இந்த காலேஜ்ல இனிமே உனக்கு இடமில்லை. நீ இங்க படிச்சா மத்த ஸ்டூடன்ஸ் எல்லாம் கெட்டு போயிடுவாங்க!  இல்லை நீ கெடுத்துடுவனு விரட்டி விட்டதும்,  வாழ்க்கையில என்ன பண்ண போறோம்னு அழுதுட்டே தன்னைப் பெத்த அம்மாகிட்ட வந்து நிற்கிற சபிதாவை பாத்து அவங்க அம்மா கதிகலங்கி போயிட்டாங்க. என்னப்பா ஆச்சு ஏன் அழுகுற?  ஏன் காலேஜ் விட்டுட்டு வந்துட்ட, கூட வந்திருக்க நீங்களாச்சும் என்ன நடந்துச்சுன்னு சொல்லுறீங்களான்னு கேட்க,  உங்க பையன் ஆம்பளையே இல்லையாம் அதான் காலேஜ் வரக்கூடாதுன்னு அனுப்பிட்டாங்க என சொல்லும் போது அந்த பெத்த மனசு என்னலாம் பாடுபட்டிருக்குமோ,

என் புள்ளை ஆம்பளையே இல்லையா, அப்போ யாரு அவன்?

இந்த கேள்விக்கு நிறைய பேருக்கு பதில் தெரியவில்லை. அப்படி தெரிந்திருந்தால்  திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யாமல், பிச்சை எடுக்காமல் கல்லூரி, வேலைவாய்ப்பு என்று சந்தோஷமாக குடும்பத்தோடு வாழ்ந்திருப்பார்கள்.

சமுதாயம் ஏன் இந்த கேள்விக்கு பதிலை தெரிந்து கொள்ள விரும்பவில்லை,  அப்படி தெரிந்துகொண்டவர்களும் அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

கேரளாவிற்கு மிக அருகில் தமிழ்நாடு எல்லையில் மீனவ கிராமத்தில்  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த சபிதா நான் மட்டும் தான் இந்த உலகத்தில் இப்படி இருக்கிறேனா? எனக்கு ஏன்  ஆண்களை பார்த்தால் வெட்கம் வருகிறது என்ற  கேள்விகளோடே எத்தனையோ நாள் “இயேசப்பா நான் கண்ணை மூடிக் கொள்கிறேன் நான் திரும்ப  கண்ணை திறக்கும் போது பெண்ணாக மாற்றிவிடு” என பல நாள் வேண்டியிருக்கிறேன்.

வீட்டிலேயே இருந்தால் ஒரு பெண்ணுடன்  திருமணம் செய்து விடுவார்கள் என நினைத்த சபிதா,  Roman catholic Father ஆக மாறிவிடலாம் என்று முடிவெடுக்கிறார். அந்த படிப்பை கும்பகோணத்தில் ஒரு வருடம் தொடர்கிறார், மீதமுள்ள 11 வருட படிப்பைத் தொடங்க ஆந்திரா நோக்கி சென்ற போது தான் அந்த கல்லூரியில்  அவர் பெண் வேடமிட்டு நடனம் ஆடுவதை ரசித்த அனைவரும்” நீ நிஜமாகவே பெண்ணாக  இருக்க சபிதா,  நீ ஆம்பள மாதிரி தைரியமா இல்ல கொழஞ்சு பேசுர பசங்கள கெடுத்துடுவ” என்று கல்லூரியை விட்டு வெளியேற உத்தரவிட்டார்கள்.

அதெல்லாம் இயற்கை என்று அந்த இயேசு அவர்களுக்கு சொல்லவில்லையா,  இல்லை இவர்கள் இயேசுவின் படைப்பு என  உணரவில்லையா என்று தெரியவில்லை.

ஆனால், இவையெல்லாம் பார்த்து சபிதா துவண்டு போகாமல் திருநெல்வேலியில் தன்னை போல இருக்கும் பல நண்பர்களை சந்தித்து நான் மட்டும் இங்கே இப்படி இல்லை, நிறைய பேர் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்கிறார்.

வாழ்க்கையில முன்னேற நிறைய வழிகள் இருக்கிறது  என்று தெரிந்து கொண்ட சபிதா தூத்துக்குடியில்  MSI company நடத்திய HIV awareness சேவையில்  புராஜக்ட் மேனேஜரா ஒரு வருடம் பணியாற்றுகிறார்.

இந்த வேலை தான் சபிதாவின் வாழ்க்கையை மாற்றியது. அதன் மூலம் நிறைய நட்புக்களை சம்பாதித்த சபிதா சென்னை வந்த பிறகு, தான் உடல் ரீதியான பெண்ணாக மாற வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு நிறைய காசு வேண்டுமே அதற்காக  பாலியல் தொழிலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம். பாம்பேயில் பாலியல் தொழில் செய்து தன்னை பெண்ணாக முழுவதும் மாற்றிக்கொண்ட சபிதாவிற்கு திடிரென மனதுக்குள் நான் ஏன் இந்த வேலை பார்க்க வேண்டும்? என்னை மாதிரி எத்தனையோ பேர் இந்த வேலை பார்க்கிறார்கள். தான் மீளுவது மட்டும் இல்லாமல் எல்லோரையும்  இந்த வேலை பார்க்காமல் தடுக்க வேண்டும்.  அவர்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு உண்டாக்கி கொடுக்க வேண்டுமென சிந்தித்த சபிதா, அவர் நினைத்த குறிக்கோளின் படி பல LGBTQ+  மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும் ஒரு கருவியாக தன்னை அர்பணித்து வாழ்ந்து வருகிறார்.

200 பேர்களின் பல பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து அவர்களின் வாழ்க்கை நலம்பெற உதவி செய்திருக்கிறார்.கொரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த LGBTQ+ மக்களுக்கு தேவையான பொருட்கள் கொடுத்து உதவியிருக்கிறார்.

அரசுடன் தன்னார்வலராக இணைந்து RK நகர் பகுதிக்குள் சேவை செய்ய நுழைகிறார் ஆனால் அங்கே உள்ள மக்கள் இவரை வரவிடாமல் அடிக்க  அதையும் மீறி சேவையை தொடருகிறார். சேவை முடிந்து இவர் வீட்டுக்கு கிளம்பும்போது கண்ணீருடன் போகாதீர்கள்..  என வழியனுப்பிருக்கிறார்கள் RK நகர் மக்கள்.

LGBTQ+ மக்களுக்கு இவர் ஏற்படுத்தி கொடுத்த வேலைவாய்ப்பில் மிக முக்கியமானது சென்னை மெட்ரோவில் திருநர் மக்களுக்கு கிடைத்த இடம். 20 திருநர் மக்கள் இவர் முயற்சியால் மெட்ரோவில் வேலை பார்க்கிறார்கள்.

இன்னும் பல திருநங்கை மக்கள் தங்களுக்கும் வேலை வேண்டும் என resume கொடுத்து வேலைக்காக காத்திருக்கிறார்களாம்.

சபிதாவின் ஒற்றை நோக்கம் சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பு. இது இரண்டில் ஏதாவது ஒன்றை தம் திருநர் சமூகம் பெற்று கௌரவமாக வாழ வேண்டும். எக்காரணத்திற்க்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபடவே கூடாது என உரக்க சொல்லுகிறார். ஸ்டெல்லா மேரிஸ் உடன் இணைந்து திருநர் சமூகத்திற்கு ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் வகுப்புகள், பியூட்டிஷியன் கோர்ஸ் இதுபோன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறார். ஐந்து திருநர் சமூக மக்கள் உணவகம் அமைக்க சென்னை போலீஸ் உடன் இணைந்து ஐந்து பேருக்கும் உணவகம் வைத்து அவர்களின் வாழ்க்கை வளம்பெற உதவியிருக்கிறார். நான் பட்ட கஷ்டத்தை எனது சமூகம் இனி பெறாது என உரக்கக் கூறி அவர்களுக்கான வேலை வாய்ப்பினையும் வருமானத்தையும் முடிந்த அளவு என்னால் நிறைவேற்றித் தருவேன் என்று சபிதா கூறுகிறார்.

அவர் மனதில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம் என்னவென்றால் “எந்த கல்லூரி என்னை விரட்டியடித்ததோ அதே கல்லூரிக்கு வகுப்பு எடுக்க என்னை அழைத்தது. அப்பொழுது எனக்குள் இருந்த அந்த ஆனந்தம் மிகையாகாது” என மிகுந்த சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறார். உண்மையிலே தான் வாழ்க்கையில் ஜெயித்து விட்டதாக நினைக்கிறார். தன்னை அடையாள படுத்திய சகோதரன் அமைப்பிற்கும், அங்குள்ள அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்தும், தனக்கு உறுதுணையாக இருந்த சுந்தரி அம்மாவிற்க்கு காலம் முழுவதும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தனது அன்பினை தெரிவித்தார்.

“நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனது சமூக மக்களை ஒரு நல்ல வேலைவாய்ப்பில் அமர்த்தி காட்டுவேன்” என்று குறிக்கோள் இட்டு வாழும் சபிதாவை பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில்  பெருமிதம் கொள்கிறது.

நன்றி

வணக்கம்

-அருண் தர்ஷன்

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன