இதுவரை:

 

ஆதவன், தன் உறவினர் திருமணத்தில் பார்த்த அந்த சத்யா, தன் எதிர்பார்த்த அத்துனை அம்சங்களும் அவனிடம் இருந்தனால், அவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அதோடு ஆதவனின் அத்தை மகன் இளவேனில் அவன் கல்லூரியில் பார்த்து பேசுவதற்க்காக வந்திருந்த பொழுது, எதேச்சையாக அங்கு அந்த சத்யாவை பார்த்து பேசுவதற்க்காக, சத்யா…. சத்யா… என கத்திக்கொண்டே ரோட்டை கடக்க முயற்சி செய்ய….

 

இனி…

 

ஆதவன், “சத்யா…. சத்யா… நில்லு சத்யா…” என கத்திக்கொண்டே ரோட்டை கடக்க முயற்சிக்க எங்கிருந்தோ வந்த ஒரு பைக்கின் மீது மோதி அடிபட்டு கீழே விழுந்தான். கிட்டதட்ட 45 நிமிடத்தில் அதே ஏரியாவில் உள்ள மருத்துவமனையில் முட்டியில் பெரிய பேண்டேஜ் உடன் அமர்ந்திருக்க.

 

விஷயம் தெரிந்து, ஆதவனின் அப்பா அம்மா, மற்றும் இளவேனில் என வந்துவிட, ஆதவனின் அம்மா அழுதுகொண்டிருந்தாள், அப்பா, “என்ன டா ஆச்சு உனக்கு எப்படி இங்க வந்து விழுந்தே?”

 

“அது ஒன்னும் இல்லை பா, இளா தான் என்னை பார்க்கனும்னு சொன்னான், சரினு காலேஜ் முடிஞ்சு இங்க வந்தேன், இவனுக்கு ஸ்பெசல் கிளாஸ் இருந்துச்சு, நானும் ரோடு வெளிய வேடிக்கை பார்க்க வந்தேன் எதிர் பஸ் ஸ்டாப்புல என் பிரண்டு சத்யானு ஒருத்தன் போய்ட்டு இருந்தான் அவனை பார்த்துகிட்டே போய் வண்டியில இடிச்சு கீழ விழுந்துட்டேன், அவன் தான் என்னைய இந்த ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிகிட்டு வந்தான், உங்களுக்கு எல்லாம் நான் தான் நம்ப வீட்டு நெம்பர் குடுத்து போன் பன்ன சென்னேன்”

 

அம்மா, “ஆமா ஒரு பையன் தான் எனக்கு போன் பன்னி ஆதவனுக்கு ஒரு சின்ன ஆக்சிடெண்ட் உடனே, இந்த ஹாஸ்பிட்டல்ல பேர் சொல்லி ஒரு சிக்கிரம் வாங்கனு போன் பன்னினான், அதுக்கு அப்புறம் தான் நான் அப்பாவை அழைச்சுகிட்டு வந்தோம்”

 

ஆதவன், “நீ எப்படி டா வந்தே?”

 

“ஸ்பெசல் கிளாஸ் முடிச்சு நம்ப வழக்கமான டீக்கடைக்கு வந்தேன், அந்த டீ மாஸ்ட்டர் தான் சொன்னாரு, இங்க வந்து பார்த்தா ஏற்கனவே மாமாவும் அத்தையும் இருக்காங்க”

 

அப்பா, “அது சரி எங்க அந்த சத்யா? அந்த புள்ளைய கூப்பிடு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு போகலாம்”

 

ஆதவன், “அவன் வேலைக்கு போறவன், எனக்காக தான் ஹாஸ்பிட்டல் வந்து கட்டு போட்டதும் கிளம்பிட்டேன் நாம அப்புறமா பார்க்கலாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்”

 

இளவேனின், “மாமா எதுக்கும் டாக்ரை ஒரு முறை பார்த்து பேசிட்டு வந்துடலாம்” என ஆதவன் அப்பா அம்மாவை அந்த இடத்திலிருந்து கிளப்பிவிட்டு, ஆதவனிடம் தனியாக பேச்சுகொடுக்க ஆரம்பித்தான்

 

“டேய் ஆதவா, யார் அந்த சத்யா உன் காலேஜ் பிரண்டா? இவனை பத்தி நீ சொல்லவே இல்லையே”

 

“காலேஜ் பிரண்டும் இல்லை ஒன்னும் இல்லை, அன்னிக்கு கல்யாணத்துல பந்தியல பார்த்து நான் ஜொல்லுவிட்டதா ஓட்டினியே அந்த பையன் தான் நான் உங்கிட்ட ஒரு எனக்கு வர போற ஆளுக்குனு சில எதிர்பார்ப்பு இருக்குனு சொன்னேன் இல்லை அது எல்லாம் அவங்கிட்ட இருக்குடா, உண்மைய சொல்லனும்னான், அவனை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, எப்படி அவங்கிட்ட போய் பேசுறதுனே தெரியலை, அவனை அப்படியே நான் மறந்துட்டேன்,  நீயும் உங்க அப்பாவும் காலேஜ் சேர்ந்த அன்னிக்கு ஞாபகம் வந்துச்சு….” என பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதவனின் அப்பா, அம்மா டாக்டரை அழைத்து வந்து அவனும் ஏதே செக்பன்னிவிட்டு

 

“எழும்புல எதும் அடிபடலை முட்டியில மட்டும் கொஞ்சம் சதை கிழிஞ்சிருக்கு, அதுக்கு மருந்து வச்சிருக்கு  T T இஞ்செக்சன் போட்டிருக்கேன் ரெண்டு நாளைக்கு தண்ணி படாம பார்த்துக்கோங்க, ரெஸ்ட் எடுத்துகோங்க” ஆதவன் அவன் அப்பா அம்மாவோடு வீட்டுக்கு வந்துவிட்டான். இளவேனில் ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டான்.

 

அன்றை இரவு, சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டதனால் ஆதவன் நன்கு உறங்கிவிட்டான். விடியற்காலை, ஆதவனுக்கு அடிபட்டதிலிருந்து நேற்று சத்யாவும், ஆதவனும் முதன் முதலாக பேசிக்கொண்டது, எல்லாம் ஆதவனுக்கு அரை தூக்கத்தில் கணவாக வந்து இம்சை செய்துகொண்டிருந்தது, திடிரென எழுந்த ஆதவனுக்கு உடலெல்லாம் ஒரே வலி தான் எங்கிருக்கின்றோம், எதனால் தனக்கு உடலில் இவ்வளவு வலி என தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் பிடித்தது. மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தால் அவன் அம்மா டீவியில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

“எந்திரிச்சுட்டியா? இப்ப எப்படி டா இருக்கு உடம்பு பரவாயில்லையா?”

 

“பரவாயில்லை ஆனா ரொம்ப டையர்டா இருக்கு”

 

“சரி சரி போய் டவல் பாத் எடுத்துகோ நான் உனக்கு சாப்பிட எடுத்து வைக்குறே”

 

ஆதவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது பக்கத்து வீட்டு ஆண்டி வந்து, “ஆதவன் அம்மா, ஆதவன் அம்மா….”

 

ஆதவன், “அம்மா கிச்சன்ல இருக்காங்க…, அம்மா, அம்மா இங்க பாரு யாரு வந்துருக்காங்கனு…”

 

அம்மா வருவதற்க்குள், பக்கத்து வீட்டு ஆண்டி, “என்ன தம்பி இன்னிக்கு காலேஜ் போகலையா, வீட்டுல இருக்கே”

 

ஆதவன், “ஒன்னும் கொஞ்சம் உடம்பு சரியில்ல…” கிச்சனுக்குள் இருந்து கையில் தோசையுடன் வந்த அம்மா,

 

“என்ன சுந்தர் அம்மா, என்ன ஆச்சு சிலிண்டர் எதும் தீர்ந்து போச்சா?”

 

“என்ன ஆதவன் அம்மா மறந்து போச்சா, நேத்து தான் பேசினோமே, சோமாஸ் பன்னலாம் நான் சொல்லிதறேனு சொன்னிங்களே, அது தான் தேவையானது எல்லாம் வாங்கி வச்சுட்டேன் எல்லாதையும் கிளப்பி அணுப்பிட்டேன் இனி நமக்கு தொந்தரவே கிடையாது, வாங்க போலாம்”

 

ஆதவன் அம்மா, “ஆதவா, நீ சாப்பிட்டு மாத்திரை போட்டு இங்கயே இரு நான் இவங்க வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன்….”

 

“நான் இப்பதைக்கு தூங்க மாட்டேன், நீங்க போய்ட்டு வாங்க…”

 

இரண்டு பெண்களும் பக்கத்தில் உள்ள காம்பிளக்ஸ் வீட்டில் இரண்டாவது மாடிக்கு சென்றுவிட்டனர். ஆதவனும் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டு, டீவி பார்க்க சோபாவில் அமர்ந்தான் “காத்தடிக்குது… காத்தடிக்குது… காசி மேட்டு காத்தடிக்குது..” என்ற புதிய பாடல் ஓடிக்கொண்டிருந்தது 15 நிமிடத்திற்க்கு பிறகு, அரை தூக்கத்தில் கணவில் இம்சை செய்தது எல்லாம் நினைவுக்கு வந்தது, “இது எல்லாம் நிஜத்துல நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும், ம்ம்ம்… நல்லாதான் இருக்கும் ஆனா ஆசை யாரை விட்டது” என தனக்கு தானே பேசிக்கொண்டிருக்கும் பொழுது காலிங்க் பெல் அடித்தது

 

“அம்மா போகும் போது நாம கதவை தாழ்ப்பாள் போடலியே, யாரா இருக்கும்” பேசிக்கொண்டே மெதுவாக எழுந்து நொண்டி நொண்டி சென்று கதவை திறந்தால், ஆதவனுக்கு அதிர்ச்சி, வாசலில் சத்யா நின்றிருந்தான்.

 

“ஹேய் சத்யா… வா வா உள்ள வா…” ஆதவன் நொண்டிக்கொண்ருப்பதை பாத்து சத்யா, ஆதவனை தனது தோளில் தாங்கிக்கொண்டே சோபாவில் அமரவைத்து தானும் அருகே அமர்ந்தான்.

 

“என்ன ஒரு ஆச்சரியம், அதிசயம் இப்ப தான் உன்னை நினைச்சுட்டு இருந்தேன், உன்னை மறுபடியும் எங்க பாக்குறது எப்போ பாக்குறதுனு”

 

“அது தான் நீ நினைச்சதும் நான் வந்துட்டேன் இல்லை, சரி கால் எப்படி இருக்கு”

 

“உடம்பெல்லாம் வலிக்கிது, கால் முட்டியில மட்டும் எக்ஸ்ட்டிரா வலி”

 

“சரி சரி ஒன்னும் ஆகாது எல்லாம் சரியாகிடும்”

 

“சரி நீ எப்படி இங்க?”

 

“ஒன்னும் இல்லை, இங்க ஒரு வேலைக்காக வந்தேன், முடிஞ்சுது, சரி உன்னை பாத்துட்டு போலாம்னு வந்தேன்”

 

“சரி வீடு எப்படி அடையாளம் தெரியும்”

 

“அட லூசு பையலே, உன் ID Card எங்கிட்டதானே இருக்கு, அதுல தான் உன் அட்ரஸ் போன் நெம்பர் எல்லாமே இருக்கே”

 

“அட ஆமா இல்லை நான் இதை யோசிக்கவே இல்லை…” என அசடு வழிந்தான் ஆதவன்

 

சத்யா, “சரி நீ தப்பா எடுத்துக்காட்டி நான் ஒன்னு கேக்கட்டுமா?”

 

“கேளு…”

 

“சரி நேத்து என்னைய பார்த்ததும் ஏன் அப்படி ஓடி வந்தே?”

 

“அட கல்யாணத்துல பார்த்த பையன் ஏதேச்சையா இங்க பாக்குறேமே, சரி உங்கிட்ட பேசலாமேனுதான் அவசரமா வந்தேன், அதுக்குள்ள இப்படி ஆகிடுட்டுச்சு”

 

“அந்த கல்யாணத்துல எத்தனையோ பேர் தான் வந்தாங்க போனாங்க எல்லார்கிட்டையுமா, இப்படி தேடி தேடி போய் பேசுறே?”

 

“அட தெரிஞ்ச முகமா இருக்கே, பேசி பழகிக்கலாம்னு தான்…”

 

“இப்ப என்ன உனக்கு என்னை பத்தி தெரிஞ்சுக்கனும், எங்கூட பழகனும் அவ்வளவு தானே” ஆதவனும் ஆமா என தலை ஆட்ட

 

“என் பேர் சத்யா, எனக்கு இப்ப 19 வயசு ஆகுது, எனக்கு அப்பா அம்மானு யாரும் கிடையாது ஒரே ஒரு அக்கா தான் என்னையவிட 5 வயசு மூத்தவ, அவ என்னைய கஷ்டபட்டு +2 வரைக்கும் படிக்க வச்சுட்டா அவளே போய் கல்யாணமும் பன்னிக்கிட்டா, எப்பயாச்சும் நோம்பி நொடினா வருவா போவா, நானும் நல்லது கெட்டதுனு என்னால முடிஞ்சதை பன்னுவேன், இப்ப கொஞ்ச நாளா அக்கா, புருஷன் கிட்ட சண்டை போட்டு வந்து குழந்தையோட இங்க வந்துட்டா. இது தான் நான் பார்த்துக்குறேன்”

 

ஆதவனும் அவனை பற்றியும் குடும்ப பின்னனியை பற்றியும் நிறைய கூற, “அடேயப்பா வானத்தை போல படத்துல வர மாதிரி இத்தனை சொந்தகாரங்களா” என கூறும்பொழுது குடும்பம். சொந்ததுக்கான ஏக்கம் தெரிந்தது.

 

சத்யா, “சரி நான் உங்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நினைச்சேன், என் வீடு அந்த ஏரியாவுல இருக்கு அதனால நான் அங்க வந்தேன், நீ எதுக்கு அங்க வந்தே?” “பஸ் ஸ்டாப் பக்கத்துல ஒரு காலேஜ் இருக்கு இல்லை அங்க தான் என் அத்தை பையன் படிக்குறான் நாங்க அடிக்கடி பார்த்துக்குவோம், நேத்தும் அவனை பார்க்கதான் வந்தேன்”

 

ஆதவனும் சத்யாவும் மேலும் சில பல நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு,

 

“சரி ஆதவா, நான் கிளம்புறேன், எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு, உடம்பை பார்த்துக்கோ, உங்க அப்பா அம்மா வந்தா சொல்லு நான் போய்ட்டு வரேன்”

 

“சரி மறுபடியும் எப்ப பார்க்கலம்”

 

“அது தான் இப்ப ஃபிரண்ஸ் ஆகிட்டோம் இல்லை, எனக்கு தான் வீடு தெரியும் இல்லை, இந்த பக்கம் வந்தா கண்டிப்பா வரேன், நீ காலேஜ் பக்கம் வந்தா கண்டிப்ப வீட்டுக்குவரனும்”

 

சத்யாவுக்கு கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினான். ஆதவனுக்கு சத்யாவின் நட்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி, அப்படியே வானத்தில் ரெக்கை கட்டி பறப்பது போல உணர்ந்தான்.

 

“அடி ஆத்தாடி இள மனசு ஒன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா…” என பாடலை பாடிக்கொண்டிருந்த வேளையில் ஆதவனின் அம்மா, வீட்டுக்குள் நுழைய,

 

“என்ன டா கால்ல அடிபட்டும் அமைதியாவே இருக்க மாட்டியா, பாட்டும் கூத்தும், சத்தம் வெளிய வரைக்கு கேக்குது”

 

“ஹலோ அம்மா அடிபட்டது கால்லதான் பாட்டு வாய்ல தானே பாடுறேன்”

 

“டேய் நீ காலேஜ் எதை கத்துக்கிட்டு வந்தியோ இல்லையே, நல்லா வாயடிக்க கத்துக்கிட்ட டோய்…”

 

“என்ன மா பாதியிலயே வந்துட்டே”

 

“மாவு பிசஞ்சு வச்சுட்டு வந்துருக்கேன், மதியானமா போகனும்…”

 

“அம்மா வந்தது தான் வந்தியே கொஞ்சம் முன்னாடி வந்துருக்க கூடாது, இப்பதான் என் பிரண்டு சத்யா வந்துட்டு போனான்”

 

“யாரு நேத்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தானே அந்த பையனா?, ஏண்டா என்னை கூப்பிட மாட்டியா?”

 

“எங்க மா நீ கூப்பிடுற தூரத்துலையா இருந்தே, பக்கது காம்பிளக்ல அதும் இரண்டாவது மாடியில இருக்கே”

 

“பாவம் வந்த பையனுக்கு, காப்பிகூட கொடுக்க முடியலை, உங்களை எல்லாம் கேட்டதா சொன்னான், இன்னொரு நாள் வரதா சொன்னான்”. அன்றைய பகல் அப்படியே முடிந்துவிட்டது மாலை 6:30 போல ஆதவனின் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வர, சத்யா வந்ததை பற்றி ஆதவன் கூற, அப்பாவோ, “ஒரு நாளைக்கு மதியம் சாப்பாட்டு அழைப்பு விடுத்தார்.

 

மணி சரியாக 7 நொண்டி நொண்டி லேண்ட் லைன் போன் இருக்கும் இடத்துக்கு சென்று, இளவேனிலின் ஹாஸ்டலுக்கு போன் செய்ய, மறுமுனையில்

 

இளவேனில் “ஹலோ, டேய் ஆதவா, இப்ப கால் எப்படி இருக்கு” என்ற நலம் விசாரிப்பில் தொடங்கி அன்று சத்யா வீடிற்க்கு வந்தது பேசிக்கொண்டிருந்தது நண்பர்கள் ஆனது பற்றி எல்லாம் சந்தோசமாய் கூறினான் ஆதவன். “என்ன டா ஆதவா, பயங்கர சந்தோசத்துல இருப்ப போல, விட்டா இப்பவே துள்ளி குதிப்ப போல”

 

“ஆமா இருக்காதா பின்ன என் எல்லா எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஒருத்தனை பார்க்க மாட்டோமானு இருந்தேன், அப்படி பட்ட ஒருத்தனை எதேச்சையா பார்த்து, அவனை தொலைச்சு, ரொம்ப நாள் கழிச்சு அவன் கிடைச்சு, எனக்கு உதவி பன்னி, என் வீட்டுக்கே வந்து, இப்ப எனக்கு அவன் நண்பனா இருக்கான், இதுக்கு மேல உலகத்துல வேற என்ன சந்தோசம் இருக்க முடியும்”. “இது எல்லாம் சரி தான் ஆனா காதல்னு வரைக்கும் போகுமா, அப்படியே போனாலும் நிலைக்குமானு சந்தேகம் தான்…”

 

என ஆதவனின் சந்தோசத்துக்கு இளவேனில் முட்டுகட்டை ஒன்று போட்டு சந்தேகத்தை வேறு கிளப்பிவிட்டான். மேற்கொண்டு அவர்கள் என்ன பேசினார்கள் என தெரிந்துகொள்ள காத்திருங்கள் அடுத்த அத்யாயம் வரை.

 

(தொடரும்…)

 

– இனியவன்

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன