பல கோடி வருசத்துக்கு முன்னாடி உருவான இந்த பூமியில பல உயிர்கள் வாழ்ந்துட்டு வருது.
ஆனால் அந்த உயிர் அனைத்தையும் மொத்தமா தன்னை விட கீழனு சொல்லி அடிமை ஆக்கி, நான் நினைச்சா என்ன வேணாலும் பண்ணலாம் என்ற ஆவணத்தோட பல வருடங்களாக வாழ்ந்துட்டு வரும் மனுசனுங்க, ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒவ்வொண்ணா கண்டுபுடிச்சோ, இல்லை உருவாக்கியோ அதை அடுத்த நூற்றாண்டுல பிறக்கிற தன்னோட சந்ததிக்கு கொஞ்சம் கூட பிசுறு தட்டாம குடுத்துட்டு போயிடுவாங்க. அது உண்மையா பொய்யானு ஆராயாம,அதை அப்படியே பின்பற்றும் பல மனுசனுங்களுக்குள்ள, பல ஆயிரம் வருசமா ஒண்ணு இல்லாமலே போயிடுச்சு .. அதுதான் மனிதம். அது இருந்தா இங்கே சாதி மத இன மொழி அற்ற மனிதர்கள் நம்ம கூட வாழ்ந்திருப்பாங்க.
அப்படி எப்பொழுதுமே கிடைச்சுட மாட்டாங்க.
ஆமாம் நம்மள கொஞ்சம் கூட வேற்றுமையா பாக்காத மனிதர்கள் மத்தியில நம்ம நடந்து போறது எவ்ளோ பாக்கியம்.
அந்தமாதிரி இதுவரை உணர்ந்திருக்கிங்களா?!
நீங்க போட்ருக்க டிரஸ் வச்சு உங்களை மதிப்பிடாத மனிதர்களை பாத்திருக்கிங்காளா?!
நீங்கள் பேசுற மொழி வச்சு இங்க இருந்து வந்துருக்காங்க. இவுங்க கொஞ்சம் லோக்கல்னு மனசுல நினைக்காத மனுச கூட்டத்த பாத்திருக்கிங்களா?!
இது ரெண்டையும் தாண்டி உங்க இஷ்டம் போல நீங்க நடந்து, அது எப்படியிருந்தாலும், மத்தவங்க முகத்தில உங்களை ரசிக்குற உணர்ச்சியை பாத்திருக்கிங்களா?!
நான் ஓரளவுக்கு மக்களை சந்திச்சுருக்கேன்.
சாதி இல்லாத கூட்டத்துல கூட ஆடைகளும்,பண ஏற்றத்தாழ்வுகளும் பார்க்கப்பட்டது.
யார் கையிலும் பட்டுவிடாமல், இரு கை விரித்து நடந்து செல்ல வேண்டும் என்ற கல்யாண்ஜி கவிதை போன்று.
எந்த கண்ணிலும் நம்மள பத்தின எந்த கீழ் எண்ணம் இல்லாம, எல்லோரையும் சமமா பாக்கிற, மதிக்கிற, பேரன்ப அளவுக்கு அதிகமாக பொழியுற, வாழுற வாழ்க்கைய பத்தி சுத்தமா நினைப்பே இல்லாம, ஏதோ இதுவரை யாரும் உலகத்தில கண்டுடாத, சமமா நடத்துற மனுசக்கூட்டம் நிறைஞ்ச ஒரு வானவில் கூட்டத்துள்ள நனைஞ்சதுக்கப்பறம், மனசுல இதுதான் ஓடிட்டே இருக்கு.
என் வாழ்க்கையில ரொம்ப உன்னதமான, அற்புதமான, பேரன்பான, உண்மையான இன்னும் எவ்ளோ வார்த்தைகள் கொண்டு நிரப்பினாலும் ஈடாகாது அந்த பேரணி.
எல்லா பயணமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துடுமா?! அப்படின்னா. இல்லைனு தான் நான் சொல்லுவேன். ஏன்னா இதுவரை நான் பலமுறை சென்னைக்கு போயிருக்கேன். நிறைய பேரை சந்திச்சு இருக்கேன். ஆனா இந்த சென்னை சந்திப்பு தான் என் வாழ்வில் எப்பொழுதுமே மறக்க முடியாத ஒரு அனுபவமாகவும் ஆகச்சிறந்த பயணமாகவும் இருக்க போகுதுனு அங்க போற வரைக்கும் உணரவேயில்லை.
நானும் எனது தோழியும் ப்ரைட்வாக் நடக்கும் அந்த சாலை கிட்ட நெருங்குறதுக்கு முன்னாடியே, பல பேரு வண்ண ஆடைல போறத நான் பார்த்தேன். அந்த ஆடைகள் என்னை கவரத்தான் செஞ்சுச்சு.பொதுவா எனக்கு வெஸ்டர்ன்,மாடர்ன் ஆடைகள் போடுர மனுசங்கள பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை. அப்படி இருக்கும் நேரத்துல, எனக்கு அவங்கள பாத்த உடனே எனக்குள்ள என்னையறிமா ஒரு சந்தோஷம். ஆனால் ஒரு துளி ஏக்கம். இந்த மாதிரி ஆடை அணிஞ்சவங்க நம்மள மாதிரி எளிய தோற்றம் உள்ளவங்கள மெத்த மனநிலையில தானே பாப்பாங்கனு ஒரு தயக்கமும் ஒட்டிக்கிச்சு.சரினு இடம் கிட்ட வர போகுதுனு கூகுள் அக்கா சொன்னத கேட்டு செல்போன் கேமரால தலைய சரி செஞ்ச என்னோட கண்ணுல நிறைய பேரு மிடுக்கான ஆடையோட மிக அழகா அந்த ரோடுவழியா போயிட்டு இருந்தாங்க. இவங்க எல்லாரும் எங்க போறாங்க அப்படின்னு நான் யோசிச்சிட்டு இந்த பகுதியில நிறைய பேரு வெளிநாட்டவர் இருக்காங்களா?! இல்ல நிறைய பணக்காரங்க வாழ்கிறார்களா?! அப்படின்னு கேட்டேன்.அதற்கு அவள் இருக்கலானு பதில் கொடுத்து மௌனம் கொண்டால்.
திடீரென எங்க வண்டிய மறிச்ச போலிஸ் இந்த பக்கம் போக முடியாது சொல்ல, இல்லை இந்த பக்கம் தான் போகனும்னு சொன்னவுடனே, அங்க போகிற பைக்கை ஓரமா நிப்பாட்டி நடந்து போங்கனு சொல்ல,வண்டிய நிப்பாட்டி நடந்து போக ஆரம்பிச்சோம்.
உள்ள நுழையும் போது என் முகம்மேல வானவில் கொடி வந்து விழுந்து வரவேற்றது.
கூட்டத்து நடுவுல பறை அடிக்க, அதனை சுத்தி பல கால்கள் தன்னை மீறி குதிக்க ஆரம்பிச்சது. அந்த கால்கள் எப்படி இருந்துச்சு தெரியுமா?! கால்விரல் ரெண்டுலயும் மெட்டி போட்டும், முட்டி கால் வரை மயிர் நிறைஞ்சதுமாகவும், அப்படி மேல உயர்ந்து அந்த காலுக்கு சொந்தகாரங்களோட முகத்த பாத்தா, அவங்க முகத்துல இருந்த மயிர் அழகா ஒதுக்கி அந்த முகத்துக்கு ஏத்த மாதிரி இருந்துச்சு. ரெண்டு காதுலையும் ஜிமிக்கி. அது உரசுர கழுத்துல அழகா ஒரு பாசி. அந்த பாசி கலருல ஒரு sleeve less Top போட்டுகிட்டு அந்த இசைக்கு ஏத்த மாதிரி கால்கள் சுழற்றி ஆடிக்கொண்டு இருக்கும் அந்த சேப்பியனை, அவள் என்று அழைப்பதா?! அவன் என்று அழைப்பதா?! என்று யோசித்த நான், சற்று தலையில் அடித்து கொண்டு நினைத்து பார்த்தேன். எவ்வாறு அழைக்கலாம் என அவர்களிடம் கேட்டு அது மாதிரி அழைப்பதே அவர்கள் மனதை காயப்படுத்தாமல் இருக்கும் என பல வலிகுரல்களை நான் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
இருந்தாலும் அந்த மெட்டி அணிந்த காலின் ஆட்டம் அதனுடன் சேர்ந்த பல கால்கள் அனைத்தும் முழு சந்தோசத்தையும் வெளிய கொண்டு வந்து ஆடிட்டு இருந்தது…
அனைவரின் கண்ணும் இன்றுதான் முழு சந்தோசத்தை பாத்த மாதிரி துள்ளல் ஆட்டம் போட்டார்கள்.இருக்காதா பின்ன இந்த உலகத்துல நம்ம பிறப்பு பற்றி பேசி ஏதோ நம்ம வேற்று கிரக வாசிமாதிரில நடத்துனாங்க, உண்மையா பாத்தா நான் உயிர் தான் இங்கே இதுவும் ஒரு பிறப்பு தான் இது இயல்பு தான் இதை ஏத்துக்காத மனுசங்க தான் இங்கே தப்பா யோசிக்கிறாங்கனு கண்டிப்பா உணர வச்சுருக்கும் இந்த pride walk.
இன்னோ உள்ளே போக போக கண்கள் அவ்ளோ சந்தோசத்த பார்த்துச் ஆண் காதலர்கள் ரெண்டு பேரும் எந்த தயக்கமும் இல்லாமல் கட்டி அணைத்து இவன் தான் என்னோட லவ்வர்னு சொல்லி பெருமைபடுரத பாக்கும் போது எனக்கு அவ்ளோ சந்தோஷம் ஆனால் ரோட்டோராமா நின்னுட்டு இருந்த அந்த போலீஸ் காரர் முகம் தான் ஏதோ ஏளனமா பாத்துச்சு.
மனதின் வலியையும் கண்ணீரையும் பதாகைகள் எல்லோருக்கும் எடுத்து சொல்லிட்டு இருந்துச்சு..
வானவில் உக்கார்ந்திருந்த கண்ணம், கலர் கலராண தலைமுடி, எங்குமே பாத்திராத ஆடை அலங்காரம்,என்னேரமும் கேட்டுட்டே இருந்த முத்தச்சத்தம் என அந்த நடைபயணம் நீண்டுகொண்டே இருந்தது.
அந்த கூட்டத்தில எந்த கண்ணும் என்னை ஏளனமாவோ வித்தியாசமாகவோ பாக்கல,என்ன ரொம்பவே ரசிச்சு பாத்த மாதிரி ஒரு உணர்வு
இதுக்கு முன்னாடி எனக்குள்ள ஏற்பட்டதே இல்லை.
எங்க போனாலும் நம்மள கீழ் வைத்து பார்க்கும் கண்களை தான் பாத்திருக்கேன் ஆனால் என்னை சமமா நடத்துன ஒரு கூட்டத்தை இங்கே தான் நான் முதன் முதலா பாத்தேன் ஆனால் எல்லோரையும் சமமா நடத்துற இவுங்களதான் இந்த உலகம் அவமானபடுத்துலனு யோசிக்க ஆரம்பித்தேன்….
இறுதியாக பயணம் ஒரு மேடையை வந்து அடைந்தது.
அதுவும் எல்லோரையும் நேசிக்கும் மேடை .அந்த மேடையில நாங்க காதலிக்குறோனு இந்த உலகத்துக்கு சொல்லனுமா இல்லை இந்த மனுசங்க கிட்ட எதாச்சும் பகிர்துக்கனுமா அது எல்லாம் அங்க பன்னலாம் .ஒரு முன்கூட்டியே திட்டமிட்டு நடக்கும் மேடையை பார்த்த எனக்கு இந்த மேடை ஆச்சரியத்தை தான் கொடுத்துச்சு.
எல்லோரும் கண்ணுல தண்ணி வச்சுட்டு அழ ஆரம்பிச்சு ஒருவர் ஒருவர் விடைபெற்று கொண்டார்கள்..
அவுங்க மனசு அந்த நாள் ஏதோ ஓரளவுக்கு சந்தோசமா இருந்துந்துருக்கும் நம்ம மட்டும் இந்த உலகத்துல தனி இல்லை நிறைய பேரு இருக்காங்கனு ஒரு தைரியத்தோட அவுங்க வாழ்க்கைய வாழ ஆரம்பிப்பாங்கனு அங்கு இருந்து விடை பெற்று வண்டில உக்கார்ந்து யோசிச்சுட்டே இருந்தேன்…
உண்மையாகவே இந்த மாதிரி ஒரு சரிசமமான இடத்தை யாரும் பாத்திருக்க மாட்டாங்க வருடம் தோறும் இங்கே கண்டிப்பா வரமுனு நினைச்சு ட்டே அங்க இருந்து புறப்பிட்டேன்..

HARIPRASATH M
28/07/2022 at 6:48 காலை
Wow