சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 21 அன்று வழங்கிய உத்தரவில் queer (குயிர்) சமூகத்தைச் சார்ந்த மக்கள் தயார்செய்த LGBTQIA+ சொற்களஞ்சியத்தை வெளியிட்டுள்ளது. மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இச்சொற்களஞ்சியம் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த சொற்களஞ்சியத்தைக் காட்டிலும் கண்ணியமானதாகவும் அனைவரையும் உள்ளடக்குவதாகவும் இருப்பதால், queer (குயிர்) சமூகத்தைச் சார்ந்த மக்கள் தயார்செய்த LGBTQIA+ சொற்களஞ்சியத்தை பரிசீலிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார். LGBTQIA+ சமூகம் தயாரித்த சொற்களஞ்சியத்தை ஒருங்கிணைத்தது Queer Chennai Chronicles – QCC (குயிர் சென்னை கிரோனிக்ல்ஸ்), ஓரினம், The News Minute (தி நியூஸ் மினிட்) மற்றும் சில தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் ஆவர்.

 

பிப்ரவரி 21 அன்று, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சமூகம் மற்றும் ஊடகத்தில் LGBTQIA+ மக்களை கண்ணியத்துடன் அழைக்க வழிகாட்டுவதற்க்காக மாநில அரசு முன்னெடுத்த இந்த LGBTQIA+ சொற்களஞ்சியத்தை பாராட்டும்பொழுது, அந்த உத்தரவில் LGBTQIA+ சமூகத்தைச் சார்ந்தவர்கள் அரசு சமர்ப்பித்த சொற்களஞ்சியத்தில் ஒரு சில வார்த்தைகளை விதிவிலக்காக முன்வைத்துள்ளதாகக் கூறினார். “இச்சொற்களஞ்சியத்தை உருவாக்குவதன் காரணமே LGBTQIA+ மக்களை கண்ணியத்துடன் அழைக்க சரியான பதங்களை உபயோகிப்பதற்கே ஆகும். அப்பயன்பாடு எந்த விதத்திலும் அவர்களை சிறுமைப்படுத்திவிடக் கூடாது. அதனால், LGBTQIA+ சமூகத்தைச் சார்ந்தவர்கள் சமர்ப்பித்த சொற்களஞ்சியத்தை முன்மொழிய முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The News Minute (தி நியூஸ் மினிட்) இச்சொற்களஞ்சியத்தை உருவாக்குவதில் பங்காற்றிய பல நபர்களுடன் இதன் அவசியத்தையும், ஒருவரைக் குறிக்கும் மொழியின் முக்கியத்துவம் பற்றியும் பேசியது.

 

LGBTQIA+ சமூகத்தைச் சார்ந்தவர்கள் சமர்ப்பித்த சொற்களஞ்சியத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மொத்தம் 28 பதங்கள் SOGIESC (Sexual Orientation, Gender Identity and Expression, and Sex Characteristics) கட்டமைப்பின்படி இடம்பெற்றிருந்தது. LGBTQIA+ சமூகத்தில் பயன்படுத்தப்படும் கண்ணியமான வார்தைகளாகிய திருநர், பால்புதுமையினர், ஆதிக்கப் பாலினம், மகிழ்வன் போன்ற வார்த்தைகள் அடங்கும். தமிழ் சொற்களஞ்சியத்தில் intersex, genderfluid, pansexual, இவற்றுக்கான பதங்களும் gender dysphoria, coming out, conversion therapy மற்றும் romantic orientation ஆகியவற்றுக்கான விளக்கங்களுடனான சொல்லாடல்களும் இடம்பெற்றுள்ளன.

 

ஊடகவியலாளர்களை இச்சொற்களஞ்சியத்தில் உள்ள வார்த்தைகளை உபயோகிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. “LGBTQIA+ சமூகத்தைச் சார்ந்த மக்கள் பரிந்துரையின்படி மாற்றப்பட்ட சொற்களஞ்சியத்தை வெளியிட சமூக நல மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைப்புக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குடும்பத்தின் எதிர்ப்பின் காரணத்தால் பாதுகாப்பிற்காக தன்பாலீர்ப்பு பெண்களிருவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி வெங்கடேஷ் விசாரித்தபோது இச்சொற்களஞ்சியத்தை பற்றியப் பிரச்சனை எழுந்தது. அம்மனு மீதான விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இது பற்றியப் புரிதலை வளர்த்துக்கொண்ட  பின் தீர்ப்பளிப்பதாகக் கூறினார். அதைத்தொடர்ந்து LGBTQIA+ மக்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு பல வழிமுறைகளை அரசு, காவல்துறை மற்றும் ஊடகத்தினருக்கு வழங்கினார். அதில் ஒன்றாகத்தான் தமிழ் சொற்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார். மனுதாரரின் தரப்பில் தற்போது “விளக்கமான ஆனால் முழுமையல்லாத” வார்த்தைகளே சமர்க்கிப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசை சொற்களஞ்சியத்தை உருவாக்கக் கேட்டுக்கொண்ட நீதிபதி, ஊடகத்தினரையும் queer (குயிர்) மக்களைப் பற்றி எழுதும்போது கண்ணியமான பதங்களை உபயோகிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அனால் queer (குயிர்) சமூகத்தைச் சார்ந்த மக்களின் பங்களிப்பு இதில் இல்லாவிடில், அச்சொற்களஞ்சிய த்தில் “சரியான” நெறிமுறை என்ற பெயரில் அவர்களுடைய பாலினம் குறித்து வெளிப்படுத்த முடியாமல் போய்விடும் என்று பல LGBTQIA+ மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பல LGBTQIA+ மக்கள் இப்பதங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறுதலுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர். உதாரணமாக “பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சை” என்று சொல்லப்பட்டது இன்று “பாலின மாற்று அறுவை சிகிச்சை” என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதமாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சொற்களஞ்சியத்திலும் இழிவான பதங்கள் உபயோகப்படுத்தப்படுத்தல், சமூகத்தில் பயன்படுத்தப்படாத பதங்கள் அடங்கியிருத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக LGBTQIA+ மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

LGBTQIA+ சமூகம் ஏன் இதில் தலையிட வேண்டும்?

 

Queer (குயிர்) மக்கள் உரிமை ஆர்வலர் மற்றும் QCC-யின் இணை நிறுவனர் மௌலி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் பேசும் queer (குயிர்) சமூக இயக்கத்தின் கோட்பாடுகளை இச்சொற்களஞ்சியம் பிரதிபலிக்க வேண்டும் என கூறியுள்ளார். “அரசின் உரை அதைப் பிரதிபலிக்கவில்லை” என்றும் “அவை பெரும் கல்வியாளர்களாலும் நிபுணர்களாலும் வரையறுக்கப்பட்டதானாலும், பொதுப்புழக்கத்திற்கு பயன்படுத்த முடியாது.” என்றும் கூறியுள்ளார்.

 

“நாங்கள் சமர்ப்பித்துள்ள சொற்களஞ்சியத்தில் சமூக மக்களால் சுய அடையாளத்திற்காகவும் பரிந்து பேசுவதற்காகவும் பயன்படுத்தக்கூடிய சொற்கள் அடங்கியுள்ளது” என்று மௌலி கூறினார்.

 

சொற்களஞ்சியம் தயாரித்த குழுவில் இருந்த, எழுத்தாளர் மற்றும் QCC-யின் விழா இயக்குனர் கிரீஷ் கூறும்போது “சமர்ப்பிக்கப்பட்ட இரு சொற்களஞ்சியங்களில் queer (குயிர்) சமூகத்தினரால் சமர்ப்பிக்கப்பட்ட சொற்களஞ்சியம் கண்ணியமானதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுக்கான பதங்களை queer (குயிர்) மக்களே தேர்ந்தெடுக்கும்பொழுது தான் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. தமிழ் ஊடகவியலாளர்கள் இப்பதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து, அனைத்து தரப்பினரும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்தால், இது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.” என்றார்.

 

SAATHII எனும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தவரும் ஓரினம் அமைப்பின் தன்னார்வலரும் இச்சொற்களஞ்சியத்துக்காக பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் கூறுகையில், “நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதையே நான் மீண்டும் வலியுறுத்த விழைகிறேன்: இதன் முக்கிய நோக்கம் கண்ணியமான தமிழ் வார்த்தைகளை LGBTQIA+ சமூகத்திற்குத் தர விரும்பினால், சமூகத்தைச் சேர்ந்த மக்களே அதை உருவாக்குவதே சிறந்த வழியாகும்.”

 

இதன் உருவாக்கலில் பங்காற்றிய எழுத்தாளர் நதிகா கூறுகையில், “உச்ச நீதிமன்றம் எங்களின் குறைகளை கேட்டறிவதும், அதற்கு பதில் மொழிவதும், நாங்கள் உள்ளடக்கிய பதங்கள் கண்ணியமாக இருப்பதைப் பிறருக்குத் தெரிவிப்பதும் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. உரிமைச் சார்ந்து ஒரு பிரச்சனையை நோக்குவது இதற்குத்தான் வழிவகுக்கும். மேலும் இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறித்து பேச வழிவகுக்கும். உதாரணமாக ஊனமுற்றவர்களோ, ஒடுக்கப்பட்ட சாதிய குடியிருப்பில் வாழும் மக்களோ தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதான உரையாடல்களை நிகழ்த்தும்” என்றார்.

 

QCC-யின் நிகழ்ச்சி இயக்குனர் செந்தில், queer (குயிர்) சமூகத்தினர் உருவாக்கிய வேற்றுப்பாலின(hetrosexual) கருத்தூன்றிய பார்வை இல்லாத இந்தச் சொற்களஞ்சியத்தை முன்மொழிவதால் queer (குயிர்) சமூகம் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகச் சுட்டிக்கட்டினார். மேலும், “நான் பார்த்த சில கீச்சுகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது ‘பாலின அடையாளமற்ற தமிழ் பதங்களை நான் இப்பொழுதுதான் முதன்முதலாகப் பார்க்கின்றேன்’.” இருப்பினும் இப்பதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதையும் செந்தில் குறிப்பிட்டார். “இப்பதங்கள் மரியாதைக்குரியதாகவும் கண்ணியமானதாகவும் இன்று இருக்கிறது, ஆயினும் அவை மாற்றத்திற்குட்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவை கல்லில் செதுக்கப்பட்டது அல்ல. காலத்திற்கு தக்கவாறு அவை மாற்றமடையும். மக்கள், அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் அம்மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

 

ஏன் மொழியும், அதன் சரியான அர்த்தமும் முக்கியம்?

 

தமிழக முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்தபொழுது ‘திருநங்கை’ என்ற வார்த்தைப் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது என்பதை மௌலி நினைவுகூர்ந்தார். “அவ்வார்த்தை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெகுவாக பயன்பாட்டுக்கு வந்த பின்பும், 2008-ல் திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டபொழுது, ‘அரவாணிகள் நல வாரியம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. பின் 2019 ‘மூன்றாம் பாலின நலவாரியம்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்பதங்கள் மாற்றம் அடைந்து வருகிறபோதிலும் அரசுப்பணியிடங்களில், அரசின் உத்தரவு இல்லாததால், இவை பிரதிபலிக்கவில்லை.

 

சமூக நலத்துறை சமர்ப்பித்துள்ள பதங்கள் பெரும்பாலும் மொழியாகச் சரியாய் இருப்பினும் அதன் நேரடியான பொருள் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படவில்லை, அன்றி அதன் அர்த்தங்கள் queer (குயிர்) மக்களுக்கு தீங்காய் அமையும் என்பதே எங்கள் வாதம் என்று மௌலி கூறினார். “சமூகத்தில் அவர்களின் அடையாளங்களுக்காக அவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறதா? அவை எதைக் குறிக்கிறது? இலக்கியத்தில் அவை என்னவாய்ப் பயன்படுத்தப்படுகிறது?” என்றார்.

 

பல பதங்களுக்கு ஏற்றப்பட்ட பொருள் உண்டு. எடுத்துக்காட்டாக “கௌரவக் கொலை”, “ஆணவக் கொலை”யாக மாற்றப்பட்டுள்ளது. எங்கள் சொற்களஞ்சியத்தில் மேலாதிக்க, ஆணாதிக்கப் பதங்கள் பயன்படுத்தப்படாமல், மொழியில் புழக்கத்திலிருக்கும் வார்த்தைகளுக்குப் பதிலாக சமத்துவம் முன்னிறுத்தப்பட்டுள்ளது” என்று மௌலி விவரித்தார்.

 

தற்பொழுது முன்னிறுத்தப்பட்டுள்ள சொற்களஞ்சியத்தில் உள்ள வார்த்தைகளை அரசும் ஊடகமும் மற்றவர்களும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கூறினார். “எடுத்துக்காட்டாக செய்திகளில் LGBTQIA+ என்பதற்குப் பதிலாக ‘திருநங்கை’ என்ற சொல்லே பெருவாரியாக பயன்படுத்தப்படுகிறது. இது மாற்றப்பட வேண்டும். நீதிபதி வெங்கடேஷ் சென்ற வருடம் உத்தரவு பிறப்பித்த பிறகும், சமூகத்தனரை வேறாய் சித்தரிப்பதையே பலர் இன்றும் செய்துவருகின்றனர். முக்கியமாக திருநர்களை நிராகரிக்கும் வகையில் ‘பெண் இணையருடன் இருப்பதற்காக ஆணாய் மாறியவர்களாக’ சித்தரிக்கப்படுகின்றனர்” என்றார்.

 

உரையாடல் தொடர

 

இச்சொற்களஞ்சியத்தை மேம்படுத்த தொடர்ச்சியாக பல்கலைக்கழக மொழியியல் துறை, பாலின மற்றும் பாலியல் துறை மற்றும் சமூகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அவ்வப்போது விவாதங்கள் நடத்துவதால் சாத்தியம் என்று மௌலி கூறினார்.

 

ஊடகங்கள் queer (குயிர்) மக்களை தாழ்த்தும் விதமாகவும், இழிவு படுத்தும் விதமாகவும் வார்த்தைகளை உபயோகிப்பத்திலிருந்து தடுப்பதற்கு இது வழிவகுக்கலாம் என நதிகா கூறினார். “குறிப்பிட்ட செய்தித்தாள் இழிவான வார்த்தையை பயன்படுத்தும் பட்சத்தில் நேரடியாக நீதிமன்றத்தை நாட முடியாது தான். அதற்கான செயல்முறைகளை பின்பற்றத்தான் வேண்டும். எந்த நோக்கத்தில் அவ்வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும் – அறியாமையினாலா, அன்றி வெறுப்பினாலா என்று. நீதிமன்ற உத்தரவை அறிந்து தெரிந்தே அவ்வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருந்தால், நீதிமன்றத்தை நாடலாம். இச்செயல்முறை சிறிது கடினமாக தோன்றலாம். ஆயினும் நீதி கிடைக்க வழி உள்ளதென்ற ஒரு நம்பிக்கை உண்டாகும்” என்றார்.

 

இதை உருவாக்குவதில் பங்காற்றிய தனி நபர்களுடன் சேர்ந்து Queer Chennai Chronicles மற்றும் The News Minute, LGBTQIA+ சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து எழுதுகிற ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்பாட்டிற்காக குறிப்பேடு ஒன்றை தயாரித்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சொற்களஞ்சியத்தில் இருக்கும் பிரிவுகள் கொண்ட இக்குறிப்பேடு விரைவில் வெளியிடப்படும்.

Source: The News Minute

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன