அத்தியாயம் – 1
மாலை நேரம் தெரு முனையில் பல்வேறு வயதுகளில் அந்த தெருவில் உள்ள குழந்தைகள் அணைவரும் பயங்கர சத்தம் கூச்சலுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். தனது அறையில் எதையோ இழந்தது போலே விட்டத்தை பார்த்த படியே தனது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தான் ஆதவன்.
“ஆதவா….. டேய் ஆதவா….” என்ற பெண்குரலை சுத்தமாய் மதிக்காமல் தன் படுக்கையில் கவிழ்ந்து படுத்து ஆழ்ந்து யோசனையில் படுத்திருந்தான். அவசரம் அவசரமய் ஆதவனின் படுக்கை அறைக்குள் நுழைந்தது அந்த பெண் குரலுக்கான உருவம்.
“டேய் என்ன பொழுது போகிற நேரத்துல படுக்கை, வேண்டிகிடக்கு ஒழுங்கா லட்சனமா 90ஸ் கிட்ஸா போய் விளையாடனும், உன்னை விட சின்ன பசங்க, அதும் 2k கிட்ஸ்தெருவுல இறங்கி விளையாடுதுங்க, போ.. போ…” என விரட்டிவிட்டாள்
ஆதவனும் “ம்ம்ம்ம் போறாங்க விளையாடுறதுக்கு” என முனு முனுத்துக்கொண்டே வீட்டை விட்டு வெளியே சென்று, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கும்பலுடன் சேராமல் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து விளையாடும் சிறுவர், சிறுமியர்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆதவன் ஏதோ யோசித்துக்கொண்டிருக்கிறான் நாமும் அவனது யோசனைக்குள் சென்று பார்ப்போம், அதற்கு முன் ஆதவனை பற்றிய ஒரு அறிமுகம். ஆதவன் வயது 17, இந்த வருடம் தன்னுடைய 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளை முடித்துவிட்டு, தன்னுடைய தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் ஒரு இளம் வயதினன். பெயருக்கு ஏற்றது போல பிரகாசமானவன், ஓளி பொருந்திய முகம், ஆதவன் யாரிடாமவது ஏதாவது கேட்டால் இல்லை என்று எதிரில் இருப்பவர்களால் கூறவே முடியாது அப்படி ஒரு பேச்சு திறமை. படிப்பில் சுமார் தான். ஆனால், உலக அறிவு, தமிழ் புலமை, ஓவியம் வரைவதில் எல்லாம் இவனுக்கு நிகர் இவன் மட்டுமே
இத்துனை திறமைகளும் கொண்டிருக்கும் ஆதவனுக்கு 15 வயதில் கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் சினிமா படங்கள், சீரியல்கள், கிரிகெட் வீரர்கள், சக வயது தோழர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், பஸ் கண்டக்டர்கள், என யாரையும் விட்டுவைப்பதில்லை வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்து ரசிக்க ஆரம்பித்துவிடுவான். பள்ளி மற்றும் வெளி இடங்களில் பெண்களை பார்பதைவிட ஆண்களை பார்க்கும் பொழுது இவன் மனம் றெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்துவிடும், அப்படியே அவர்ளை ரசிக்க ஆரம்பித்துவிடுவான்.
பல நாட்களாகவே ஆதவனுக்கு “நமக்கு மட்டும் தான் இப்படி தோனுதா, இல்லை எல்லாருக்கும் இப்படித்தான் தோனுதா” என ஒரு சந்தேகமும், குழப்பமும் இருந்துக்கொண்டே இருந்தது. இந்த சந்தேகத்திற்க்கும் குழப்பத்திற்க்கும் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் விடை கிடைத்தது.
பள்ளியில் உணவு இடைவேளையின் பொழுது நெருங்கிய தோழர்கள் திணேஷ், மற்றும் கார்த்தியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தினேஷ் பேச ஆரம்பித்தான்,
“டேய் கார்த்தி அங்க பாத்தியா நம்ப கூட பத்தாவது படிச்ச மேனகா, அப்படியே இந்திரலோகத்து மேனகா கனக்கா இருக்கா, இல்லை”
கார்த்தி, “ஆமா, ஆளு பத்தாவது படிக்கிறவரைக்கும் ஒன்னும் தெரியலை, இந்த லீவுல தான் ஆளு பாலீஷ் ஆகிட்டா டா, எப்படி டா 3 மாச லீவ்ல இப்படி மாற முடியும்”
தினேஷ், “அடேய் உனக்கும் கூட தான் மீசை முளைச்சிருக்கு, நெஞ்சு விடச்சு தோள்பட்டை எல்லாம் விரிஞ்சு இருக்கு உடம்புல எல்லா இடத்துலையும் முடி முளைச்சிருக்கு, எப்படியும் உனக்கு ‘அங்கயும்’ முடி முளைச்சிருக்கும், அது மாதிரி தான் டா, அவங்களுக்கும் ஒரு சில உடல் மாற்றங்கள் அவ்வளவுதான்”
இவர்களின் பேச்சை கேட்டதிலிருந்து ஆதவனுக்கு “சரி நமக்கு மட்டும் தான் இப்படி தோனுது எல்லாருக்கும் பொண்ணுங்கள பார்த்தா தான் அழகா தோனுது, அவங்களை தான் புடிக்குது. நமக்கு மட்டும் பசங்களை புடிக்குது” என்ற சந்தேகத்திற்க்கு பதில் கிடைத்தது. அன்று முதல் ஆதவனுக்கு “சரி நமக்கு இந்த மாதிரி தோனுறது சரியா? இல்லை தப்பா?, தப்பா இருந்தா ஏன் எனக்கு அப்படி தோனுனனும்?, சரியா இருந்தா மத்தவங்களுக்கு ஏன் இந்த மாதிரி தோனலை?, இந்த மாதிரியே இந்த உலகத்துல யாருமே இருக்கமாட்டாங்களா?, நான் மட்டும் தான் இப்படி இருக்கேன்னான்? மத்தவங்க இருக்காங்கனு சொன்னா அவங்களை எங்க பார்க்க முடியும். நமக்கு சில பசங்களையும் ஆண்களையும் பிடிச்சது மாதிரியே, நம்பளையும் சிலருக்கு புடிக்கலாம் இல்லையா, அந்த மாதிரி இருந்தா, எப்படி அவங்களை கண்டுபிடிக்கிறது?, எங்க சந்திக்கிறது?, அன்னிக்கி தினேஷ்க்கும், கார்த்திக்கும் அவங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை அவங்களுக்குள்ளயாச்சும் சரிவர பகிர்ந்துக்க முடிஞ்சுது, ஆன நம்ப உணர்வுகள் மத்தவங்களுக்கு புரியுமா, அப்படி புரிஞ்சா அதை பொது வெளியில ஏன் யாரும் பேச மாட்டிங்குறாங்க?”போன்ற சில பல கேள்விகள் தோன்ற ஆரம்பித்தது. அதற்கான பதிலை தேடி அன்றிலிருந்து ஓட ஆரம்பித்தவன் இன்றுவரை ஒன்றரை வருடங்களாக ஓடிக்கொண்டுத்தான் இருக்கிறான்.
இப்பொழுது ஆதவன் 90ஸ் கிட்ஸாக இருந்தாலும் கூட தெருவில் விளையாடும் கும்பலில் இறங்கி விளையாடாமல் அங்கிருக்கும் திண்ணையில் அமர்ந்து. இதே கேள்விக்கான பதிலைதான் யோசித்துக்கொண்டிருக்கிறான். மாலை சூரியனும் மறைந்து தெருவிளக்குகள் ஓளிர தொடங்கியது, நட்சத்திரங்களும் திங்களும் கூட தன்பங்குக்கு எட்டிபார்த்து ஓளி வீசத்தொடங்கியது.
யோசனையில் ஆழ்ந்திருந்த ஆதவனின் கவனத்தை பக்கத்துவிட்டு சிறுவன் தன் கொஞ்சும் மழலை குரலில் கலைத்தான், “ஆதவன் அண்ணா, ஆண்டி உங்களை எங்க இருந்தாலும் அவசரமா கூட்டிட்டு வர சொன்னானங்க”
“என்னது அவசரமா, எங்க இருக்காங்க”
“வீட்டுல”
“வா போலாம்”
“உங்களை மட்டும் தான் வர சொன்னாங்க, நான் தெருமுனையில உள்ள பொட்டிகடைக்கு போறேன்”.
ஆதவன் என்னமோ ஏதோ என வேகமா வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான். வீட்டுக்குள் நுழையும் பொழுதே
அப்பா, “எங்க டா போய்ட்டு வரே”
அம்மா, “அவனை ஏன் திட்டுறீங்க, நான் தான் படுத்தே கிடக்குறானேனு சொல்லிட்டு விளையாட போக சொன்னேன், ஆனாலும் அவன் அங்க போய் சும்மா தான் உக்காந்துட்டு இருந்தாங்குறது வேற விஷயம்”
“ஏன்மா, உனக்கு என்னைய வம்பிழுக்காட்டி தூக்கமே வராதே, நான் என் ரூமுக்கு போறேன்”
“டேய் சும்மா என்ன டா எப்ப பார்த்தாலும் ரூம் ரூம்னு எங்களுக்குனு இருக்குறது நீ ஒரே புள்ள, கொஞ்சம் கலகலப்பா சிரியேன்டா, உங்க அப்பாவ பாரு, இந்த வயசுலையும் எவ்வளவு கலகலப்பா கலாட்டா பன்னிட்டு இருக்காரு, நீ ஏன் டா இப்படி எப்ப பார்த்தாலும் ஏதோ இழந்த மாதிரியே இருக்கே? இந்த வயசுக்கே உள்ள கலகலப்பே இல்லையே”
அப்பா, “சும்மா அவனை கொறை சொல்லிட்டே இருக்காதே, மூணு வருஷமா அவனை படி படினு டார்ச்சர் பன்னின்னே, இப்ப திடீர்னு, விளையாடு, கலகலப்பா இருனு சொல்லிகிட்டு அவன் என்ன மிஷினா இல்லை மனுஷனா, அது எல்லாம் அவன் வயசு பசங்களோட காலேஜ்ல சேர்ந்தா மாறிடுவான்” என அவர் பேசிக்கொண்டே ரூமுக்குள் சென்றவர் இந்தா டா இந்த டிரஸ் ஓட மூணு நாளைக்கு கல்யாணத்துக்கு போற மாதிரி டிரஸ் எடுத்துவச்சு பேக் பன்னிக்கோ”
ஆதவன், “என்ன ஒரு அதிசயம் எப்பவும் கோவிலுக்குனு தானே கிளம்புவிங்க இன்னிக்கு என்ன ஒரு அதிசயம் கல்யாணத்துக்கு கூப்ப்பிடுறீங்க, ஆனாலும் நான் வரலை நீங்களே போய்ட்டுவாங்க”
அம்மா, “ஏன் டா வரமாட்டிங்குறே”
“நீங்க போற கல்யாணதம் ரொம்ப போர் அடிக்கும், அங்க போய் தனியா இருக்கனும் அதும் மூணு நாளைக்கு”
அம்மா, “உன்னையார் தனியா இருக்க சொன்னா”
அப்பா, “நாம யார் கல்யாணத்துக்கு போறோம்னு நினைச்சுக்கிட்டு இருக்கே, உங்க பெரிய அத்தையோட மூத்த பையன், கல்யாணத்துக்கு தான் போறோம், அங்க உன்னோட அத்தை பசங்க, மாமா பொண்ணுங்க, சித்தாப்பா பசங்க, பெரியப்பா பசங்கனு உண்ணோட எல்லா கசின்ஸும் வருவாங்க, உன்னை பத்தாவது லீவ்ல பார்த்தது கண்டிப்பா கூட்டிட்டு வரணும்னு எல்லாரும் சொல்லிருக்காங்க, அதனால ஒழுங்கா எந்த சாக்கும் சொல்லாம கிளம்பு”
ஆதவனும் இரண்டு வருடங்கள் கழித்து தன் உறவுகாரர்களை பார்க்கும் குறிப்பாய் ஆதவனின் வயதே இருக்கு அவன் அத்தை மகன் இளவேனில் ஐ பார்க்க வேண்டும் பேசவேண்டும் என்ற ஆவலும் ஆசையும் அவனுக்கு அதிகரித்ததால், மனதுக்குள் ஆசையாய் இருந்தாலும் ஏதோ வேண்டா வெறுப்பாய் கிளம்புவது போல,
“சரி சரி ரெண்டு பேரும் கண்டிப்பா போகனும்னு சொல்லிட்டிங்க, அதனால போய்தான் ஆகனும் நான் போய் துணி எடுத்து வைக்குறேன்”
அம்மா, “ரொம்ப சலிச்சிக்கிட்டு எல்லாம் நீ வரவேண்டாம் நாங்களே போய்ட்டு வந்துடுறோம்” என வம்பிழுக்க
அப்பா, “புள்ளைய போட்டு வம்பிழுக்காதடி, அவ கிடக்குறா நீ போய் டிரஸ் எடுத்துவச்சிச்சுட்டு சீக்கிறமா தூங்கு நாளைக்கு 6 மணிக்கே நாம அத்தை வீட்டுக்கு போறோம்” என்று கூறிவிட ஆதவன் இளவேனிலை காணு ஆவலோடு தனக்கு பிடித்த துணிகளை எடுத்து வைத்துவிட்டு சீக்கிறமாகவே தூங்கிபோனான். கணவில் ஆதவனும், இளவேனிலும் சேர்ந்தே வளர்ந்தது, அவர்களுடைய பாலர் பருவம் முதல் இளம் பருவம் வரை ஒவ்வொரு முக்கியமான சம்பவத்திலும் இளவேனில் ஆதவனுடன் இருந்திருக்கிறான்.
இளவேனில் ஆதவனுடன் ஒரு மாதம் இளையவனாக இருந்தாலும், அவன் சிந்தனையிலும் செயலிலும் ஒரு முதிர்ச்சி தெரியும் அந்த முதிர்ச்சி பல சமயம் ஆதவனுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.
அடுத்த நாள் காலை ஆதவன் எப்பொழுதும் போல இல்லாமல் சீக்கிரமாகவே எழுந்து குளித்து கமகமவென கிளம்பி அவன் அம்மாவையும் அப்பாவைம் சீக்கிரம் சீக்கிரம் அத்தை மாமா எல்லாம் நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க என அவசரப்படுத்தினான். அப்பவும் அம்மாவும் கிளம்பி, ஆதவனின் அப்பா மகிழுந்தை ஓட்ட முன் இருக்கையில் ஆதவனும், பின்னால் அவனது அம்மாவும் அமர வண்டி கிளம்பியது,
அம்மா, “என்னடா எங்க போறதா இருந்தாலும் கடைசிய தாணே எழுந்து ரெடியாவே, இன்னிக்கு என்ன சீக்கிரமாவே எழுந்து மேக்கப் எல்லாம் பலமா இருக்கு, ஏதோ உனக்கே கல்யாணம் மாதிரி”
அப்பா, “ஆமா ரெண்டு வருஷம் கழிச்சு அவன் அத்தை பெண்ணுங்க மாமா பொண்ணுங்களை எல்லாம் பாக்க போறான் இல்லை” என வம்பிழுக்க ஆதவனோ வெக்கபடுவதற்க்கு பதிலாக கொஞ்சம் கடுப்பானான் அது ஏன் என்று படிக்கும் நமக்கு தெரியும் பாவன் அவன் அப்பா, அம்மாவுக்கு எப்படி தெரியும்?.
ஒரு வழியாய் ஆதவனின் பெரிய அத்தை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வந்தவர்களை வரவேற்று காலை உணவு சாப்பிட வைத்து சொந்த பந்தகள் அனைவரும் கூடி கூடி பேசிகோண்டனர், ஆதவன் தன் வயதை ஒத்த உறவினர்களின் பசங்களிடம் கூடி இரண்டு வருடமாக பேசத கதைகளை பேசி அளவளாவிக்கொண்டிருந்தான்.
அன்றை நாள் முழுவதும் கல்யாணவீட்டில் எல்லா சொந்தகளை பார்ப்பதும் பேசுவதும் “அடுத்து என்ன படிக்க போறே, எந்த காலேஜ்ல சேர போற” போன்ற கேள்விகளுக்கு ஏதோ வாய்க்கு வந்த படி பதில் அளித்து நேரத்தை கடத்திக்கொண்டிருந்தான். ஒருவழியாக கதைகள் பேசிவிட்டு விளையாட ஆரம்பித்தனர். பிறகு மண்டபத்திற்க்கு கிளம்பினர். மற்ற உறவுக்கார பசங்க அவர் அவர்கள் பெற்றோருடன் சென்றுவிட ஆதவனும் இளவேனில் மட்டும் மாப்பிள்ளையைவிட்டு பிரியவே இல்லை.
ஒருவழியாக அணைவரும் மண்டபத்திற்க்கு வந்து சேர்ந்துவிட, இரவு திருமண வரவேற்பு தடல்புடலாக நடந்துக்கொண்டிருந்தது, மற்ற உறவுக்கார பசங்க அணைவரும் பெண்வீட்டில் உள்ள புதிய உறவுக்கார பசங்களுடன் மண்டபத்தை சுற்றி சுற்றி விளையாட ஆரம்பித்தனர். இரவு விருந்திற்கு பிறகு போட்டோகிரப்பர்கள் மாப்பிள்ளையும் பெண்ணையும் “இப்படி நில்லுங்க… அப்படி நில்லுங்க.. சிரிங்க…” என நிறக்க வைத்து தூங்க விடாமல் டார்ச்சர் செய்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
ஆதவனும், இளவேனிலும் இந்த போட்டோ சூட்டை சில மணிநேரம் வேடிக்கை பார்த்து போர் அடிக்கவே இளவேனில், “மச்சி, நைட் 11 மணி ஆகுது வா ஒரு வாக் போலாம்” என்று கூறி மண்டபத்தை சுற்றி உள்ள தெருக்களில் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
இளவேனில் தான் பேச ஆரம்பித்தான், “என்ன டா சின்ன வயசுல வாய் மூடாம லொட லொடனு ஏதாச்சும் பேசிட்டே இருப்ப இப்ப என்ன ரொம்ப அமைதியா இருக்கே”
“அது எல்லாம் ஒன்னும் இல்லை நான் எப்பவும் போல தான் இருக்கேன்”
“ஏண்டா நீ எப்பவும் போல இருந்தா எப்படி இருப்பேனு எனக்கு தெரியாதா, இப்ப எல்லாம் நீ அதிகமா பேசுறது இல்லை, சிரிக்கிறது இல்லை, கலகலப்ப இல்லை, குறும்பு பன்னுறது இல்லைனு அத்தை ரொம்ப வருத்தபட்டாங்க, என்ன ஆச்சு”
“ஓன்னும் இல்லை டா கொஞ்சம் வளந்துட்டேன் இல்லை.. அதுதான் குறும்பு எல்லாம் குறைஞ்சுடுச்சு, மூணுவருஷாமா படிப்பு படிப்புனு இருந்து அப்படியே பழகிடுச்சு”
சில நிமிடங்கள் மௌனமாய் இருந்த இளவேனில் “ஏன் டா பொய் சொல்லுறே, எனக்கு தெரியாதா, உன்னை பத்தி, எங்கிட்ட ஏன் இப்படி மறைக்குறே எதுவா இருந்தாலும் சொல்லு டா, எனக்கிட உனக்கு சொல்லனும்னு தோனுச்சுனா சொல்லு இல்லாட்டி பரவாயில்லை நான் உன்னை கட்டாயபடுத்தலை”
தூரத்தில் நாய் ஒன்று குழைக்கும் சத்தம் துல்லியமாய் கேட்கும் அளவுக்கு அங்கே ஒரு பலத்த மௌனம் ஒன்று குடியேறியது.
இளவேனில் கேட்ட கேள்விகளுக்கு ஆதவன் வாய்திறந்து உண்மையான பதிலை கூறுவானா, இல்லை ஏதாவது பொய்சொல்லி சமாளிப்பானா. மேற்கொண்டு அங்கே என்ன நடக்கும் காத்திருங்கள் அடுத்த இதழ் வரை. (தொடரும்…)
நன்றி
வணக்கம்
-இனியவன்