக் கொள்வோம் என்று மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு அந்த விரல்களை விட்டு விலக முடிவு செய்தேன் . இரண்டு முறை என்னை திரும்பி திரும்பி பார்த்துவிட்டு அந்த உயிர் என்னை விட்டு தூரமாக நடந்து சென்றது.
அந்த உயிர் என்னுடைய மாயையாக கூட இருக்கலாம்.
இந்த மாயை பின் பிங்க் உடுத்தி வந்திருந்தது.