தேவதைச்சாத்தான்
ஓரளவுக்கு அனைத்தையும் உணர்ந்து
தெளிவு பெற்று
சுயம் நேசிக்கத் தொடங்கிய பிறகும்
பழக்கப்படுத்தப்பட்ட தேவதைச்சாத்தான்
அதனதன் நிகழ்தலில்
தன்னிச்சையாய் அசரீரியென ஒலிக்கிறது
நடக்கும்போது – ஏன் உனது நடை
இவ்வளவு நளினமாக உள்ளது
பேசும்போது – ஏன் நீ குரலை
நீட்டிமடக்கிப் பேசுகிறாய்
கையசைவில் – உன் உடல்மொழி
ஓர் ஆணுக்குரியதாக இல்லை
சிரிக்கும்போது – யாராவது
பெண்போல் சிரிக்கிறாய்
என்று கூறிவிடப்போகிறார்கள்
அழும்போது – ஆண்மையின் கம்பீரம் இழந்து கண்ணீர் வடிக்கிறாயே
இருந்தால் என்ன
என்று கூறி அவற்றை
இப்பொழுதெல்லாம்
எளிதாக ஒதுக்கிவிட்டு
நகர்ந்திட முடிகிறது
ஆனால் விடையளிப்பிற்கு
இடைப்பட்ட கணநேரத்தில்
ஊடுபாயும் கடந்தகால நானிடமிருந்து
என்னை என்னால் மீட்கமுடியவில்லை
அக்கடந்தகால நான்
நீங்கள் பரிசளித்த காயங்களே
இயல்பென்று நம்பியவன்
தேவதைச்சாத்தானின் ஆணையேற்று
தன்னை மாற்றிக்கொள்ள எத்தனித்து
தோல்வியுற்றுச் சோர்ந்தவன்
உங்களை எதிர்கொள்ளவே பயந்து
தாழ்வுமனப்பான்மையில் ஊறியவன்
தன்னையே வெறுத்தவன்
அவன் அத்துணை
சிறிய குழந்தை
அப்பாவி
வெகுளி
பலவீனமானவன்
நீங்கள் பரிசளித்த காயங்கள்
அவ்வளவு எளிதில் ஆறிடப்போவதில்லை
அதனதன் காட்சிகள்
மீண்டும் மீண்டும்
வாழ்வில் நிகழும்போதெல்லாம்
முறையே
முழுதாக ஆறிடாத
வடுக்களைக் கீறியும் விடும்
கொப்புளிக்கும் குருதியைக் கண்டு
வலியில் துடிக்கவும் செய்யும்
உண்மையை நினைவுபடுத்தி
ஆசுவாசமடைந்து
புண்களை ஆறவும் வைக்கும்
மனமெனும் தேவதைச்சாத்தான்‌
~ மழைவில்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன