அத்தியாயம் – 2
இதுவரை : ஆதவன் வயது 17, இரண்டு வருடங்களாக ஆதவனுக்கு பெண்களை விட ஆண்களை மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது, இந்த உணர்வு சரியா தவறா என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டது, தன் உறவினர் திருமணத்திற்க்கு சென்ற பொழுது, தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளும் விதமாக தன் வயதை ஒத்த அத்தை மகன் இளவேனில் இடம் கூறி விளக்கம் கேட்கலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தான்.
இனி,.
இளவேனில், “இப்ப எல்லாம் அமைதியாவே இருக்கே, எப்ப பார்த்தாலும் ஏதாச்சும் யோசனையிலேயே இருக்கியாமா ஏன்?”
ஆதவன், ஏதேதோ சொல்லி சமாளிக்க, இளவேனில் ஒத்துக்கொள்ளவே இல்லை, இறுதியில், “ நீ என்ன சமாதானம் சொன்னாலும் எனக்கு ஒத்துக்குற மாதிரி இல்லை, எனக்கு உன்னை பத்தி தெரியும், என் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா சொல்லு இல்லாட்டி வேண்டாம்”
ஆதவன், சில நிமிடங்களுக்கு அமைதி காத்தான், பிறகு ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தான் மச்சி, “உனக்கு பசங்களை புடிக்குமா இல்லை பொண்ணுகளை புடிக்குமா”
“இது என்ன கேள்வி எனக்கு பொண்ணுகளையும் புடிக்கும் பசங்களையும் புடிக்கும்”
“உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறது, ம்ம்ம்ம்… எனக்கு கொஞ்ச நாளா ஒரு சில பசங்களையோ, ஆண்களையோ பார்த்தா, எனக்குள் ஒரு மாற்றம் டா, அவங்களை எனக்கு ரொம்ப புடிக்குது, என் மனசு ரெக்கை கட்டி பறக்குது, கொஞ்ச நாள்ல எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்லை எல்லாருக்கும் இருக்கானு ஒரு சந்தேகம் வந்துச்சு…” என ஆரம்பித்து தன்னுடைய மனதில் உள்ள கேள்விகள் சந்தேகங்கள் அனைத்தையும் கிட்டதட்ட 40 நிமிடங்கள் செலவழித்து கேட்க, இளவேனிலும் குறுக்கே பேசாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.
ஆதவன் பேசி முடித்தது, அவன் மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் இறக்கி வைத்தது போல இருந்தது. அதே நேரத்தில் அந்த பாரம் இளவேனில் மனதிலும் மூளையிலும் ஏறிக்கொண்டது.
ஆதவன் பேசி முடித்ததும் அவன் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.ஒரு வழியாக ஆதவனும் இளவேனிலும் அந்த நள்ளிரவு நடையை முடித்துவிட்டு மண்டபம் திரும்பியிருந்தனர்.பெரும்பாலான சொந்த பந்தகள் படுத்துவிட்டிருந்தனர், மணவரை அலங்காரம் ஒரு புறம் நடக்க, காலை டிபன்னுக்கு காய்கறிகள் அறுத்துக்கொண்டிருந்தனர். ஆதவனும், இளவேனிலும் இதை எல்லாம் ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு, அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த ரூமுக்கு சென்று படுத்து உறங்கிவிட்டான்ஆதவன். இளவேனில் ஆதவன் கூறியதை பற்றி யோசிக்க ஆரம்பித்தான், எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது உறங்கிவிட்டான்.
அடுத்த நாள் காலை 6 மணிக்கு எல்லாம் எழுப்பிட்டார்கள்.ஆதவன், இளவேனில், உள்ளிட்ட அனைத்து ஆண் இளவட்டங்களுக்கும் ஒரே மாதிரியாக வேஷ்டி சட்டையும், பெண் இளவட்டங்கள் பட்டு பாவாடை சட்டையிலும் மண்டபத்தையே வலம் வந்துக்கொண்டிருந்தனர்.ஆதவன் கண்ணில் சிக்குபவர்ளிடம் எல்லாம் வம்பிழுக்க ஆரம்பித்தான். அதிகாலையிலேயே திருமண முகூர்த்தம் முடிந்துவிட்டது, ஆதவனும் இளவேனிலும் தனியாய் ஒதுங்கி பேச ஆரம்பித்தனர்,
இளவேனில், “என்ன மாமா, நைட் நிம்மதியா தூங்கிட்ட போல”
“ஆமா டா நைட் உங்கிட்ட பேசினதுக்கு அப்புறம் தான் எனக்கு என்னோட குழப்பத்துக்கு எல்லாம் ஒரு தீர்வு வரும்னு நம்பிக்கை வந்துச்சு”
“அது பத்தி தான் உங்கிட்ட பேசலாம்னு நினைச்சேன், நீ சொன்ன பார்த்தியா பசங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கு, அதுக்கு அப்புறம் தான் நான் நல்லா யோசிச்சு பார்த்தேன் எனக்கு பொண்ணுங்க மேல மட்டும் இல்லை ஒரு சில பசங்க மேலயும் கூட ஈர்ப்பு இருக்கு, அதாவது கண்ணுக்கு அழகா லட்சனமா இருந்தா திரும்பி பார்க்க தோணுது, அதுக்கு அப்புறம் இது போனவருஷம் ரிலிஸ் ஆன ஒரு விஜய் படத்துல விவேக், ஆம்பிளையும் – ஆம்பிளையும் ஏர்த் ஆவங்க, பொம்பிளையும் பொம்பிளையும் பையர் ஆவாங்கனு ஒரு டைலாக் சொல்லுவார், அது பத்தி நான் கொஞ்சம் விசாரிச்சேன் சிலவற்றை நான் படிச்சேன் அப்போதான் எனக்கு சில விஷயங்கள் தெரியவந்துச்சு, அதாவது, இப்ப நாம இருக்குறது 2000 இப்போதைக்கு வெளி நாடுகளில் அதாவது அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் LGBT பாலின சிறூபான்மையினர் அப்படினு சொல்லுவாங்க அதாவது Lesbiens, Gay Bi-Sexuals, Transgenders சொல்லுவாங்க, நீ சொல்லுறதை பார்த்தா, நீ ஒரு கே அதாவது ஆண் ஒரு பால் ஈர்ப்புனு சொல்லாம், நான் பை – ஆண்கள் மேலையும் பெண்கள் மேலையும் இப்ப எனக்கு ஈர்ப்பு இருக்கு, காலம் மாற மாற உனக்கும் சரி எனக்கு சரி இது எப்படி வேணாலும் மாறலாம், உன்னை மாதிரியே என்னை மாதிரியே மக்கள் எங்க வேணுனாலும் இருக்கலாம் ஏன் இந்த கல்யாண கூட்டத்தியே கூட இருக்கலாம், அவங்களுக்கும் இதே மாதிரியான உணர்வுகள் இருக்கும் ஆனா அதை ஓப்பனா வெளிய சொல்லிக்கமாட்டாங்க”
“ஏன் சொல்லிக்க மாட்டாங்க?”
“உனக்கு இருக்குற உணர்வுகளை நீ வெளிய சொன்னியா, தயங்கி தயங்கி தானே எங்கிட்டயே சொன்னே, நாம இருக்குறது இந்தியா, அமெரிக்கா இல்லை, அமெரிக்காவுலையே, இன்னும் நிறைய மாகாணத்துல இந்த பாலின சிறுபான்மையினர்களை சட்ட பூர்வமா ஏத்துக்கலை, ஆனா அதிகபடியான மக்கள் மனசார ஏத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க”
“அப்ப நம்ப நாட்டுல?”
“அமெரிக்காவுலயே இப்ப தான் ஒரு சில மாகாணத்துல ஏத்துக்குறாங்கனா, இந்தியா மாதிரியான, அதும் நம்ப தமிழ்நாட்டுல இப்ப நம்பளை பத்தி எல்லாம் புரிஞ்சுக்க மாட்டாங்க, அது பத்தி தெரியவறத்துக்கே பல வருடங்கள் ஆகும், இப்பவே இது இயற்கைக்கு ஏதிரானதுனு ஒரு கூட்டம் சொல்லிகிட்டு சுத்திக்கிட்டு இருக்கு, மொதல்ல அவங்களுக்கு இத பத்தி சொல்லி கேக்க வச்சு அதுக்கு அப்புறம் புரியவச்சு பெரும்பாலான மக்களுக்கு தெரியவந்து, இதுவும் இயற்கை தானு புரியவச்சு, அதுக்கு அப்புறம் இதை சட்டபூர்வமாக்கி நம்பளை போல உள்ளவங்க வெளிப்படையா சொல்லி, அவங்களை மத்த பொது சமூகம் கிண்டல் செய்யாம ஏத்துக்க ஆரம்பிச்சு, அதுக்கு அப்புறம் தான் நம்பளை மாதிரி உள்ளவங்களை கண்டுபிடிக்கவே முடியும்”
“நம்ப ஊருல இப்பதான் கம்ப்யூட்டரே பரவலா பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க, இத்தனை விஷயங்களை எங்க தெரிஞ்சுகிட்ட? எப்ப தெரிஞ்சுக்கிட்ட?”
“அதுவா, எங்க ஸ்கூல ஒரு பழக்கம் இருக்கு தினமும் எங்க கிளாஸ்ல யாராச்சும் செய்திதாள் படிச்சுட்டு வந்து செய்தி சொல்லனும், என்னுடைய முறை வந்தது, நானும் செய்திதாள் படிச்சேன், அப்போ நாலாவதோ இல்லை ஐந்தாவது பக்கத்துல வந்துச்சு இது பத்தி யார் யார்கிட்டையோ கேட்டேன் யாரும் சொல்லலை, அப்புறம் ஒரு சின்ன வயசு வாத்தியார் லைபிரேரில ஒரு English Book எடுத்து கொடுத்து படிக்க சொன்னார், நான் அதை ஒளிச்சு ஒளிச்சு படிச்சேன், அப்புறம் அதுல வர சந்தேகத்தை எல்லாம் அவர்தான் தீர்த்துவச்சார், அப்ப தான் இது பத்தி எல்லாம் எனக்கு தெளிவு வந்துச்சு, எனக்கும் இது பத்தி எல்லாம் யார்கிட்டையாச்சும் பேசனும்னு இருந்துச்சு”
“டேய் இளா சூப்பர், எப்பவும் போல நீ தான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கே, சரி நம்பளை மாதிரி இருக்குறவங்களை எப்படி கண்டுபிடிக்கிறது”
“பாக்கலாம் இங்க இப்ப தான் கம்ப்யூட்டரே வந்துருக்கு போக போக ஏதாச்சும் வசதி டெக்னாலஜி வந்தா பார்க்கலாம்”
“சரி அமெரிக்காவுல என்னை மாதிரி கேஸ் எல்லாம் இருக்காங்கனு சொன்னே இல்லையா அவங்க எப்படி வாழுறாங்க, அவங்க வாழ்கை முறை எப்படி எல்லாம் இருக்கும் சொல்லேன்”
இளவேனிலும் இரண்டு கே பசங்களை பற்றியும் அவர்கள் காதலிப்பது ஒன்றாய் சேர்ந்து வாழ்வது, அதில் வரும் பிரச்சனைகள் இது பற்றியெல்லாம் கூற கூற ஆதவனுக்கு தன் மனதுக்கு பிடித்த ஒரு ஆண்மகனை காதலித்து வாழ்கையில் செட்டில் ஆவது என்று ஒரு ஆழமான ஆசை ஒன்று குடிகொண்டது.வந்திருந்த தூரத்து சொந்தங்கள், நண்பர்கள், உடன் பணி புரிபவர்கள் என கொஞ்சம் கொஞ்சமாய் கிளம்ப தொடங்கினர்.
நெருங்கிய சொந்தகள் மட்டும் மண்டபம் முழுக்க ஆங்காகே கூட்டம் கூட்டமாய் அமர்ந்து யாரை பற்றியாவது பேசிக்கொண்டு, சிரித்துக்கொண்டும் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாய் சொந்தங்கள் குடும்பம் குடும்பமாய் மணமக்களோடு போட்டோ வீடியோவுக்கு போஸ்கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆதவனின் முறையும் வர, அப்பா அம்மா மணமக்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது தான் ஒன்றை கவனித்தான், மணமகனுக்கும் மணமகளுக்கும் சுத்தமாய் பொருத்தமே இல்லை, என்று ஆதவனுக்கு தோன்றியது. இது பற்றி ஆதவன் அவன் அப்பாவிடம் விசாரித்தான்
அப்பா, “எனக்கு என்ன டா தெரியும், உனக்கு எப்படி தோனுச்சோ அதே மாதிரி தான் எனக்கு தோனுச்சு, எங்க அக்காகிட்ட கேட்டேன், அவளுக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்லைனு தான் சொன்னா, பொண்ணு பார்க்கவே சும்மா பார்மாலிட்டிக்கு தான் போறாதா சொன்னா, அப்புறம் வந்து பார்த்தா மாப்பிள்ளை பையன் பொண்ணை புடிச்சிருக்கு கட்டினா இவளை தான் கட்டுவேனு சொல்லி கட்டிக்கிட்டான், உங்க அம்மா விடுவாளா, உண்மையான காரணத்தை கேட்டு அலைஞ்சா, நீ வேணா உங்க அம்மாகிட்ட கேளேன்”
உடனே இதுபற்றி ஆதவன் இளவேனிலிடம் கூற இருவரும் ஆதவனின் அம்மாவை அட்டாக் செய்ய அவன் அம்மாவோ “ஆமா இது பெரிய உலக ரகசியம், உங்க அத்தை பையனுக்கு பொண்ணு எல்லாம் புடிச்சு போய் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை, பொண்ணு வீடு கொஞ்சம் பணக்கார வீடு பொண்ணு மாசத்துக்கு 45 ஆயிரம் சம்பாதிக்குது, பொண்ணு கூட பொறந்தவங்கனு யாரும் இல்லை, நிறைய காசு பணம் வரும்னு கல்யாணத்துக்கு ஒத்துக்குறான், பொண்ணு வீடு மட்டும் என்ன ஏற்கனவே அவ யாரையோ காதலிச்சு கழட்டிவிட்டு போய்ட்டானாம், இது தோண்ட தோண்ட நிறைய கதைகள் வரும், ஆனா இது பத்தி எல்லாம் நீங்க ஏதுக்கு டா கேக்குறீங்க”
இளவேனில், “அதுவா அத்தை, மாப்பிள்ளை பையன் அது தான் எங்க பெரியம்மா பையன் அப்பப்போ, கல்யாணம் பன்னினா, அழகான அம்சமாம பொண்ணு தான் பன்னுவேனு இப்படி வேணும் அப்படி வேணும்னு பெரியம்மாகிட்ட சொல்லிட்டே இருப்பானாம், இன்னிக்கு என்ன சடனா இப்படி ஒருத்தரை கல்யாணம், பன்னிகிட்டானேனு கேட்டேன்”
“டேய் ரெண்டு பேரும் வயசுக்கு மீறி பேசிக்கிட்டு இருக்கீங்க, ஒழுங்கா போய்டு இல்லை எங்கிட்ட அடிவாங்குவே” என்று ஆதவனின் அம்மா செல்லமாய் விரட்ட இருவரும் ஓடிவிட்டனர். ஒரு வழியாய் குரூப் போட்டோக்கள் எல்லாம் எடுத்துவிட்டு, மாப்பிள்ளையும் பெண்ணை தனியாக அழைத்து செல்ல மாப்பிள்ளை ரூமில் தனியாக இருக்க, ஆதவனும் இளவேனிலும் மாப்பிள்ளையிடம் பேச்சு கொடுக்க
ஆதவன், “ஏன் மாமா, கட்டிக்க போற பொண்ணு எப்படி வேணும்னு கேட்டப்போ ஒரு பெரிய லிஸ்ட்டே சொல்லுவே இப்ப அதுல ஒன்னு கூட இந்த அக்காளுக்கு இல்லையே எப்படி மாம்ஸ் ஒத்துக்கிட்டே”
“அதுவா டா, அது ஆசை பட்டேன், நாம ஆசை படுறது எல்லாம் எங்கடா நடக்குது, அதுக்கு எதிர்மாறாதான் நடக்குது டா, எனக்கு மட்டும் என்ன ஆசையா என்ன, எனக்கு வயசு 31 ஆகிடுச்சு, இதுக்கு மேல எனக்கு எவன் பொண்ணு தருவான், இவங்க கொடுக்குறேனு சொன்னாங்க, அதும் இல்லாம இந்த பொண்ணு பெரிய வேலைக்கு போகுது, ஏகப்பட்ட சொத்து இருக்கு, நாளைக்கு நான் பிசினஸ் ஆரம்பிச்சா சப்போர்ட் பன்னுவாங்க, அதுக்காக தான் ஒத்துக்கிட்டேன், ஆசைபடுற வாழ்கை கிடைக்காட்டி, கிடைக்குற வாழ்கையை ஆசைபட்டு ஏத்துக்கிடனும், அது தான் வாழ்கை பாடம்” என்று கூறும் பொழுது அந்த மாப்பிள்ளை பையனின் ஆதங்கமும், விரக்தியும் தெரிந்தது.
பெண் வீட்டுக்காரர் ஒருவர் நுழைய, “டேய் இங்க என்ன பன்னுறீங்க, வெளிய போய் விளையாடுங்க, மாப்பிள்ளை எங்கூட வேலை பாக்குறவங்க வந்துருக்காங்க, மாலைய போட்டு மேடைக்கு வந்தா…”ஆதவனும் இளவேனிலும் மாப்பிளை ரூமைவிட்டு வெளியேறிவிட மாப்பிளை நிமிடத்தில் தயாராகி மாலையும் கழுத்துமாக ஒரு போலியான புன்னகையை முகத்தில் கட்டாயபடுத்தி வரவழைத்துக்கொண்டு மேடைக்கு வந்தான், இதை எல்லாம் ஆதவன் கவனிக்க தவறவில்லை.
அடுத்ததாய் ஆதவன் உள்ளிட்ட அனைத்து சொந்த கார இளவட்டங்களும் பந்தியில் அமர்ந்து காலை டிபனை ஒரு பிடி பிடித்தது. பிறகு மாப்பிளையும் பெண்ணையும் அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை, பெண் வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் அழைத்துக்கொண்டு பெரியவர்கள் சென்றிருந்த நேரத்தில் மீண்டும் ஆதவனும் இளவேனிலும் மண்டபத்தையே பேசிக்கொண்டே சுற்றி வந்தனர்.
ஆதவன், “என்ன டா எப்படி இருந்த உன் அண்ணன் இப்படி ஆகிட்டான், நான் எல்லாம் இந்த மாதிரி காம்ப்பிரமைஸ் எல்லாம் பண்ண முடியாது டா”
“காம்ப்ரமைஸ் பண்ணாத அளவுக்கு அப்படி என்ன தலைவர் எதிர்பார்ப்பு வச்சிருக்கீங்க, சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம் இல்லை”
“மொதல்ல என்னோட லைப்ப கண்டிப்பா ஒரு பையன் கூடதான் அமைச்சுக்க போறேன், அந்த அவனை நான் கண்டதும் காதல் வந்தாலும் சரி பேசி பழகி நண்பர்கள் ஆகி காதலர்கள் ஆனாலும் சரி, அவனை உருகி உருகி காதலிக்கனும் சின்ன சின்னதா சண்டை போடனும், அதுக்கு அப்புறம் நானே போய் சமாதானம் பன்னனும், ரெண்டு பேரும் அடிக்கடி வெளி ஊர் வெளி நாடுனு சுத்தனும்”
இளவேனில், “இது எல்லாம் விடு, ஆளு பார்க்க எப்படி இருக்கனும், அதை சொல்லு”
“ம்ம்ம்…. எப்படி சொல்ல, நல்லா, சிட்டி பாயாவும் இல்லாம, கிராமத்து எடக்கு நாட்டான் மாதிரியும் இல்லாம, நடுவுல இருக்கனும், கருப்பா இருந்தாலும் சரி கலரா இருந்தாலும் சரி, ஆளை பார்த்ததும் என் கண்ணுக்கு அவன் அழகா தெரிஞ்சா போதும், கண் மட்டும் ரொம்ப பவர் புல்லா இருக்கனும், அவன் ‘பார்வை ஒன்றே போதுமே’ அப்படினு நினைக்குற அளவுக்கு இருக்கனும், எப்பவும் சிரிச்ச முகமா இருக்கனும், படிச்சிருந்தாலும் சரி படிக்காத ஆளா இருந்தாலும் சரி பணம் ஒரு பெரிய பொருட்டா நான் நினைக்கமாட்டேன், அதுக்கு அப்புறம் என்ன சொல்லுறதுனு எனக்கு தெரியலை, ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுறேன், அவனை பார்த்ததும் எனக்குள்ள ஒரு மாற்றதை கொண்டு வரனும், அந்த மாதிரி இருக்கனும்”
“ம்ம்ம், நீ சொல்லுறதை கேக்குறதுக்கு நல்லா இருக்கு, இந்த கூட்டத்துலயே அவன் இருக்கானா தேடி பார்”
“நான் இந்த தமிழ் சினிமா ஹீரோ மாதிரி எல்லாம் தேடி எல்லாம் போக மாட்டேன், நமக்கு எது கிடைக்கனும்னு இருக்கோ அது தானாவே நடக்கும், பழத்தை கட்டாயபடுத்தி பழுக்க வைக்ககூடாது, அது தானா பழுத்து வரும் போது தான் ருசி அதிகம் டா மாப்ளே”
“என்னமோ சொல்லுறே நானும் கேட்டுக்குறேன், சரி வா சாப்ப்பிட போலாமா”
“என்ன டா இப்பதான் 7:30 மணிக்கு சாப்பிட்டே, மணி 10:30 தானே ஆகுது மறுபடியுமா”
“ஆமா பசிக்குது வா போலாம்” இருவரும் மறுபடியும் பந்தியில் அமர போக கூட்டம் எதும் இல்லாமல், சமைப்பவர்கள் பரிமாருபவர்கள் என கேட்ரிங் ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டுகொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள் நுழைய, அங்கிருந்தபெரியவர் ஒருவர், “டேய் சாப்பிட ஆள் வந்துருக்கு டேய் இலைய போடுங்க டா…” என அதட்ட,
இளவேனில், “சாப்பிட உக்காந்தவங்களை எழுப்பாதிங்க, நீங்க சாப்பிடுங்க நாங்க உக்காந்திருக்கோம்” ஒரு இலையில் 10 நிமிடம் உக்காந்திருக்க ஒருவன் வந்து ஒவ்வொரு ஐட்டங்களாக பரிமாறிக்கொண்டிருந்தவன் அதே வழியா சென்ற ஒருவனை பார்த்து
“டேய் சத்யா அந்த சாம்பார் பக்கட் எடுத்துட்டு இங்க வா” என அழைக்க அவனும் சாம்பார் பக்கட்டுடடன் வந்து இலையில் ஊற்ற, மண்டப வாசலில் மேளம் அடிக்க திடீரென சத்தம் கேட்டதால் சற்றே பயந்து அதை வெளி காட்டினான் ஆதவன்.
சாம்பார் ஊற்றிக்கொண்டிருந்த சத்யா, “ஒன்னும் இல்லை தவில் காரங்க அடிக்கிறாங்க, திடீர்னு கேட்டதும் பயந்துடீங்களா” என கேட்டதும் தான் ஆதவன் நிமிர்ந்து அந்த சத்யாவை நேருக்கு நேர் பார்த்தான். ஆதவனுக்கு அந்த சத்யா என்ற பெயர் தன்னை சுண்டி இழுப்பது போல இருந்தது, மேற்கொண்டு அங்கே என்ன நடக்கும் காத்திருங்கள் அடுத்த இதழ் வரை. (தொடரும்…)
நன்றி
வணக்கம்
-இனியவன்