இங்கு காதல் என்பது என்ன என்ற வரையறையை ஆராய்ந்து ஆராய்ந்து இந்த பெரும்பான்மைச் சமூகம் தோற்றுப் போய்விட்டது என்று தான் குறிப்பிட வேண்டும். ஆம் காதலுக்கு ஏது வரையறை, காதலுக்கு ஏது குறிக்கோள், காதலுக்கு ஏது வயது, காதலுக்கு ஏது பால், காதலுக்கு ஏது நிறம், காதலுக்கு ஏது எல்லை, காதலுக்கு ஏது மொழி, இப்படி அனைத்து ஏது என்ற கேள்விகளையும் அடித்து நொறுக்கி காதல் மலர்ந்துள்ளது மனோஜ் மற்றும் ரன்வீர் இவர்களுக்கு. யார் இவர்கள்? ஏன் இந்தக் கொண்டாட்டம்? ஏன் இந்த திருமணத்தை நாம் கொண்டாட வேண்டுமென அனைத்து கேள்விகளுக்கும் பதிலாகத்தான் இந்த கட்டுரை அமையும்.
சமீபத்தில் சமபால் காதலர்களான மனோஜ் மற்றும் ரன்வீர் இவர்களின் திருமணம் பல தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த மனோஜ் அவர்களுக்கும் இந்திய வம்சாவழி சீக்கிய குடும்பத்தை சார்ந்த ரன்வீர் அவர்களுக்கும் நடந்த திருமணம் தான் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது.
இந்த திருமணத்தை பற்றி மனோஜ் அவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் கூறியதாவது இவர்களின் காதல் இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகரத்தில் தான் மலர்ந்தது என்று முகத்தில் புன்னகை ததும்ப கூறினார் மனோஜ். மனோஜ் மற்றும் ரன்வீர் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும் ரன்வீர் இவர்களின் தொடக்க சந்திப்பிலேயே காதலை வெளிப்படுத்தியதாகவும் மனோஜ் கூறினார். இவர்களுக்கு இடையில் உள்ள அந்த புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இந்த காதலை மேலும் வலுப்பெற செய்தது என்றே கூறலாம். இந்து மதத்தைச் சார்ந்த மனோஜ் சீக்கிய மதத்தைச் சார்ந்த ரன்வீர் அவர்களுக்கும் ஏற்பட்ட இந்த காதல் எப்படி திருமணத்தை எட்டியது என்ற கேள்விக்கு மனோஜ் அளித்த பதில். தான் முதலில் ஒரு தன்பால் இருபாலர் என்ற அடையாளத்தை வெளியில் சொல்ல தயங்கிய நிலையிலேயே தான் இருந்து வந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தினார். இவர்களின் காதல் ஒன்று கூடுகையில்தான் தன்னுடைய அடையாளம் அதாவது தான் ஒருபால் ஈர்ப்பாளர் என்ற அடையாளம் இவ்வுலகில் யாருக்கு தெரிந்தாலும் அதை பற்றிய கவலை இல்லை. தன்னுடைய காதல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது அதனால் என்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்ற உத்வேகத்துடன் எங்கள் காதல் வாழ்க்கையை தொடங்கினோம் என்றார். மேலும் இவர்கள் தொழில் காரணமாகவும் கொரோனா நோய் தொற்று காரணமாகவும் சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்தது என்று மனோஜ் கூறினார். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு இடம்பெறுவது இந்திய நாட்டை பொறுத்த வரையில் சாதாரண விடயமல்ல எனினும் தன் காதலுக்காக ரன்பீர் நாடு கடந்து பயணம் மேற்கொண்டது தன்னை வெகுவாக கவர்ந்தது என்று மனோஜ் கூறுகிறார்.
மேலும் தங்களின் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்விக்கு மிகுந்த புன்முறுவலுடன் மனோஜ் நமக்கு பதில் அளித்தார். அவர் கூறிய பதில் இந்தியச் சமூகம் பொதுவாக சமபால் திருமணத்தை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அங்கீகரிப்பதில்லை. ஆனால் பல மேலை நாடுகள் சமபால் காதலர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்துள்ளது. அதன்படி நான் வாழும் நாட்டிலும் அதற்கான எல்லா சலுகைகளும் உள்ளது இருந்தபோதிலும் பல அலுவல்கள் சார்ந்த விடயங்கள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது இந்த திருமணத்தை நடத்துவதற்கு. திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு என்னுடைய இணையரான ரன்பீர் அவர்களே மிகவும்சிரமப்பட்டு அனைத்து விதமான செயல்பாடுகளையும் மேற்கொண்டார் அதன்படி 60 நாட்களுக்கு முன்னமே அனைத்து அலுவல் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து இறுதியாக எங்களது திருமணம் நடைபெற்றது. பதிவு திருமணம் என்பதால் எங்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிபவர்களை கொண்டு சிறப்பாக எங்களது திருமணம் நடைபெற்றது மேலும் சீக்கிய முறைப்படி சிறிதாக எங்களது இல்லத்திலேயே ஒரு சிறிய கோவிலை உருவாக்கி அங்கேசீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்,இதனால் பல சீக்கிய நண்பர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தபோதிலும் எங்களது காதல் அதற்கு ஒரு போதும் காது கொடுக்கவில்லை. சமூக வலைதளங்கள் எங்களது திருமணத்தை வெகுவாகக் கொண்டாடியது, டிக் டாக் போன்ற செயலிகள் மூலம் நாங்கள் வெகுவாக பிரபலமடைந்து செல்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறாக எங்களது திருமணம் நடைபெற்று முடிந்தது. இன்றளவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் நினைப்பதெல்லாம் தெற்காசியாவில் உள்ள நாடுகள் சமபால் காதல்களை மேலைநாடுகளில் உள்ளதுபோல் அங்கீகரிக்க வேண்டும் . இங்கு காதலும் கல்யாணமும் எந்த விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல என்பதை தெரிவிக்க ஒரு முன்னோடியாக எங்களுக்கு திருமணம்நடந்தது என்று நான் பெருமிதம் கொள்கிறேன் என்று மனோஜ் முடித்தார்.
உண்மையிலேயே இவர்களின் திருமண நிகழ்வை பார்க்கும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி தான் ஏற்படுகிறது. சாதி மதம் போன்ற பல இடர்பாடுகள் உடன் உள்ள இந்த இந்திய சமூகத்தில் பிறந்து தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலை நாடுகளுக்குச் சென்று நாங்கள் எவ்வாறு சமூகத்தால் பார்க்கப்படுவோம் என்ற கேள்விகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காதலால் ஒன்றுகூடி இன்று திருமணம் முடித்து வாழும் மனோஜ் மற்றும் ரன்வீர் தம்பதிகளை மனதார வாழ்த்துவோம் காதலை கொண்டாடுவோம்.
நன்றி
வணக்கம்
-தேவா