Portrait of a lady on fire
18 ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் குயர் மக்களுடைய கலை படைப்பும், காதல் உணர்வும் கை கோர்ப்பது போல, கதை வடிவத்தை கையாளும் விதமாக செலின் சியாம்மாவால் எழுதி இயற்றப்பட்ட Portrait of a lady on fire என்ற திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியானது.
நகரத்தில் வாழ்ந்து வரும் ஓவியரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை, தான் வரைந்த ஓவியத்தின் தலைப்பில் இருந்து மீண்டும் ஒரு முறை நினைவுக் கூறும்போது ஆரம்பம் ஆகிறது திரைக்கதை.
ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தீவில், திருமணம் மீது எந்தவொரு உடன்பாடும் இல்லாத ஒரு ஜமீன் பெண்ணின், திருமணத்திற்காக அவரது உருவத்தை ஓவியமாக வரைய செல்லும் ஓவியருக்கும் அவருக்கும் இடையில் என்ன நடக்கிறது?
அங்கு வேலை செய்து வரும் பெண்ணிடமும், அவருடைய தாயிடமும் ஜமீன் பெண்னை பற்றி ஒரு சிறு அளவு மட்டுமே தெரிந்து கொண்டு, தன்னை ஒரு ஒவியராக அறிமுகப்படுத்தி கொள்ளாமல் நட்பு ரீதியில் உரையாடலை தொடங்குகிறார்.
அதில் இருந்து தினமும் கடற்கரையில் அவர்களுடைய சந்திப்பு நிகழ்கிறது
இருவரும் சந்திக்கும் நேரங்கள் குறைவாகவே இருப்பினும், அப்பெண்ணின் கை அசைவில் இருந்து ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து அவரை வரைய ஆரம்பிப்பது அக்கலையும் அதன் மீது கொண்ட காதலும் காட்சியில் பிரதிபலிக்கும்.
இதுவரையில் இருள் சூழ்ந்தது போல் தன் வாழ்வை வாழ்ந்து வந்த, புன்னகையற்ற அந்த ஜமீன் பெண்ணின் முகத்தில் வரும் முதல் புன்னகை காட்சி இருவரின் நட்பிற்கு பிறகே மலர்ந்திருக்கும்.
படத்தில் இசை மிக குறைவாகவே இசைக்கப்பட்டாலும் நாட்கள் நகர நகர இசை இவர்களை இன்னும் நெருக்கமாகவே இணைத்தது என்று சொல்லலாம்.
முடிவுற்ற ஓவியத்தை மீண்டும் வரைய செய்யும் ஜமீன் பெண்ணின் செயலில் இருவருக்குமான நாட்கள் இங்கிருந்தே தொடங்குவது போல் இருக்கும்.
இதை தொடர்ந்து இரண்டு பெண்களின் பார்வையில் ஈர்க்கப்படும் கண்கள் அவர்களை காதல் உறவிற்கு கடத்தி சென்றிருப்பதை பார்க்கும் நம் கண்கள் பிரகாசமாக ஒளிரும்.
இருவருக்கும் இடையிலான காதலை, ஊடலை அவர்களுக்கான ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தமாகவும், உணர்வு பூர்வமாகவும் காண்பிக்கபட்டு இருப்பது அலாதியான இன்பம்.
ஆண், பெண் என்ற வரையறைக்குள் மட்டுமே இருந்து வருகின்ற சமூகம்,
குயர் மக்களின் இம்மாதிரியான கதைகளை கலை வடிவமாக இவ்வளவு நேர்த்தியாக எடுத்து செல்வதை கொஞ்சம் அல்ல நிறைய பொறாமையுடனே கடக்க முற்படும்.
இதுமட்டுமின்றி ஓவியர், ஜமீன் பெண், வேலை பார்க்கும் பெண் என இவர்கள் மூன்று பேருக்கு மத்தியில் ஏற்பட்ட நட்பில் எந்தவொரு ஆதிக்க மனநிலையையும் இயக்குனர் காட்சிப்படுத்தாது அந்நட்பிற்கு மேலும் அழகியலை சேர்த்திருந்தது.
காலங்கள் கடந்து அவர்களுக்கிடையில் இருந்த காதலை இவ்வளவு அழகியலோடு வசனங்கள் ஏதுமின்றி கடைசி நொடிகளில் இசை வாயிலாக அமைக்கப்பட்ட காட்சியும், ஒவ்வொருவருடைய நுணுக்கமான நடிப்பும் திரைப்படத்தை ஒருபடி மேலே கொண்டுபோய் விட்டன.
ஒளிப்பதிவும், வசனங்களும் நம்மை கதையுடன் பயணிக்க வைத்து ரசனை கடலில் மிதக்கச் செய்யும் நிகழ்வை, இத்தனை நாட்கள் தவரவிட்டோமே என்ற எண்ணம் இதுவரை படத்தை பார்க்கலாம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் எழும்என நினைக்கிறேன்.

– பிரியதர்ஷினி.மு

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன