பால்மணம் மின்னிதழ் சார்பா தோழர் ஜென்சி அவர்கள சந்திக்கிறதுல பெரும் மகிழ்ச்சி. இவங்கள பத்தி சொல்லனும்னா, இந்த வருஷம் நடந்த புத்தகத் திருவிழால ஒரு குரல் கேட்டு இருந்துருப்பீங்க, அறிவிப்பு சொல்ற குரல். அது இவங்களோடது தான். நான் அவங்கள முதல் முதல தெரிஞ்சுக்கிட்டதும் அந்த குரல் மூலமாதான். இந்தக் குரல் யாரோடதுன்னு தேடிப்போறப்ப தான் ஒரு நண்பர் மூலமா தெரிஞ்சுது இது ஜென்சி என்ற திருநங்கை ஒருத்தவங்களோட குரல்-னு. அதான் இவங்களப்பத்தின பதிவு நம்ம பால்மணம்-ல இருக்கணும்ன்னு விரும்பி இந்த நேர்காணல். ஜென்சி-ய பத்தித் தெரிஞ்சுக்க நானும் ரொம்ப ஆர்வமா இருக்கேன் இந்த நேர்காணல் மூலமா. வணக்கம் ஜென்சி.

வணக்கம் தோழர்.

உங்கள எனக்கு முதல்-ல அறிமுகப்படுத்துனது புத்தகத்திருவிழா-ல உங்கக் குரல் தான். அதுல இருந்தே நம்ம உரையாடல ஆரம்பிக்கலாம்-னு நெனைக்கிறேன். அந்த வாய்ப்பு எப்டி கெடச்சுது? அதுல இருந்த உங்க அனுபவம் எப்டி இருந்துச்சு?

சென்னை புத்தகக்கண்காட்சியில 7 வருஷமா நான் அறிவிப்பாளரா இருக்கேன். நான் திருநங்கையா மாறுறதுக்கு முன்னாடில இருந்தே அங்க அறிவிப்பாளரா இருக்கிறேன். அப்ப இருந்ததுக்கும், திருநங்கையா மாறுனதுக்கு அப்புறம் இருக்கத்துக்கும் நெறய வித்யாசங்கள் இருக்கு. ரொம்ப பதட்டம் இருந்துச்சு. முன்னாடில்லாம் கொஞ்சம் ஆண் குரல் இருந்தாலும், ஆண்களுக்குரிய உடை போட்ருக்கனால ஆண் குரல் தான்னு நெனச்சுக்குவாங்க. ஆனா இப்ப ஆண்-பெண் குரல் சேந்து, பெண்கள் அணியுற உடையோட பேசுறனால என்ன நெனப்பாங்களோ அப்டின்ற தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. ஆனா நான் சேந்த மொத நாளே வாசகர்கள்-லாம் வந்து உங்க வாய்ஸ் (voice) செம்மையா இருக்குன்னு பாராட்டுனாங்க. நியூஸ்7 தொலைக்காட்சில “சென்னை புத்தகக்கண்காட்சியில், ஜென்சி என்ற திருநங்கை, ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பயிலும் மாணவி, தன்னுடைய வசீகர குரலில் வாசகர்கள் கவனத்தை ஈர்த்தார்” அப்படின்ற மாதிரியான செய்திலாம் வர ஆரம்பிச்சுடுச்சு. உள்ள இருந்த வாசகர்கள்-லாம் கூட சிலர் பாராட்டுனாங்க. இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் வந்ததுக்கு அப்புறம் என்னுடைய குரல இன்னும் மென்மையாக்கணும், எனக்குள்ள இருக்க தன்மைய வெளிப்படுத்த ஆரம்பிக்கணும்னு நான் செய்லபட ஆரம்பிச்சேன். செய்தி ஊடகங்கள் நிறைய பேட்டி எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்தக் குரல் எனக்கு கடவுளால கொடுக்கப்பட்டது. நான் இதுக்காக எந்தப் பயிற்சிக்கும் போகல. சின்ன வயசுல இருந்து எனக்குத் தமிழ் ரொம்ப புடிக்கும். அப்டித்தான் எனக்கு இந்தப் புத்தகக்கண்காட்சியில அறிவிப்பாளரா போகணும்ன்ற ஆர்வம் வந்துச்சு. அது இல்லாம நான் ரேடியோ (radio)-ல RJ-வாவும் இருந்துருக்கேன்.

மகிழ்ச்சி. எனக்கு இப்படித்தான் நீங்க அறிமுகமானிங்க. அதே மாதிரி நம்ம மின்னிதழ் வாசகர்களுக்கும் நீங்க இப்டி அறிமுகமாகனும்ன்ற ஆசைல தான் நான் இந்தக் கேள்வியோட நம்ம உரையாடல தொடங்குனேன். ஜென்சி-ன்ற பேரு எனக்கு ரொம்பப் புதுமையாவும் வித்தியாசமாவும் இருந்துச்சு. உங்களோட குடும்பம், உங்களோட இளமை, உங்களோட மாறுதல் அனுபவத்தை பத்தி உங்க பள்ளிப்பருவத்துல இருந்து நீங்க சொல்லலாம்.

என்னுடைய சொந்த ஊர் திருத்தணி பக்கம் RK பேட்டை-ன்னு சொல்லக்கூடிய ஒரு சின்ன கிராமம் தான். என்னுடைய இந்தப் பெண் தன்மையை நான் ரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே உணர்ந்துட்டேன். அப்ப இருந்தே பெண்கள் செய்ற வேலையெல்லாம் செஞ்சுட்டு இருப்பேன். ஆண் நண்பர்கள் நட்பே எனக்குக் கெடயாது. கிராமம்னாலே இப்டி இருக்கவங்க எவ்ளோ கிண்டல் பண்ணுங்கன்னு எல்லாருக்குமே தெரியும். அந்த மாதிரியான சீண்டல்கள்-லாம் எனக்கும் இருந்துச்சு. பெண் நண்பர்களோட வெளையாடறது, அவங்களோட பேசி சிரிக்கிறது, அப்டியாத்தான் என்னோட ஆர்வம் இருந்துச்சு. அப்ப வீட்ல அப்பா, அம்மா கூப்டு திட்றது-ன்னு அப்டியே போச்சு. கொஞ்ச நாள்-ல அப்பா இறந்துட்டாரு. ஸ்கூல்-ல நான் நல்லா படிக்கிற மாணவி. நான் தான் முதல் மதிப்பெண் எடுப்பேன். நான் தான் லீடர் (leader)-ஆவும் இருப்பேன். அப்டி இருந்தனால எனக்கு வகுப்பு-ல பிரச்சனை இருந்ததில்ல. எனக்குள்ள அந்தப் பெண் தன்மை அதிகமாகிட்டேதான் இருந்துச்சு. சீக்கிரம் அறுவை சிகிச்சை பண்ணனும், புடவை கட்டணும், அந்த மாதிரியான எண்ணங்கள்லாம். ஆனாலும் நான் எனக்குன்னு லட்சியத்த வகுத்துக்கிட்டேன். படிச்சு பெரிய ஆளா வந்து எல்லா திருநங்கைகளுக்கும் நான் ஒரு முன்னுதாரணமா இருக்கணும்னு. அப்ப இங்க ஊர் பக்கத்துல இருக்க ஒரு சில திருநங்கைகளோட நடவடிக்கைகளெல்லாம் பாக்கறப்ப எனக்கு பயமா இருக்கும். கை தட்டி காசு கேக்கற மாதிரியான நடவடிக்கைகளை பாக்கறப்ப நம்மளும் இப்டி ஆகிடுவோமோன்ற பயம் வரும். ஆனாலும் அதெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு, எனக்கு ஆசிரியர் ஆகணும்ன்ற ஆசை இருந்தனால நான் படிச்சு ஆங்கிலத்துறை பேராசிரியர் ஆகணும்-ன்ற ஆசைய வளத்துக்கிட்டேன். 12-வதுல எங்க வகுப்புலயே முதலாவதா தேர்ச்சி பெற்றேன். எங்க ஊர்லயே ஒரு சின்னக் கல்லூரி-ல இளங்கலை முடிச்சேன். அப்பல்லாம் என்னோட அந்தப் பெண் தன்மைகள வெளிக்காற்றத நான் கொறச்சிக்கிட்டேன். இருந்தாலும் சிலர் என்னுடைய நடை, பாவனைகள பாத்து கண்டுபுடிச்சுடுவாங்க. அப்டி இருந்தாலும் என்னுடைய திறமையெல்லாம் பாத்து என்ன கிண்டல் பண்றத கொறச்சுக்கிட்டாங்க. இளங்கலை-லயும் நான் தான் தங்கப்பதக்கம். முதுகலை படிக்க அம்மாவ ஊர்ல விட்டுட்டு நான் சென்னைக்கு வந்தேன். முடிச்சுட்டு அப்றம் M.Phil., சேந்தேன். RJ-வா வேலைக்கு சேந்தேன். அப்றம் சில பசங்களுக்கு tuition எடுத்தேன். அவங்களும் எனக்குக் கொஞ்சம் ஆதரவு தந்தாங்க. அப்றம் கொஞ்ச நாள்ல அம்மாவும் இறந்துட்டாங்க. அதுக்கு அப்றம் நானாவே Ph.D., பண்ணணும்ன்ற உத்வேகத்துல இருந்தேன். அதே நேரத்துல அறுவை சிகிச்சையும் பண்ணிக்கலாம்ன்ற முடிவுக்கும் வந்தேன். ஆனா அறுவை சிகிச்சைக்கு அப்றம் Ph.D., இடம் கேட்டா குடுக்க மட்டங்களோன்ற குழப்பமும் இருந்துச்சு. அதனால மொதல்ல Ph.D., சேந்துருவோம்ன்னு தேடிட்டு இருந்தப்பத்தான் லயோலா கல்லூரில Ph.D., கெடச்சுது. அங்க என் guide (கைடு) கிட்ட நான் எல்லாத்தயும் சொன்னேன். அவங்க எனக்கு guide (கைடு)-ஆ கிடைக்க நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும். அவங்க பேரு Dr. P. மேரி வித்யா பொற்செல்வி, லயோலா கல்லூரில ஆங்கிலத்துறைல உதவிப் பேராசிரியரா இருக்காங்க. என்கிட்ட அவங்க உன் பாலினம் எனக்கு முக்கியம் இல்ல, உன் வேலைல தரம் இருக்கணும்-னு சொன்ன உடனே எனக்கு ரொம்ப சந்தோசம் ஆகிடுச்சு. அப்றம் நான் அறுவை சிகிச்சைக்குப் போனேன். சிகிச்சை முடிச்சுட்டு என்னோட ஆவணங்கள் எல்லாத்தயும் திருநங்கைகள் சட்டத்தின்படி முறையா மாத்திட்டு இருக்கேன். கூடிய சீக்கிரத்தில என்னுடைய Ph.D.,-ய முடிச்சுட்டு இந்தியாவுலயே முதல் திருநங்கை ஆங்கிலத்துறை பேராசிரியரா வரணும்ன்றதுதான் என்னுடைய லட்சியம். அது சீக்கிரமே நடக்கப்போகுது.

விரைவில் அது நடந்தேற பால்மணம் சார்பா வாழ்த்துகள். உங்களோட சமூக வலைதள பதிவுகள நான் பாப்பேன். எனக்கு நெறய திருநங்கை சகோதரிகள் நண்பர்களா இருக்காங்க, நெறய பேரோட நான் நெருங்கிய தொடர்புல இருக்கேன். அவங்களோட பதிவுகள பாத்துட்டு உங்களோடத பாக்கறப்ப எனக்கு கொஞ்சம் வித்யாசமா இருந்துச்சு. எல்லோரக் காட்டிலும் நீங்க தனித்துவமா இருந்திங்க. அப்டி பாக்கறப்ப உங்கள்ட இருந்து நாங்க கத்துக்க எதோ இருக்கு-ன்னு தோணுது. நீங்க உங்க பள்ளி வாழ்க்கையை பத்தி சொன்னப்ப என்னோட வாழ்க்கை தான் ஞாபகம் வந்துச்சு. நானும் கொஞ்சம் நல்லா படிச்சனாலதான் பெரும் கிண்டல்களுக்கு ஆளாகாம இருக்க முடிஞ்சுது.

கண்டிப்பா. என்கூட இன்னொரு திருநங்கை தோழியும் படிச்சாங்க. ஆனா பெருசா படிக்க மாட்டாங்க. அவங்கள்ட பசங்க எல்லாரும் கிண்டல் பண்றது, உடைய புடிச்சு இழுக்கிறது அந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பண்ணுவாங்க. ஆனா என்கிட்டே எப்பயும் அந்த மாதிரி பண்ண மாட்டாங்க. அது நம்ம கொள்கை, சிந்தனை, செயல்பாடுகள், படிப்பு திறமையினால் மட்டும் தான் கெடச்சுது. நான் இளங்கலை மட்டும் தங்கப்பதக்கம் இல்ல, முதுகலை, M.Phil.,-லயும் நான் தங்கப்பதக்கம் தான். M.Phil., வரைக்கும் நான் அரசு நிறுவங்கள்-ல தான் படிச்சேன்.

மகிழ்ச்சி. சமீபத்துல நான் கேள்விப்பட்டேன். சட்டசபைல ஒரு MLA-வால உங்க பெயர் சொல்லப்பட்டுச்சு. அத நீங்க கேள்விப்படும்போது எப்படி உணர்ந்தீங்க?

நான் திருநங்கையா மாறி என்னோட ஆவணங்கள் எல்லாத்தையும் மாத்துனது உதயநிதி அண்ணா-வோட தொகுதில தான். நான் திருநங்கையா மாறி முதன்முதல்ல ஓட்டு போட்றப்ப அவங்க ஜெயிச்சாங்க. ஓட்டு போட்ட நேரத்துல நான் அறுவை சிகிச்சை பண்ணி நடக்க முடியாம போய் ஓட்டு போட்டேன். உண்மையாவே, அப்ப அண்ணா ஜெயிச்சாங்கன்னா எப்படியாச்சும் நமக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கலாம் னு நான் மனசுல நெனச்சேன். அதே மாதிரி முடிவு வந்ததும் எனக்கு ரொம்ப சந்தோசம். அதுமட்டும் இல்லாம உதயநிதி அண்ணன் அடிக்கடி தொகுதிக்கு வந்து எங்களை பாத்து பேசுறது, தேவைகள கேட்டு தெரிஞ்சுக்குவாரு. முக்கியமா படிக்கிற திருநங்கைகளை அவரு ரொம்ப ஊக்கப்படுத்துவாரு. அண்மைல நடந்த galatta crown நிகழ்ச்சி stage-ல தான் நான் முதன்முதல்ல அவரோட பேசுனேன். சட்டப்பேரவைல நீங்க பேரு சொன்னது நான் தான்னு என்ன அறிமுகப்படுத்திக்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரு சட்டப்பேரவை ல சொன்ன video-வ பாக்கும்போது, தமிழ்நாட்ல எவ்ளோ பெரிய பெரிய ஆட்கள்லாம் இருக்கப்ப, சாதாரண ஒரு திருநங்கையான என்னய பத்தி பேசுனாங்கன்றது ரொம்பவே சந்தோசமா இருந்துச்சு. இத கேக்றதுக்கு என் அப்பா, அம்மா இல்லையென்ற ஒரே ஒரு வருத்தம் மட்டும் தான்.

அவர்கள் இப்பவும் சந்தோசம் தான் படுவாங்க. வரலாற்று சிறப்புமிக்க சட்டசபைல அவைக்குறிப்புல உங்க பேரு இருக்கு அப்டின்றது தான் நான் ரொம்ப நெகிழ்ந்து போன ஒரு சம்பவம். அடுத்ததாக, அரசியல்ல உங்களுக்கு ஆர்வம் இருக்கா? அரசியலையும் நம்ம சமூகத்தையும் நீங்க எப்படி பாக்குறீங்க?

இப்ப இருக்க அரசியல் என்ன பொறுத்த வரைக்கும் 90% நம்ம LGBTQIA+ சமூகத்தோட தன்மைய புரிஞ்சு நடந்துக்குறாங்கன்னு தான் நான் சொல்லுவேன். எல்லா விதத்துலயும் மக்கள்கிட்ட நம்மள பத்தின விழிப்புணர்வு கொடுக்குறாங்க. இலவச பேருந்து பயணம் பத்தின குறும்படங்கள்ல நான் கூட நடிச்சுருக்கேன். நம்மளையும் அந்தக் காணொளில காட்டணும்னு அவங்க நெனச்சது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்ப இருக்க அரசியல் சூழல்-ல நம்ம சமூகத்தை நிறைய ஊக்குவிக்குறாங்க-ன்றதுல எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது. என்னயப் பத்தி சொல்லனும்னா எனக்குப் பேராசிரியர் ஆகுறதுன்றது தான் முதல் லட்சியம். அத நோக்கி தான் நான் போய்ட்டு இருக்கேன். எனக்குப் புடிச்ச அரசியல பேசணும், உதாரணம் நமக்கு அவங்க என்னென்ன பண்ணிருக்காங்க அப்டின்றத பொதுக்கூட்டத்துல எடுத்து சொல்லணும்-ன்ற ஆசையும் இருக்கு. வருங்காலத்துல நான் அதும் பண்ணலாம்னு இருக்கேன்.

LGBTQIA+ சமூகத்துல நீங்க சந்திச்ச போராட்டம் என்ன, இல்ல நீங்க பாத்து இப்புடில்லாம் நடந்துருக்கக் கூடாது அப்டினு நீங்க நெனைக்குற விஷயம் ஏதாவது இருக்கா? இன்னும் இந்த சமூகம் மாறனும்னு நீங்க நினைக்கிற ரொம்ப மோசமான நிலைமை ஏதாவது இருக்கா?

நிறையவே இருக்கு. நம்மள ஏத்துக்கிட்டி நமக்கு ஆதாரவா பேசுற மக்கள் இங்க இருக்க மாதிரி, நம்ம உணர்வுகளை புரிஞ்சுக்காம நமக்கு எதிரா பேசுற மக்களும் இருக்காங்க. ஏதோ ஒரு விதத்துல நம்மள குறை சொல்லிட்டே இருப்பாங்க. எல்லா இடத்துலயும் அப்டியானவங்க இருப்பாங்க. நான் அப்டி கண் முன்னாடி பாத்த விஷயம்-னா, நான் கல்லூரிக்கு ரயில்-ல தான் போவேன். அப்ப யாசகம் கேக்க திருநங்கைகள் வருவாங்கள்ல, அவங்க காசு வாங்கிட்டு போனதுக்கு அப்றம் அங்க இருக்கவங்க ரொம்ப கீழ்த்தரமான வார்த்தைகளையெல்லாம் பேசி கிண்டல் பண்ணுவாங்க அவங்கள. அத கேட்டு நெறய முறை கண்ணீர் விட்டு அழுத்துருக்கேன். மன ரீதியா நான் ரொம்ப கஷ்டப்பட்ட விஷயம் அது தான். இந்த மாதிரியான விஷயங்கள் தான் நானும் என் மாறுதல கொஞ்சம் தள்ளி வெச்சதுக்கான காரணமும் கூட.

திருநங்கைகளை மக்களும் சரி, அரசும் சரி இப்ப புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவர்கள தவிர்த்து LGBTQIA+ சமூகத்துல இருக்க மத்த மக்கள் வாழ்வியல் இப்ப எப்படி இருக்கு, இன்னும் எப்படி இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?

திருநங்கைகள் அவங்கள முன்னாடியே வெளிப்படுத்திக்குறாங்க. ஆனா மத்த மக்கள் அவங்கள வெளிப்படுத்திக்குறதுக்குள்ள அவங்க காலமே முடிஞ்சுபோய்டுது. அவங்க தங்கள வெளிப்படுத்துறதுக்கு முன்னாடியே வாழ்க்கைல எல்லாத்துலயும் அனுபவப்பட்டுடறாங்க. தன்பாலீர்ப்பாளரா இருந்து அவங்க குடும்பத்துக்கு பயந்து திருமணம் பண்ணிக்கிற நெறய பேர நான் பாத்துருக்கேன். நெறய விஷயங்கள-ல அவங்க பாதிக்கப்படறாங்க. இவங்க எல்லாரப்பத்தியும் மக்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரியான முன்னெடுப்புகளை அரசாங்கம் செஞ்சாங்கன்னா இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

LGBTQIA+ சமூகத்துல திருநங்கைகளை தவிர்த்து மத்தவங்கள அரசு ஏன் இன்னும் முன்னிலைப்படுத்தல அப்படின்ற கேள்வி எனக்குள்ள இருக்கு. அத நீங்க எப்படி பாக்கறீங்க?

நான் முன்னாடியே சொன்ன மாதிரி இவங்க நெறய பேர் வெளிப்படுத்திக்கிறது இல்ல. உதாரணமா எனக்குத் தெரிஞ்சு நிறைய திருநம்பிகளே அவங்க ஆதார் கார்டு-ல கூட திருநம்பின்னு போட்டுகிறது இல்ல. என்கிட்டயே நெறய பேர் கேப்பாங்க நீங்களும் பெண்-ன்னு உங்க ஆவணங்கள்ல போட்டுக்கலாம்லன்னு. நான் அவங்கள்ட சொல்லுவேன் அப்படிப்பண்ணா எங்க சமூகமே இல்லாம போய்டும்ன்னு. அந்த மாதிரி நம்ம இப்படித்தான்-ன்றத வெளிப்படுத்துறதுக்கு நம்ம ஒண்ணுசேரனும்.

என்னப்பொறுத்தவரைக்கும் என்னென்னா நம்மள மாதிரியான நெறய அரசுசாரா நிறுவனங்கள் புத்தக வெளியீடு, Pride Walk மாதிரியான நெறய நிகழ்ச்சிகள் நடத்தி அரசுக்கிட்ட கொண்டுபோனாலும் இது பெருசா பேசப்படறதில்ல. சமூக வலைத்தளங்கள் தவிர்த்து ஊடகங்கள் இத கண்டுகொள்ளாம இருக்கது எனக்கு மிகப்பெரிய வருத்தம். ஊடகங்கள் இத நேர்மறையா கொண்டு போகலையா அப்டின்ற ஒரு கேள்வி எனக்கு இருக்கு.

நீங்க சொல்றத நானும் ஏத்துக்குறேன். அதுக்கு முன்னாடி நம்மளும் நம்மல வளத்துக்கணும்ன்னு நான் நெனைக்கிறேன். “Education is the modification of human behavior”-ன்னு சொல்லுவாங்க. நான் அத உணர்ந்துருக்கேன். கல்வி மட்டும் தான் என்னய இந்த நிலைக்கு கொண்டுவந்துருக்கு. நான் ஒரு சின்ன ஆய்வு பண்ணேன். எந்தெந்த கல்லூரில திருநங்கைகள் படிக்கிறாங்கன்னு ஆய்வு பண்ணப்ப, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுதான் இருக்கோம். இலவசமா இப்ப கல்வி கொடுத்தும் யாரும் அத தொடங்குறதுக்கு தயாரா இல்லை. இன்னொரு ஊடகத்தை நம்பி இருக்கத்துக்கு நம்மளே ஒரு ஊடகமா மாறணும்ன்றதுதான் என்னோட எண்ணம். எனக்கு இப்ப நிறைய ஊடக நண்பர்கள் இருக்காங்க. அவங்க என்கிட்டே நெறய நேரம் கேப்பாங்க, ஏதாச்சும் செய்தி இருந்தா சொல்லுங்கன்னு. நம்ம வளந்து வர்ற நாலதான் அவங்க நம்மள்ட்ட கேக்கறாங்க. நீங்களும் நானும் மட்டும் சேந்து நம்ம சமூகத்தை வளர்க்க முடியாது தோழர். எல்லாரும் அதுக்கு முன்வரணும்.

நீங்க சொல்ற மாதிரி இங்க நெறய பேர் வெளிய வராம இருக்கதுக்குக் காரணம் இந்த சமூகம் அவங்கள ஏற்றுக்கொள்ளதனாலதான்னு நான் நினைக்கிறேன். சொந்தக் குடும்பமே அவங்கள நெறய இடங்கள்ல ஒதுக்கிவைக்குறாங்க. அப்டி வெளிய வர்ற முடியாத பட்சத்தில் வேற ஒரு வழியா நீங்க எத பாக்கறீங்க? எந்த மாதிரியான முன்னெடுப்புகளை நம்ம எடுக்கலாம்?

அதுக்கு நம்மள மாதிரியான வெளிப்படுத்திக்கிட்ட மக்கள் நேர்மையா, ரொம்ப சுத்தமா அவங்களுக்கு ஆதரவு தரணும். நீங்க சொன்னது சரிதான், சமூகத்துனால பாதிக்கப்படறதுக்கான நெறய வழிகள் இருந்துட்டுதான் இருக்குது. நான் ஏத்துக்குறேன். இன்னைக்கு அரசியல்லயும் திருநங்கைகள் நெறய பேர் இருக்காங்க. நான் அவங்க பேசறதை கேட்ருக்கேன். எவ்ளோவோ பேர் அவங்களுக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுத்ததா சொல்லிருக்காங்க. அவங்க அதுக்கெல்லாம் பயந்திருந்தா இன்னைக்கு இந்த நிலமைக்கி வந்துருக்குமுடியாது. அதெல்லாத்தையும் அவங்க ஏத்துக்கிட்டாங்க. அது மாதிரி நமக்கும் நெறய கஷ்டங்கள் இருக்கும். என்னைப்பொறுத்தவரைக்கும் பெற்றோர்கள் அவங்கள ஏத்துக்கிட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும். வேற எதுவுமே தேவையில்லை. அப்பவே அவங்க பெற்றோரின் அரவணைப்புக்குள்ள வந்துருவாங்க. அது ஒன்னு தான் நம்ம செய்யணும். அதுக்கு என்ன பண்ணனும்னா, பாடப்புத்தகங்கள்ல இத பத்தின உரையாடல் இருந்துச்சுனாவே நல்லபடியா இருக்கும். அத யாரும் செய்யுறதுக்கு முன்வரமாட்டீங்கிறாங்க, அதுதான் கஷ்டம்.

நானும் என்னோட நண்பரோட பேசும்போதும் இத ஒத்த கருத்துல பேசிருக்கோம். நம்மோட ஆர்வம் எல்லாம் தொடங்கும் புள்ளி பள்ளிப்பருவம் தான். அங்க இருந்து நம்ம ஆரம்பிக்கணும்ன்னு. ஆனா நம்மோட பாடப்புத்தகங்கள்ல இப்ப அது வருமான்றது கேள்விக்குறி. ஆனா சகோதரன், அணியம் மாதிரியான தொண்டு நிறுவனங்கள் இதைப்பத்தின கருத்தரங்கங்கள் மாதிரி நடத்தி பள்ளிக்குழந்தைங்கள் கிட்ட இத கொண்டுசேர்க்கணும்-ன்றது என்னோட ஆசை. எனக்கு ஒரு பெரிய ஆவல் இருக்கு. அரசு இதுல தலையிட்டு, மாசத்துக்கு ஒரு விழிப்புணர்வு வகுப்பு இல்லன்னா பள்ளியிலேயே ஆலோசனை வழங்கக்கூடிய அளவுக்கு ஒரு உளவியல் நிபுணர் இருக்கணும்-ன்றது என்னோட ஒரு ஏக்கம். நானே என்னோட பள்ளியில என்னய யாராச்சும் என்னுடைய நடை, உடை, பாவனைகள வெச்சு கிண்டல் பண்ணும்போது, அத அங்க சொல்லி அழ கூட எனக்கு ஆள் இல்ல. அப்ப அரசுப்பள்ளியில் அத தீக்குற மாதிரியான ஒரு ஆள் இருந்தாருன்னா நம்மள மாதிரியான சமூகத்துக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்-ன்றது என் கருத்து.

கண்டிப்பா. இது எல்லாத்துக்கும் ஆரம்பப்புள்ளி கல்வி. அங்க கைவெச்சாதான் இதுக்கு தீர்க்கமான முடிவு வரும். அப்டி இருக்கப்பத்தான் பசங்களும் புரிஞ்சுக்குவாங்க.

இப்ப நீங்க ஒரு திருநங்கையா, திருநங்கை சமூகத்துக்கும், LGBTQIA+ சமூகத்துக்கும் வருங்காலத்துல எதோ ஒன்னு பண்ணனும்-னு நெனச்சா என்ன பண்ணுவீங்க?

முன்னாடியே சொன்ன மாதிரி கல்வி தான் மனிதனிடத்துல மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஒன்னு. அதனால நம்ம LGBTQIA+ சமூகத்துல இருக்க மாணவர்கள் படிக்கிறதுக்காக என்னால முடிஞ்ச உதவிய நான் பண்ணுவேன். நான் ஒரு அரசு வேலைக்குப் போயிட்டா கை நெறைய சம்பாரிக்க முடியும்ன்றது எனக்குத் தெரியும். அதுக்கு அப்றம் படிக்கணும் னு ஆசைப்படறவங்களுக்கு கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவிய பண்ணுவேன். Ph.D., வரைக்கும்-ன்னா கூட என்னால முடிஞ்சது கண்டிப்பா பண்ணுவேன். இது என் நெஞ்சுக்குள்ள ஒரு அனலா இருந்துட்டேதான் இருக்கும்.

உங்களோட உரையாடுனது ரொம்ப சந்தோசம். உங்கள பத்தியும், உங்க எதிர்கால நோக்கங்கள் பத்தியும் ரொம்ப அழகா சொன்னிங்க. கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டோட முதல் திருநங்கை ஆங்கிலப் பேராசிரியரை சீக்கிரம் நாங்க பாக்கணும். உங்களோட எண்ணங்கள் வெற்றியடைய அணியம் சார்பாகவும், பால்மணம் சார்பாகவும் எங்களோட வாழ்த்துகளை தெரிவிச்சுக்குறேன். நம்மளோட போராட்டக்களம் வேறயா இருக்கலாம், ஆனா போராட்டம் ஒண்ணுதான். நம்ம ஒன்னு சேந்து போராடுவோம். நம்முடைய சமூகம் முன்னிலைப்படுத்தப்பட, எல்லாருக்கும் எல்லாமும்-ன்ற நோக்கம் தெளிவடையனும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்படணும், அரசாங்கமும் இதற்கான முன்னெடுப்புகளை எடுக்கும்ன்னு நம்புவோம். தோழர் ஜென்சி அவர்களோட உரையாடுனதுல மிக்க மகிழ்ச்சி. இன்னும் பெரும் உயரங்களை நீங்க அடையணும்.

என் பேச்சுல ஏதும் குறை இருந்து யாரையும் காயப்படுத்துற மாதிரியிருந்தால் தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க. மிக்க நன்றி.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன