பால் மணம் மின்னிதழ் திண்ணையின் கீழ் இந்த நேர்காணல் அமைவது எங்களுக்கு மகிழ்ச்சி. 

எங்கள் வாசகர்களுக்கு உங்களை பற்றிய சிறு அறிமுகம். 

 

என் பெயர் பிரஸ்ஸி என் சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் fashion designing படித்திருக்கிறேன். இப்போது என் துறையில் சொந்தமாக designing செய்து வருகிறேன். இதை தாண்டி சென்னையில் ஒரு தனியார் கல்லுரியில் உதவி பேராசிரியராக இருந்து வருகிறேன். ஆசிரியராக இருப்பது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அத்துடன் டிசைனிங் மாடெலிங்கும் செய்து வருகிறேன்.

 

உங்கள் சிறு வயது பற்றி சில வார்த்தைகள்

 

எல்லா திருநங்கைகள் போல் நானும் சிறு வயதில் என் பெண்மையை உணரும் முன் உலகம் உணர்த்தியது, நான் வித்தியாசமாக உள்ளேன் என்று. எப்போது என்று நியாபகம் இல்லை ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை சந்தோஷமாக இருந்தேன். அதன் பின்னர் வெளியேயும் வீட்டிலும் நான் கேலி கிண்டலுக்கு ஆளானேன். அப்போது நான் யார் என்று புரியவில்லை. ஒரு திருநங்கையை பார்த்தேன். பெரிய பொட்டு, தலை நிறைய பூ வைத்திருந்த அவர்களை பார்த்து இப்படி தான் என் வாழ்க்கையா என பயந்தேன்.  அன்று யாரிடமும் இல்லாத புரிதல் தான் இதற்கு காரணம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நான் திருநங்கை என்று முழுதாய் உணர்ந்து கொண்டேன்.

 

உங்களுக்கு நடந்த வன்கொடுமைகள் ?

 

இன்று வளரும் குழந்தைகளுக்கு good touch bad touch பற்றி தெரிகின்றது. ஆனால் அன்று அந்த புரிதல் இல்லை. நான் சாதாரணமான பிள்ளையும் இல்லை, வித்யாசமாக இருப்பதால் பல முறை பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளேன். என் உறவுக்கார அண்ணன்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்வார்கள். நான் சரியாக வேண்டும் என்று என்னை ஒரு பாதிரியார் வீட்டில் விட்டு விடுவார்கள். அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்வார். இதை விட்டில் சொல்ல முடியாது, சொன்னால் நம்ப மாட்டார்கள் என்று பயம். இன்று வரை நான் சொன்னதில்லை. இது போன்ற பல புதைக்கப்பட்ட கதைகள் உள்ளன.

 

இதுதான் உங்கள் பாலினம் என்று எப்போது அறிந்து கொண்டீர்கள்?

 

சிறு வயதிலிருந்தே பெண் போல் இருக்க ஆசை இருந்தது, என் அக்காவை போல உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாய் இருக்கும், சில முறை அதை முயர்ச்சியும் செய்தேன் நான்கு செவுற்றுக்குள். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது வெளியே அவ்வாறு நடந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னை அடித்தார்கள் பல முறை. ஒரு காலத்தில் நான் வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியாது ஒரு அறைக்குள் அடைத்து வைத்தனர். இதற்கு முன்னர் என் அப்பா என்னை விடுதியில் விடுவதற்காக பெங்களூர் என்ற இடத்தில் விட்டுவிட்டு பேருந்து நிலையத்திலிருந்து சென்று விட்டார். நான் அவர் என்னை தொலைத்து விட்டார் என்று எண்ணி சிலரின் உதவியுடன் கோயம்புத்தூர் வந்து விட்டேன். வீட்டிற்கு வந்தால் நான் ஏன் வந்தேன் என குழம்பி இருந்தனர். அவர்களுக்கு நான் தேவையில்லை என்று புரிந்தது. அதற்குப்பின் அடைத்து விட்டார்கள். மூன்று மாதங்கள் எதுவும் செய்யாமல் மணோ ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாக்கினார்கள். இருக்க முடியாமல் ஒரு நாள் விருந்தினர்கள் வந்திருந்த போது கதவை தட்டி கத்தி வெளியே வந்தேன். அப்பாவுக்கு பயங்கர கோபம். என்னை எப்போதும் பொட்டை என்று திட்டுவார், அப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து பொட்டையை பெற்றிருக்கிரீர்களே நீ பொட்டையா இல்லை நான் பொட்டையா என கேட்பேன். அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதனால் விட்டு விட்டு வந்து விட்டேன்.

 

இதற்கு பின் உங்கள்.  வாழ்க்கை என்ன ஆனது?

 

அங்கிருந்து வெளியேறி காந்திபுரம் பேருந்து நிலையம் வந்தேன். அங்கு பல திருநங்கைகள் இருப்பார்கள். அவர்களில் இருவர் என்னை பார்த்தார். அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார். எனக்கு வேறு வழி இல்லை. பின்னர் அவர் என்னை மும்பை கூட்டி சென்றார். கடத்தி செல்லவில்லை. என் முழு விருப்பத்தோடு சென்றேன். அங்கு ஒரு பெரிய விடுதி, திருநங்கைகள் இருக்கும் இடம். என் வயது இருக்கும் திருநங்கைகளோடு சிறிது காலம் நன்றாகவே இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. என்னால் ஆதாயம் ஏதுமில்லாமல் என்னை பார்த்துக் கொள்ள மாட்டார்கள் அல்லவா. தெருவில் பிச்சை எடுக்க அனுப்பி வைத்தார்கள். நானும் சென்றேன். நான் சிறு வயதில் பருமனாக இருந்த காரணத்தால் எனக்கு காசு தர மாட்டார்கள். இதனால் நான் காசை வாங்கி சாப்பிட்டு விடுகிறேன் என என்னோடு இருந்தவர்கள் சொல்ல அங்கேயும் அடி உதைகள். இதை நான் சொல்வற்குக் காரணம் திருநங்கை சமுதாயத்தில் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களுக்கு உண்டு என்று பதிய வைக்க. எனக்கு வழி காட்டிய நல் உள்ளங்களும் உள்ளனர். அதன் பின்னர் ஒன்றரை மாதம் அடியும் உணவின்மையும் எல்லோரையும் போல் ஆக்கி விட்டது. இவ்வாறு வாழ்க்கை போனது. எனக்குள் எப்போதும் ஓர் ஆற்றல் இருந்து கொண்டு இருக்கும். படிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்படி மாட்டிக் கொண்டோமே, நம் வாழ்க்கை மாறாதா என்று தினமும் தூங்கும் முன் நினைப்பேன். தூக்கம் வரவும் வராது. ஆனால் எனக்குள் எப்போதும் ஒரு நம்பிக்கை இருந்தது. அங்கு எனக்கு ஒரு ஹிந்தி கார அண்ணா மிகவும் பழக்கமானார். மொழி தடை இருந்தும் நான் படும் துன்பம் பார்த்து எனக்கு உதவி செய்ய முர்ப்பட்டார். அவருக்கு அப்போது வயது இருபது இருக்கும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்தது சிரிய காதல் என்று கூட சொல்லலாம். அதன் நிமித்தமாக என்னை தப்பிக்க வைத்தார். சௌத்திரான் இரயலில் ஏற்றி விட்டார். வீட்டுக்கு போக பயம், ஆறு மாதத்தில் என் வாழ்வே தலை கீழாக மாறி இருந்தது. திருப்பூரில் இறங்கிவிட்டேன். எனக்கே ஒரு யோசனை அனாதை இல்லத்துக்கு போகலாம் அடைக்கலம் தேடி என்று. அதே போல சென்றேன். அங்கு ஒருவர் உதவினார். ஆனால் திருநங்கையாக இருப்பது சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றார். என் கல்விக்காக மறுபடியும் ஆணாக நடிக்க ஆரம்பித்தேன். ஒருவாறு 12ஆம் வகுப்பு வரை டுடோரியலில் படித்து முடித்தேன். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் எனக்கு உதவியாக இருந்தார். நான் திருநங்கையாக கல்லூரி சேர எல்லோரும் ஆவலுடன் இருந்தோம். ஆனால் என்னிடம் திருநங்கை என்பதற்கான ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. மறுபடியும் கல்விக்காக நான்கு ஆண்டுகள். கிண்டல், கேலிகல் நடுவில் படித்து முடித்தபின் சென்னை வந்தேன். இங்கும் பல ஒடுக்குமுறைகள். எங்கு போனாலும் திருநங்கை என்றவுடன் மறுப்பு வந்துவிடும். இரவில் பொட்டீக்கில் வேலை கேட்டு சென்ற போது அவர்கள் சொன்னது இங்கு வேலை செய்பவர்கள் எல்லோரின் சம்மதமும் கிடைத்தால் நீங்கள் வேலை செய்யலாம் என்றார்கள். இதுவே ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்காது. அங்கு நான் வேலை செய்ய முடியாது என்று புரிந்து கொண்டேன். வேறு வேலைகள் கிடைத்தது ஆனால் நான் அதற்க்காக படிக்கவில்லை. என் துறையில் வேலை இருந்தும் திருநங்கை என்பதால் வேலை தர மறுத்தனர். இதனால் அதிகம் பிச்சை எடுக்கவும் பாலியல் தொழிலுக்கும் தல்லப் படுகிறார்கள். எனக்கும் உதவி கிடைக்காமல் இருந்திருந்தால் அதே நிலைக்கு போயிருப்பேன் என தோன்றும்.

 

உங்கள் வாழ்வின் திருப்பு முணையாக இருக்கும் உங்கள் துறையில் வேலை கிடைத்தது பற்றி சில வார்த்தைகள்

 

விளம்பரங்கள் சார்பாக ஒரு வேலை பார்த்து கொண்டிருந்தேன். பிறகு டீச்சிங் வேண்டும் என்று சொன்னார்கள். நம்ம துறை இல்லை என்று தெரிந்தும், சரி பரவாயில்லை என்று அந்த கம்பெனிக்கு இன்டர்வியூக்கு சென்றேன். அங்கும் 2,3 டெஸ்ட் வைத்து செலக்ட் செய்தார்கள். தற்போது பேஷன் டிசைனிங் துறையில் கல்லூரி ஆசிரியராக இருக்கிறேன். எனக்கு இன்ஜினியரிங் பற்றி எதுவும் தெரியாது. நான் படித்தது ஃபேஷன் டிசைனிங் தான்.

 

இன்று உங்கள் தாய் தந்தையுடனான உறவு எப்படி இருக்கிறது?

என்னுடைய அக்கா என்னுடன் பேசுவார்கள். அம்மா அப்பாவுக்கும் பிடிக்கும். அப்பா அம்மாவைப் பொறுத்தவரை நான் பேச வேண்டுமென்றால் பஸ்டாண்ட் போன்ற இடங்களில் வந்து பேசிக்கொள்ளலாம். அப்போதுதான் நான் வாழ்ந்த ஊரில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கௌரவம் கொடி பிடித்துக் கொண்டிருக்கும். இன்றும் என்னால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. முதலில் எனக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இல்லை. கடைக்கு போனாலும் அது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. வீட்டில் எப்படி என்றால், அக்காவிற்கு கல்யாணம் செய்தாயிற்று. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வயதாகிவிட்டது. நடுத்தர குடும்பம் தான். இப்போது நான் ஒரு நல்ல நிலைமையில் இருப்பதால், மாமாவிற்கு மாதமாதம் பணம் அனுப்புகிறேன். அதனால் என்னிடம் பேசுகிறார்கள். நானும் அவர்களிடம் என்ன ஏது என்று கேட்டுக்கொண்டு பார்த்துக் கொள்கிறேன். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் வேறு வழி இல்லை, நான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதனால் பெற்றவர்களை யாவது பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா. ஒருவேளை அவர்கள் நினைப்பது போல், 100% ஒரு நல்ல பையனாக இருந்திருந்தால் உயிரை கொடுத்தும் படிக்க வைத்து இருப்பார்களோ என்னவோ. ஆனால் நான் இப்படி இருந்ததால், கடவுளின் அருளால் ஓரளவு படித்து இன்று இந்நிலையிலிருந்து அவர்களை பார்த்துக் கொள்கிறேன்

 

காதல் பற்றிய தங்களின் கருத்து:

காதல் என்பது உண்மையில் ஒரு புனிதமான ஒன்று. இன்று ஒரு ஹெட்ரோ செக்ஸுவல் காதல் எவ்வளவு உண்மையானது என்று கணிக்க முடியாது. ஆனால், ஒரு ஹோமோ செக்சுவல் காதலோ,LGBTQIA+ காதலோ 100% உண்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதை மற்றவர்கள் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது வெறும் செக்ஸ் மட்டும் தான் தெரிகிறது. இதே ஒரு ஆணும் பெண்ணும் காதல் கொண்டால், அவர்களிடையே ஒரு ரிலேஷன்ஷிப், ரொமான்ஸ், சாங் எல்லாம் தெரிகிறது. இப்போது, என் நண்பர்கள் இருவரும் கே, அவர்கள் காதலர்கள் என்றால் இவர்கள் செக்ஸ் கொண்டால் எப்படி இருக்கும் என்று தான் எண்ணிப் பார்க்கிறார்கள். நாம் எதற்கு அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பார்க்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஒரு கே மற்றொரு கே புரிந்துகொண்டு இருப்பது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை சமுதாயத்திற்கு தான் பெரிதாக தெரிகிறது. ஆனால் திருநங்கைகள் காதலிப்பது ஒரு LGBTQIA+ யில் இல்லாத ஒருவரை தான். அப்போது அவருக்கு திருநங்கைகளை பற்றிய புரிதல் என்ன இருக்கும். அவ்வாறு இருக்கையில், என்னை மும்பையிலிருந்து கடத்திக் கொண்டு வந்தான் அல்லவா. அவன் தானே காதல். எனக்காக செய்தான் அல்லவா. நான் வேலை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு பினான்சியல் ஆக உதவி செய்தார்கள். அக்காவைப் பார்க்க வேண்டுமென்றால் நீ கூட்டிச் செல்வார்கள். அவர் திருநெல்வேலி. அவர் காட்டிய அன்பு அக்கரையில் தான் எனக்கு அவர் மீது காதல் வந்தது. மிகவும் பிடிக்கிறது இன்னும் நீ காதலை சொல்ல சொன்னார்கள் ஆனால் எனக்கு எப்படி கூறுவது என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர் ஒரு சாதாரண ஆண். நம்மைப் புரிந்து கொண்டு இப்படி ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது. எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இதை சொன்னால் அந்த நட்பும் போய்விடுமோ என்ற பயம் இருந்தது. இந்த எண்ணம் அவருக்கும் விரிந்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்னர். இது எந்த அளவுக்கு நிலையானது என்பது தெரியவில்லை. அவருடைய பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் வேண்டாம் என்று கூறினார்கள். இன்றும் காதலில் தான் இருக்கிறோம். என்னுடன் தான் இருக்கிறார். அவருடைய வீட்டிலும் நிறைய போராடி என்னுடன் வந்து விட்டார். அவர் வீட்டிலும் ஒரு 50% என்னை ஓரளவு ஏற்றுக் கொண்டார்கள். இன்றும் ஊரறிய திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், யாருக்கும் யாரும் எழுதப்படவில்லை. ஒருவேளை இது சரிவராது செல்ல வேண்டுமென்றால் நீங்கள் செல்லலாம். இல்லை நான் தான் வேண்டும் என்றால் என்னுடன் இருக்கலாம். ஆனால் அவருடன் தான் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில், காதல் தோல்வியால் திருநங்கைகளும் தற்கொலை முயற்சி செய்து கொள்கிறார்கள். அது புரியவே இல்லை. இன்றும் அவர் என்னை விட்டு சென்றுவிட்டாள் என்னிடம் படிப்பு இருக்கிறது. அதை கடந்து சென்று நான் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தற்கொலை எல்லாம் என்ன கூடாது. இன்னும் சொல்லப்போனால், பெற்றோர்களை விட்டுவிட்டு உறவினர்களை விட்டுவிட்டு, சமுதாயத்தையும் எதிர்த்து நின்று, சர்ஜரி செய்து ஒரு பெண்ணாக வந்து நின்று பின்பு, ஒரு ஆண் உன்னை ஏமாற்றி விட்டான் என்பதற்காகவா தூக்கை தேடுகிறாய் என்று கேட்பேன். எத்தனையோ தூக்கிப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவன் சென்றால் என்ன ஒருவன் வருவான் அவ்வளவுதான். இன்றும் அவன் மீது அதிகாரம் காட்டியதில்லை, என் மீது அதிகாரம் காட்டியதில்லை. இருவருக்கும் ஒரு நல்ல மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் இருப்பதால்தான் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. அவனும் ஒரு நல்ல பையன்.

 

மிக்க மகிழ்ச்சி. தங்கள் இருவரின் குடும்பமும் ஒன்று சேர்ந்து திருமணம் வரை அழைத்துச் செல்ல வாழ்த்துகிறேன். அடுத்த கேள்வியாக, ஒரு திருநங்கையாக நீங்கள் திருநங்கை சமூகத்திற்கு சொல்ல விரும்பும் கருத்துக்கள்:

நம் சமுதாயம் இன்று ஒரு நல்ல ஸ்மூத் ஆக உள்ளது. ஒரு ஆண் பெண் போலவே நாங்களும் இந்த சமூகத்தில் வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம், இது நம் கண்ணுக்கு எட்டும் அளவில்தான் இருக்கிறது. இந்த உரிமைகளை வாங்கிக்கொடுத்த நம் முன்னோர்கள், இன்று புடவை கட்டிக் கொண்டு நிற்கிறோம். அன்று லுங்கி கட்டிக் கொண்டு பெண்மையை உணர்ந்து நின்றவர்களும் இருக்கிறார்கள். லுங்கியை தூக்கி கட்டும்பொழுது ஒரு பெண்மணி வரும், குடம் தூக்கும் போது ஒரு பெண்மணி வரும், முடி வளர்த்து இருக்க மாட்டார்கள் ஆனால் அந்தப் பெண்மணி தெரியும், அவ்வளவு கஷ்டப்பட்டு இன்று உரிமைகளை வாங்கி கொடுத்துள்ளனர். நம் முன்னோர்கள். நான் சொல்ல விரும்பும் ஒரே ஒரு விஷயம், மிக மிக முக்கியமானது. நமக்கு எப்படி இந்த உலகத்தில் வாழ உரிமை உள்ளதோ, அதேபோன்று எல்லா உயிரினங்களுக்கும் உள்ளது. அதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு 6 அறிவு என்கிறோம். விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்கிறோம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மானைக் கொண்டு கண்ணாடி முன் வைத்தாள், அதனுடைய பிரதிபலிப்பை அதற்கு தெரியாது உணராது. ஒரு மனிதனைக் கொண்டு நிறுத்தினால் தான், நான் இதை மான் என்று உணர்வான். தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும் ஒரு தன்மைதான். அந்த தன்னை அறிதல் தான் அந்த ஆறாம் அறிவு. அதனால் உன்னை நீயே அறிந்து கொள். சமுதாயத்தில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அந்தக் கல்வி என்பது அவசியம். ஒரு ஆசிரியராக சொல்கிறேன், கல்லூரி சென்று பாடம் படிப்பது தான் கல்வி என்பது அல்ல. ஒரு விஷயம் நீ கற்றுக் கொள்கிறாய் என்றால் அதுதான் நிஜமான கல்வி. என்னுடன் ஒரு திருநங்கை இருக்கிறார்கள். அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது, ஆனால் அவ்வளவு அழகாக மேக்கப் செய்கிறார்கள். அதுதான் கல்வி. உன்னை நீ காப்பாற்றிக் கொள்ள என்ன என்ன செய்கிறாயோ அதுதான் கல்வி. இப்போது நம் பவுண்டேஷன், ஜெயா ஆன்ட்டி அவர்களும் நிறைய செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அரசாங்கமே மூன்று மாத கால கல்வி போன்று நிறைய கொடுத்து வருகிறார்கள். திருநங்கைகளுக்கு சொல்லக்கூடிய மற்றொரு விஷயம், பணம் நிறைய இருந்தால் ஆனந்தமாக இருக்கலாம் என்று நினைப்பார்கள்.கிடையவே கிடையாது. அம்பானியே காரில் சென்று கொண்டிருந்தாலும், அவருக்கு அவ்வளவு பிரச்சினைகள் இருக்கும். அதனால் உன்னுடைய திறமையை வைத்து வலிமையை வைத்து வாழ கற்றுக் கொள். இன்று சமூகத்தில், நாம் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே சென்றால் போதும். இது எங்கே செல்கிறது? பிச்சை எடுக்க தான் செல்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். குறிப்பாக இரவில் கிளம்பி விட்டால் போதும். நம்மை ஒரு மனிதனாக வாழவே விடமாட்டார்கள்.எனவே அவர்களுக்கு ஒரு பெரிய மந்திரகோல் ஆக, கல்வியை வைத்திருந்தால் போதும். அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.

 

அடுத்த கேள்வி, நீங்கள் முன்மாதிரியாக நினைப்பவர்கள் யார் யார்?

 

நான் ஏற்கனவே சொன்னது போல், நான் ஒரு அனாதை ஆசிரமத்தில் இருக்கும் போது ஒரு மேம் என்னை பார்த்துக் கொண்டார்கள் அல்லவா. அவங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு ரத்த பந்தமும் கிடையாது. என்னை படிக்க வைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. ஆனால் படிக்கவைத்தார்கள். அந்த மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் தான் அவர்கள் தான் என்று என்னால் சுட்டிக் காட்ட முடியாது. அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.

 

இறுதி கேள்வியாக, ஒரு திருநங்கையாக சமுதாயத்திற்கு பொதுவாக கூற நினைக்கும் கருத்துக்கள் :

 

இன்று ஒரு 20 வயது பையனும் பெண்ணும் தன்னை ஒரு ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் நினைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணம் திரைப்படங்கள்தான். நானே திரைப்படம் சென்று பார்த்துவிட்டு வந்தால் என்னை ஒரு ஹீரோயினாக 20 நிமிடம் நினைத்துக்கொள்வேன். அந்த கேரக்டராகவே நாமும் மாறிவிடுவோம். அப்போது, இந்தத் திரைப்படம் ஊடகங்கள் மீடியா அவைகளுக்கு நிறைய சக்தி உள்ளது. மனிதனின் மனதை மாற்றும் அளவிற்கு ஊடகங்கள் இன்று செயல்படுகிறது. இன்று சமூகத்தில் LGBTQIA+ டிஸ்கிரிமினேஷன்க்கு ஊடகங்கள் 50% காரணமாக இருக்கிறது. அவர்களை கலாய்ப்பது போல் எடுப்பதனால். அங்கும் ஒரு செக்ஸ்சுவலாக தான் காட்டியிருப்பார்கள். ஏன் இருவரும் சாதாரண நண்பர்களாக இருப்பது போல் காட்ட வேண்டியதுதானே? எங்களுக்கு 2000 ரூபாய் கொடுத்து நடிக்க வரச் சொன்னால் வந்து தான் ஆக வேண்டும். ஏனெனில் வாழ்வாதார நிலை அப்படி. இன்று நாங்கள் சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் தான் இருக்கிறோம். மேக்கப் ஆர்டிஸ்ட், டீச்சர், மேலும் அறுவை சிகிச்சை படித்தவர்கள் முதற்கொண்டு பெரிய பெரியவர்களாக இன்றும் இருக்கிறார்கள். அப்படி கவுரவமாக இருந்து கொண்டிருக்கிறோம். எங்கும் எங்களை கவுரவமாக காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, தரைகுறைவாக காட்டாதீர்கள். இன்றும் அப்படிதான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. மக்களுக்கு LGBTQIA+ பற்றிய புரிதல் இல்லை. அனைவருக்கும் அதைப்பற்றிய புரிதல் நிச்சயம் வேண்டும். நம் இளவயது யாராலும் மீட்டுத்தர முடியாது. இன்றும் நான் எழுதி வைத்திருக்கிறேன், என் கனவை மீட்டுத் தாருங்கள் என்று. யாராலும் மீட்டுத்தர முடியாது. ஒருவர் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பது அந்த பள்ளி பருவத்தில் மட்டும்தான். அதையே நாங்கள் சிலர் தொலைத்து விட்டு நிற்கிறோம். என்னதான் நான் கல்லூரியில் வேலை பார்த்தாலும், பள்ளி பருவத்தை திருப்பித் தர முடியாது. எனவே எல்லா திருநங்கைகளுக்கும் சாதாரண மக்களைப் போல் சக உரிமை வேண்டும். அது முழுமையாக மக்கள் மனதில் ஏற்பட வேண்டும் என்ற விஷயம். அதை எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் எல்லாருக்கும் வேண்டும்.

 

 

நன்றி. தங்களை நேர்காணல் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நிறைய நுணுக்கமான விஷயங்களை எல்லாம் சொன்னீர்கள். நீங்கள் கூறிய விஷயங்களை எல்லாம் எண்ணி மிகவும் வியந்து உள்ளேன். நீங்கள் சொன்ன அனைத்துமே வெளிப்படையாக இருந்தது. சில இடங்களில் அந்த வலியும் உணர முடிந்தது. அனைத்திற்கும் நடுவில், சாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கண்டிப்பாக நடக்கும். தொடர்ந்து எங்களுடன் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். உங்கள் கனவுகள் அனைத்தும் நடக்க வேண்டும். உங்களுடைய வாழ்த்துக்கள். தங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக செலவழித்து மிக்க நன்றி. சந்திப்போம்.

-தினேஷ்

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன