Pride, LGBTQIA+ மக்களின் கொண்டாட்டத்தோடு மட்டும் நின்றுவிடும் ஒன்றல்ல. அதன் பின்னால் மிக ஆழமான அர்த்தங்கள் பொதிந்துள்ளன. நீங்கள் உமிழும் வெறுப்புகளையும், ஒடுக்குமுறைகளையும் தாண்டியும் எங்களால் எங்கள் இருப்பை பெருமையாக கொண்டாட முடியும் என்பதை pride நினைவுபடுத்துகிறது.

 

இச்சமூகத்தில் பலர் தம் பால் பற்றியும் பாலீர்ப்பு பற்றியும் பாதுகாப்பற்ற உணர்வொன்றுடனே வாழ்ந்து வருகின்றனர். தன்னை வெளிக்காட்டிக்கொள்ளக்கூட முடியாத அளவிற்கு இச்சமூகம் கொடுமையானதாக இருக்கிறது. இவ்வாறு எப்போதும் தனித்து விடப்பட்டதாய் உணரும் ஒருவரிற்கு இக்கொண்டாட்டங்கள் நீ தனியாக இல்லை என்ற ஒரு பெரும் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது. தன்னைப்பற்றி தானே உணர்ந்துகொள்வதற்கு ஒரு பெரும் வாய்ப்பை அளிக்கிறது. எல்லோராலும் judge பண்ணப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரிற்கு தன்னை தானாகவே ஏற்றுக்கொள்ளும் மக்களுடன் பழக வாய்ப்பளிக்கிறது. வெறுப்புகளைத் தாண்டி நீ நீயாகவே உயரத்தை அடையலாம் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

 

LGBTQIA+ மக்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் pride பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு பெருந்தொகையான மக்கள் ஓரிடத்தில் கூடி தங்களைப்பற்றியும், தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் பேச வாய்ப்பு கிடைக்கும். இவை பலர் காதுகளைச் சென்றடையும். பலர் அவற்றையெல்லாம் கேட்டும் தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கலாச்சாரம், கடவுள் என்று கடிவாளம் போட்டுக்கொண்டிருக்கும் கண்களுக்கு வேறெதுவும் தெரியப் போவதில்லை. ஆனால் அறியாமையில் இருப்பவர்களுக்கு LGBTQIA+ பற்றியும், இச்சமூகத்தால் தொடர்ந்து அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றியும் விழிப்புணர்வு கிடைக்கும். அதைவிட மிக முக்கியமானது சுய விழிப்புணர்வு. தனது பால், பாலீர்ப்பு பற்றி குழப்பத்தில் இருப்பவர்களுக்கும், தனது சுய அடையாளம் பற்றி தாழ்வுமனப்பான்மையில் சிக்கிக்கொண்டவர்களுக்கும் தன்னை உணர்ந்துகொள்ள இவை வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கிறது.

 

Pride paradeஇன் போது தன்னை judge பண்ணாத மக்களோடு இணைந்து பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். யார் என்ன நினைப்பார்கள் என்ற அச்சமில்லாமல் பிடித்த ஆடை, அணிகலன்களை அணிந்துகொள்ளவும், பிடித்தவர் கைபிடித்து நடக்கவும், தழுவிக்கொள்ளவும், முத்தமிட்டுக்கொள்ளவும் சுதந்திரம் கிடைக்கிறது. இத்தனை நாள் நடந்த, அடுத்த நாளும் நடக்கக் காத்திருக்கும் அநீதிகளை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு தன் சுயத்தை தன் விருப்பம் போல அந்தநாள் கொண்டாட முடியும். அந்த ஒருநாள் போல ஒவ்வொரு நாளையும் கொண்டாட pride அவசியம்.

 

LGBTQIA+ மக்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளையும், இவற்றால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றியும் உலகத்திற்கு தெரியப்படுத்த pride month உதவும். குறித்த காலம் முழுவதும், பலர் இணைந்து இவற்றைப்பற்றி பேசும்போது அது நிச்சயமாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சிறிய முயற்சிகள் என்றாலும் அது மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. தொடர்ந்து bullyingகு எதிராகவும், harassmentகு எதிராகவும் பேசிக்கொண்டிருப்பதும், எம்மாலான முயற்சிகளை எடுப்பதும் அவசியமான ஒன்று. பலர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதாலேயே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. நான் ஒருவன் பேசுவதால் என்ன நடக்கப்போகிறது என எண்ணாமல் சரியானதை தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்போம்.

 

கடந்தகாலங்களில் எத்தனையோ பேர் தன் சுய அடையாளத்திற்காக வாழ்க்கையை, உயிரை இழந்துள்ளனர். தான் இயற்கையாக உணரும் ஒன்றைக் காரணம்காட்டி அவரை தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளி இச்சமூகம் பல கொலைகளை செய்திருக்கிறது. அவர்களுக்கு சொந்தமான அங்கீகாரத்தை பறித்திருக்கிறது. தனக்கு துளியும் விருப்பமில்லாத வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திருக்கிறது. இவ்வாறான அநீதிகளுக்கு எதிராக ஒன்றுகூடவும், தமக்கான உரிமையை மீட்டுக்கொள்ளவும் pride முக்கியமாக இருக்கிறது.

 

Pride monthஇன் போது LGBTQIA+ மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அவர்களது வியாபாரத்தை முன்னோக்கிக்கொண்டுசெல்லவும் ஒரு தளமாக அமைகிறது. வாழ்க்கை கொண்டாட்டத்திற்குரியது, எம் காதல் கொண்டாட்டத்திற்குரியது, அதை உங்கள் வெறுப்பு தடுத்துவிட முடியாது என்பதை pride கொண்டாட்டங்கள் தெளிவாக கூறுகிறது. ஒரு சமூகமாக இணைந்து ஆடிப்பாடி பேசிச்சிரித்து மகிழ்ந்திட pride கொண்டாட்டங்கள் வழிவகுக்கிறது. மனிதர்களை மனிதர்களாகவும், காதலை காதலாகவும் பார்க்க வேண்டுமென்பதையே இக்கொண்டாட்டங்கள் கூறுகின்றன.

 

– துவா

Comments

  • Avatar

    HARIPRASATH M

    28/07/2022 at 6:55 காலை

    Wow super bro clear explanation bro keep it up ninga ellam support pantrathu Nala tha public aaka tha sila nanbarkaluku thairiyam varuthu

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன