ரோசாப்பூக்காரி
பகுதி 1
ஏய், அடேய் பெரியவனே எந்திரிங்கடா…! இன்னும் என்ன.. தூக்கம் வேண்டிகிடக்கு, எந்திரிங்கடா, மழ வேற சொட்டு வைக்க ஆரமிக்குது, விடியறதுக்குள்ள எந்திரிங்கடா…
ஏங்க இவனுங்கள கொஞ்சம் எழுப்பி விடுங்க என்று பதினைந்து, பதிமூன்று, பனிரெண்டு வயது குழந்தைகளுக்கு தாயான அமுதாம்மா தொண்டைக்கும் வாய்க்கும் தூரம் ஏது என கணக்கிட முடியாத அளவிற்கு கத்திக் கொண்டிருந்தாள்.
அமுதாவின் கணவர் மலையப்பன், மலையப்பன் அமுதா தம்பதிக்கு அடுத்தடுத்த மூன்று ஆண் குழந்தைகள், ஆமா… பொண்டு பொடுசு இல்லையாடி அமுதா..? என்ற ஊராரின் கேள்விகளுக்கு அமுதா பதிலளிக்கும் முன்னமே கேள்விகேட்டவர்களே முந்திக்கொண்டு “உனக்கென்னடி மூணு சிங்கக்குட்டிய பெத்துவச்சுருக்க கொடுத்து வச்ச மகராசி” என தங்ளுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு நகர்ந்து விடுவார்கள். அமுதா இதை எப்போதும் கேட்டுக்கேட்டு சலிப்பு வந்துவிட்டது அவளுக்கு, ஹ்ம்ம் ஆமாங்கக்கா என்று வேண்டா வெறுப்புடன் ஒரு இழுவை இழுத்து புளியங்காயை சுவைத்த முகத்துடன் நகர்ந்து சென்றுவிடுவாள் அமுதா.
அப்பேற்பட்ட அமுதாவுக்கு ஏற்ற கணவர் தான் மலையப்பன், அமுதா பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது, அதுவா அமுதா..? நீ சொன்ன சரியாத இருக்கும், அட சரி அமுதா நான் பாத்துகிறேன், ஏம்மா அமுதா நான் போயிட்டு வரவா..?! என நொடிக்கொருமுறை அமுதா பெயர் சொல்லி அழைப்பதில் தான் மலையப்பனுக்கு பேரானந்தம்.
அமுதா அதிகாலை மூன்று முப்பது மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமலே எந்திருச்சுருவா எழுந்த உடனேயே மலையப்பனை எழுப்புவது தான் முதல் வேலை
“ஏங்க” ….”ஏங்க ” என இரண்டுமுறை கூப்பிட்டதும் மூன்றாவது முறை இந்தாங்க என்று ஒரு இழுவை தான், இந்த வந்துட்டேன் மா… என மலையப்பன் பொத்திக்கொண்டிருந்த கருப்பு போர்வையை விருட்டு என இழுத்து அமுதா சொல்லும் அடுத்த வேலைக்கு தயாராகிவிடுவார், இதனிடையில் அமுதாவின் கண்கள் மகன்கள் பக்கம் திரும்பும், ஏய் இந்தாங்கடா எந்திரிங்கடா என கணவனை எழுப்பும் அதே போல் மகன்களையும் எழுப்ப முற்படுவாள் அமுதா, அனால் கணவரை போல மகன்களை எழுப்ப முடியாது தவித்து போவாள்.
இந்த சத்தம் கேட்கும் பொழுதே மூத்தவன் கைலியையும் போர்வையையும் ஒருசேர இழுத்து பிடித்து போர்த்தி எது தலை எது கால் என தெரியாத அளவிற்கு படுத்திருப்பான், ஐயா எந்திருக்கிறேன் மா, என பொறுப்புகள் தாங்கி நிற்கப்போகும் மூத்த மகன் அடைமொழியுடன் எழுந்து நின்று அடுத்த வேலைக்கு ஆயத்தமானான் அமுதாவின் முதல் மகன் தீரன், அடுத்தது நடுவுள்ளவன், அதாவது இரண்டாவது மகன் மணி, அமைதியான பையன், அமுதாவின் சொல்படி கேட்டு நடக்கும் பயந்தப்புள்ள, அடுத்து நம்ம பாக்கவேண்டிய ஆளு அமுதாவின் மூன்றாவது புள்ள கடைக்குட்டி செல்லம், செல்லமா..? செல்லம் குடுக்குறதுக்கெல்லாம் அமுதாவுக்கு நேரம் கிடையாது, இருந்தாலும் கடைசி மகன் என்பதால் அமுதாவுக்கு எப்போதும் ஒரு கரிசனம் உண்டு, பொறக்கும் போதே ரொம்ப சிரமப்பட்டு பொறந்த புள்ள மூணு நாளு கண்ணாடி பொட்டிக்குள்ள வச்ச புள்ள, நான் செத்தாலும் பரவாயில்ல எம்புள்ளைய காப்பாத்திடுங்கனு பெரும் தவிப்புக்கு இடையில பொறந்த புள்ள, ஊரே இவளுக்கு மூணாவது பொம்பள புள்ளதான் பொறக்கும்னு ஆருடம் சொல்லிக்கிட்டு கிடந்தப்போ கூட என்ன புள்ளையா இருந்த என்ன.. புள்ள நல்லா பொறந்தா போதும்னு சிறுமலை நாகம்மாவுக்கு நேத்திக்கடன் வச்சு பொறந்த என் மகராசானு சொல்லி அமுதா பெத்தெடுத்த மூணாவது புள்ளதா.. ராசா, இப்படி மூணு புள்ளைக்கும் ஒரு கத, அமுதாவும் மலையப்பனும் மூணு மகன்களும் இறுக்கி பிடிச்ச இந்த சின்னஞ்சிறிய குடும்பம் உழைப்பையும், மழையையும், வானத்தையும், ஆடுமாடுகளையும், மலை போல் கிடக்கும் தூர்வாரிய கிணற்று மண் குவியலையும், தென்னை மரத்தடியில் கிடக்கும் ரோசா நாத்துகளையும், சவ்சவ் கோனி சாக்கில் நிரப்பப்பட்ட ரோசாப்பூக்கள், ரோசாப்பூக்கள் பறித்து கேலி வழிந்த விரல்களும், அமுதாவின் கண்ணீர் குரலும் சேர்ந்து தான் இவர்களின் ஒவ்வொரு நாளும் தொடங்கும்.
தொடரும் …..

