ஸ்டோன்வால் கலகம், பால்புதுமையினரின் வரலாற்றில் தவிர்க்கமுடியாத மிக முக்கியமான நிகழ்வாகும். 1969 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் நாள் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தின் க்ரீன் விச் கிராமத்தில் அமைந்திருந்த ‘ஸ்டோன்வால் இன்’ என்னும் பால் புதுமையினருக்கான விடுதியில் காவல்துறையின் வன்முறையை எதிர்த்து நடந்த போராட்டமே ஸ்டோன்வால் கலகம். அதன் நினைவாகவே உலகெங்கும் ஜூன் மாதம் முழுவதும் ப்ரைட் (pride) மாதமாக கொண்டாடப்படுகிறது. பால் புதுமையினரைப் பற்றியும் அவர்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறை பற்றியும் ஏற்படுத்தும் விழிப்புணர்வோடு கூடிய கொண்டாட்டமான ப்ரைட் (pride) மாதத்தின் இந்திய வரலாற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இந்தியாவில் குயர் உரிமை செயல்பாடுகள் :
தில்லியின் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்கில் தன்பாலீர்பாளர்கள் என்னும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ஆண்களை விடுவிக்கக் கோரி தில்லி காவல்துறையின் தலைமை அலுவலகத்தின் முன்னால் AIDS Bhedbhav Virodhi Andolan (ABVA) அமைப்பால், 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் இந்தியாவில் பால்புதுமையினரின் உரிமைகளை மீட்பதற்கான முதல் போராட்டம் நடைபெற்றது.
1994 ஆம் ஆண்டு ABVA, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377ஐ எதிர்த்து கேள்வியெழுப்பும் நோக்குடன் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடர்ந்தது.
2001ஆம் ஆண்டு NAZ அறக்கட்டளை, சட்டப்பிரிவு 377ஐ எதிர்த்து பதினெட்டு வயது மேலானோருக்கு இடையேயான தன்பாலின உறவை குற்றமற்றதாக்க கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
NAZ அறக்கட்டளை மற்றும் தில்லி அரசுக்கு இடையேயான வழக்கில், 2009ஆம் ஆண்டு பதினெட்டு வயது மேலானோருக்கு இடையேயான தன்பாலின உறவு குற்றமற்றது எனவும் அதைக் குற்றமாக்குவது அடிப்படை உரிமையை மீறுவதாகவும் தில்லி உயர்நீதிமன்றம் கூறியது.
2013ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்த உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தால் தான் சட்டத்தை மாற்றி அமைக்க முடியும் என கூறி அத்தீர்ப்பை ரத்து செய்தது.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், சட்டப்பிரிவு 377ஐ எதிர்த்து தன்பாலின உறவை குற்றமற்றதாக்க கோரி ஒரு சட்ட வரைவை அறிமுகம் செய்தார்.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியுரிமையை அடிப்படை உரிமை என புட்டசாமி வழக்கில் தீர்ப்பளிக்க, இத்தீர்ப்பு பின்னாளில் தன்பாலீர்ப்பு உறவில் தலையிடுவதும் தனியுரிமை மீறல் தான் என வாதாட உதவி, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வழிவகுக்கும் என்னும் நம்பிக்கையைப் பால்புதுமையினரிடையே விதைத்தது.
பிறகு, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் இந்திய தண்டனைச்vசட்டப்பிரிவு 377ஐ அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி அதனைக் குற்றமற்றது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முதல் சுயமரியாதை பேரணி :
இந்தியாவின் முதல் சுயமரியாதை பேரணி 1999 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள், மேற்கு வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் 15 பேரைக் கொண்டு நடைபெற்றது. பங்கேற்ற அனைவரும் ‘வாக் ஆன் த ரெயின்போ’ (walk on the rainbow) என்னும் வாசகத்தைக் கொண்ட மஞ்சள் நிற டீ-ஷர்ட்டை அணிந்திருந்தனர். ‘கல்கத்தா ரெயின்போ ப்ரைட்’ என்று அழைக்கப்பட்ட இப்பேரணி, மின்னஞ்சல் மற்றும் அமைப்புகள் மூலமாக பங்கேற்பாளர்களை ஒன்றுகூட்டி பொதுமக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடயே பால்புதுமையினரின் உரிமைகளைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாய் நடைபெற்றது. ‘எங்கள் பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாளத்திற்கு நாங்கள் ஒருபோதும் வெட்கவில்லை பெருமையே கொள்கிறோம்’ என்னும் கருத்தை உரக்க உரைப்பதாய் அமைந்தது இப்பேரணி.
இதைத்தொடர்ந்து கொல்கத்தாவின் அடுத்த பேரணி 2003ஆம் ஆண்டு பார்க் சர்க்கஸ் மைதானத்தில் தொடங்கி ஜகத்பந்து நிறுவனம் வரை ஏறத்தாழ ஐம்பது பேரைக் கொண்டு நடைபெற்றது. 2004ஆம் ஆண்டு இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க, 2005ஆம் ஆண்டு ஒரு வாரம் முழுக்க ப்ரைட் (pride) கொண்டாட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவை அடுத்து இந்தியாவின் மற்ற மாநிலங்களின் முதல் சுயமரியாதை பேரணி எவ்வாண்டுகளில் நடைபெற்றதென பின்வரும் பத்தியில் காண்போம்.
2008ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் நாள் பெங்களூர் மற்றும் புதுச்சேரியிலும், ஜூன் 30 அன்று தில்லியிலும், ஆகஸ்ட் 16ஆம் நாள் மும்பையிலும் முதல் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டே ஜூன் 27 அன்று ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஷ்வரிலும், ஜூன் 28 அன்று சென்னையிலும் முதல் பேரணி நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள் கேரளத்திலும், 2011இல் புனேவிலும் நடந்தேறியது. 2013ஆம் ஆண்டு பஞ்சாபில் சண்டிகரிலும், குஜராத்தில் சூரத்திலும் முதல் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. வடகிழக்கு பகுதியின் கவுகாத்தியில் 2014ஆம் ஆண்டு அதன் முதல் பேரணி நடைபெற்றது. 2015இல் ஜெய்ப்பூரிலும், 2016 இல் குருகிராம் மற்றும் நாக்பூரிலும் முதல் பேரணி நடைபெற்றது. பின்னர் 2017இல் அவத், தேராதூன் மற்றும் போபாலிலும், அதற்கு அடுத்த ஆண்டே ஜார்க்கண்டிலுள்ள ஜாம்சேத்பூரிலும் நடைபெற்றது.
இந்தியாவில் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுயமரியாதை பேரணி, பால்புதுமையினருக்கான உரிமைக்குரலாக மட்டுமல்லாமல் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக, தலித் மக்கள், ஊனமுற்ற மக்கள், பெண்கள் முதற்கொண்டு அனைவருக்காகவும் உரிமைக்குரல் எழுப்பும் நிகழ்வாகவே இன்று வரை அமைந்து வருகிறது. இவ்வாறு குறுக்குவெட்டு நோக்குடன் செயல்படும் பால்புதுமையினர், அவர்களின் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இவ்வாண்டு காசாவில் நடக்கும் வன்முறையையும் இனப்படுகொலையையும் கண்டித்து பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்கவும் தவறவில்லை.
ஆறு வண்ண கொடியேந்தி வானவில்லாய் வண்ண வண்ண உடையணிந்து எவ்வித வேறுபாடுமின்றி உரிமைகுரலுடன் வாழ்வின் வலிகளை மறந்து துறந்து ஆடி பாடி சிரித்துப்பேசி வண்ணத்துப்பூச்சிகளாய் வலம் வரும் குயர் மக்களுக்கு, பயணப்படும் அச்சிறிது நேரம் அவ்வாண்டின் பெரும் கொண்டாட்டமாகவே அமையப்பெறுகிறது.

Author- Anubharathi
