வணக்கம் சானவி. எப்படி இருக்கீங்க ?
வணக்கம். ரொம்பரொம்ப நன்றாக இருக்கிறேன்.
மகிழ்ச்சி.சானவி, இன்டர்வியூவிற்கு முன்னாடி உங்களைப்பற்றி எங்களுக்கு அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.
என் பெயர் சானவி.என்னுடைய சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகாமையில். நான் சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. நான் திருநங்கையாக உணர்ந்தது ஸ்கூல்லைப் அப்போது தான். என்னுடைய ஸ்கூல்லைப்ல இருந்தே டிஸ்க்ரிமினேட் ஆகி, எப்படியாவது திருநங்கையாக மாறவேண்டுமென்று நான் இங்கு வந்தேன். இங்கு ஒரு சோசியல் வேல்பேர் டிரஸ்டின் மூலமாக சோசியல் மீடியாவில் அவர்களை கவனித்தேன். அவர்களை மீட்பண்ணேன், பார்த்தேன், ஜாயின் செய்தேன். இப்போது முழு திருநங்கையாக இந்த அமைப்பில் இருக்கிறேன். இதுதான் என்னுடைய பக்கிரவுண்ட். நான் M.Scமுடித்துள்ளேன்.நான் 5 வருடம் டீச்சராக வேலை செய்துள்ளேன்.
சானவிக்கு அணியம் அறக்கட்டளை பற்றி சொல்கிறேன். எப்போதும் சொல்வதுதான். அணியம் அறக்கட்டளை என்பது LGBTQIA+ மக்களால் நடத்தப்படுகிற ஒரு தன்னார்வ தொண்டுநிறுவனம். இதில் “ஏவி” என்னும் ஒரு ப்ராசஸ் சென்று கொண்டிருக்கிறது. “அகமகிழ்” என்னும் ஒரு ப்ராசஸ் சென்றுகொண்டிருக்கிறது. “ஏவி” என்பது கருணையின் அடிப்படையில் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லோருக்குமே உதவுவது. உதாரணத்துக்கு, ஸ்கூல்பீஸ் கட்டுவது, முதியோர்கள் இல்லம், குழந்தைகள்காப்பகம், உடல் ஊனமுற்றோர்கள் இவர்களுக்காக செய்வது. யாருகெல்லாம் தேவை இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் செய்வது. “அகமகிழ்” என்பது முழுக்கமுழுக்க LGBTQIA+ மக்களுக்காக சேவை செய்வது. இதில் “பால்மணம்” என்று ஒரு இ-மேகசின் ஒருபாகமாக இருக்கிறது. அதற்காக இண்டர்வியூ எடுக்கத்தான் நான் இன்று சானவியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.இதுபோது,
“செவிகள்குயர்ஹெல்ப்லைன்” ப்ராசஸ் சென்று கொண்டிருக்கிறது. அதில், LGBTQIA+ மக்களுக்கு ஏதேனும் டிப்ரசன் அல்லது க்ரைசிஸ் இருந்தால் அந்த ஹெல்ப்லைன்க்கு கால்செய்து பேசலாம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யமுடியும் என்று செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் அணியம்.
இப்போது சானவியிடம் “பால்மணம்” ஜனவரி 2021 மாத இதழுக்காக, “திண்ணை” என்னும் தலைப்பின் கீழ் இண்டர்வியூ எடுக்கவந்துள்ளோம். எதற்கு திண்ணை என்றால், நம்மிடம் நிறையபேரு பேசமாட்டார்கள். ஒரு கம்ஃபோர்ட்ஜோன் கொடுக்கமாட்டார்கள்.அதனால், நாங்கள் இருக்கிறோம் உங்களிடம் பேசுவதற்க்கு ,வாங்க திண்ணையில் உட்கார்ந்து பேசலாம் என்று எண்ணி இப்பெயரை வைத்தோம்..
ஆமாம். எங்கள் வீட்டின் அருகில், கிராமத்திலும் கூட மார்னிங் டிப்பன் கட்டி ஹஸ்பண்ட், குழந்தையை அனுப்பிவிட்டு, பிறகு லேடீஸ் எல்லாரும் திண்ணையில் உட்கார்ந்து ,ஜாலியாக பதினொரு மணிவரை அரட்டை அடித்துவிட்டு, பிறகுதான் செல்வார்கள். ஆமாம். அங்கு எந்த ஒருவரை முறையும் இருக்காது. இப்படிதான் பேசணும் அப்படிதான் பேசணும் என்று எந்த ஒரு லிமிட்ஸ் இருக்காது.
சானவியை எங்கள் எல்லோருக்குமே தெரியும். நானும் ஒரு நான்கு ஐந்து முறை பார்த்திருப்பேன். சானவியோட லைப் , குழந்தைப்பருவம், உங்களை நீங்கள் ஒரு ட்ரான்ஸ் ஊமன்-ஆக உணர ஆரம்பித்தது, அதுபோன்ற தருணங்களில் எந்தமாதிரியான பிரச்சனைகள் இந்த சோசைட்டியிலிருந்து ஃபேஸ் பண்ணிருக்கிங்க ???
நிறைய ஃபேஸ் பண்ணிருக்கேன். எந்த ஒரு திருநங்கை குழந்தைகளுக்கும் அந்த வயதில் இதை பற்றி தெரியாது. குழந்தைத்தனமாக குறும்புத்தனமாக இருக்கும், அந்த கட்டத்தைதாண்டும் போதுதான் உடம்புக்குள் இருந்து பாலுணர்வு மாற்றம் தெரியும். பால்மாற்றத்தின் போது, பால்தன்மையை மாற்றிக்கொண்டு, அம்மாவின் ட்ரெஸ், தங்கையின் ட்ரெஸ் எடுத்து அழகு பார்ப்பது, பொட்டு வைத்துக்கொள்வது, மைவைத்துக்கொள்வது, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது, இது எல்லா திருநங்கைகளின் குழந்தை பருவத்திலும் நடந்திருக்கும். அதேபோல்தான் என்னுடைய குழந்தை பருவத்திலும் நடந்து.நான் என்னுடைய பால்தன்மையை உணர்ந்தது, ஐந்து அல்லது ஆறாவது பயிலும்போது. குழந்தைகள் ஆறு அல்லது ஏழுவயது வரைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்தகுரல் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக தான் இருக்கும். அந்த குழந்தைத்தனமான பேச்சுக்கள் அப்படியே இருக்கும். அந்த பருவநிலை மாற்றத்திற்கு பிறகுதான் பெண்ணோட வோக்கல்கார்ட் சாப்ட்டாகவும், ஆணோட வோக்கல்கார்ட் ஹார்ட்டாகவும் இருக்கும். எங்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும். ஆண்குரலும் பெண்ணின் குரலும் கலந்ததுபோல் இருக்கும். ஏனென்றால், க்ரோமோசோம்ஸ் மாற்றம்தான் திருநங்கையாக மாறுவது. அவ்வாறு க்ரோமோசோம்ஸ் பாதி ஆணும் பாதி பெண்ணும் இருக்கையில் வோக்கல் கார்ட் என்பது ஆணாகவும் இருக்கும் பாதி பெண்ணாகவும் இருக்கும். இவ்வாறு இருக்கையில், நான் ஆறாம் வகுப்பு பயிலும்போது இந்தமாற்றத்தை உணர்ந்தேன். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை நடுநிலை பள்ளியில்தான் படித்தேன். அது கோ-எட் பள்ளிதான். அங்கு பெண் சினேகிதி இருந்தாலும் சரி, ஆண் சிநேகிதர்களாக இருந்தாலும் சரி ஒன்றாகதான் பேசுவோம், விளையாடுவோம். அப்போது ஏதும் தெரியவில்லை. பின்பு ஆறாம் வகுப்பிலிருந்து மேலே செல்லும் கட்டம், மாற்றம் உருவாகக்கூடிய கட்டமாக இருந்தது . அப்போது அந்தகட்டத்தில் நாளாக நாளாக அழகான பசங்களை பார்த்தால் ஒரு உணர்வு. அழகாக இருக்கிறான். நம்மிடம் பேசுவான் என்ற உணர்வு.
பிறகு கல்ச்சுரல்ஸ் (பள்ளிவிழா), சந்தோசமாக நம்ம டான்ஸ் ஆட போகிறோம் என்ற ஒரு எக்சைட்மெண்ட் வந்துவிடும். எந்த ஒரு திருநங்கையாக இருந்தாலும், டான்ஸ் என்பது பிடிக்காமல் இருக்காது. அதுவாழ்விலே ஒரு அங்கமாக இருக்கிறது. அந்த ஸ்டைல் நளினம் என்பதை அதில் வெளிபடுத்திடலாம். அதனால் டான்ஸ் ஆட ஆரம்பித்தேன். அப்போது அந்தபாட்டுக்கு ஏற்றவாரு பெண் வேடம்தான் போட வேண்டும் என்று சொன்னார்கள். அது இன்னும் எனக்கு எக்சைட்டாக இருந்தது. நாம் விரும்பிய ஆசையாக இருந்ததை எக்ஸ்போசர் செய்யும் பொழுது, மனசுதவித்து ஆடும்போது கிடைக்கும் பேரானந்தம் அதை அடைந்தேன். நல்ல மேக்அப் செய்து கொண்டு, பெண்களின் உடை அணிந்து, மையிட்டு, சடைபின்னி, அந்ததருணம் அவ்வளவு அருமையாக இருந்தது. அது ரொம்பபிடித்திருந்தது.
நீங்கள் அந்த நேரத்தில் வந்து ரொம்ப என்ஜாய் செய்துள்ளீர்கள். உங்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பாலியல் ரீதியாக அல்லது அதுபோன்ற கொடுமைகள் பற்றிசொல்லுங்கள்.
வன்கொடுமைகள் என்று ஏதும் நடக்கவில்லை. கிண்டல், கேலிகள் அதிகமாக இருந்தது. பெண் போன்று இருக்கிறாய், பெண்கள் மாதிரி நடக்கிறாய், பெண்போல் சிரிக்கிறாய் ,பேசுகிறாய் என்று தொடர்ந்து கூறுகையில்,”அய்யயோ இப்படி சொல்கிறார்களே” என்று எண்ணம் தோன்றும். அது மனவருத்தமாக இருந்தது. இதற்கு நாம் என்ன செய்வது. இது நம் பிறப்பு. நாம் ஏதும் செய்யமுடியாது.
நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் இவ்வாறு நடந்துகொள்ளும்போது, உங்களிடம் உங்கள் பெற்றவர்களின் நிலை என்னவாக இருந்தது?.
பெற்றவர்களுக்கு, தான் பெற்றக்குழந்தை ஊனமாக இருந்தாலும் என்னவாக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகள்தான். அதில் எந்த ஒருமாற்றுக்கருத்தும் கிடையாது. அவர்களை பொறுத்தவரை, மற்றவர்களால் அந்தகுழந்தை வேதனை அடைகிறதே என்பதுதான். அவர்களாகவே ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. சொசைட்டிக்காகதான் பயப்படுகிறார்கள். எங்கள் அம்மாவிற்கு மட்டுமே தெரியும். அப்பாவிற்கும், அவருடன் உடன்பிறந்த அக்காவிற்கும் தெரியாது.
தன்னுடைய கூட்டத்துடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் வெளியே அனுப்புகிறார்கள். சொசைட்டிக்கு பயந்துதான், சொசைட்டி என்ன சொல்லுமோ? சொசைட்டி ஏற்றுக்கொள்ளுமா? என்று பயத்தில்தான் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். நான் இருந்தது எல்லாமே ரூரல் பகுதியில்தான். உங்களுக்கே தெரியும் கிராமப்புறத்தில் ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டாலே தவறாக எண்ணக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கிவிடுவார்கள். அவ்வாறு இருக்கையில் ஒருஆண் பெண்ணாக மாறுவதை ஒரு பெரிய காட்டுத்தீ போல பரவிவிடும். அப்போது மற்றவர்கள் நடந்துகொள்வதில் நமக்கு வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் நம்மக்களுடன் இணைய வேண்டும் என்றும் தோன்றும். இப்பொழுதும் கூட வீட்டிற்கு சென்றால் பாண்ட், ஷர்டோடதான் போவேன். எங்க அம்மாவுக்குமட்டும்தான் தெரியும். மற்ற உறவினர்கள் எல்லாம் ஏன் முடிவளர்கிறாய் என்று கேட்டால் சாமிக்காக வளர்த்து உள்ளேன் என்று பொய்தான் கூற வேண்டியுள்ளது. இது நம்வாழ்க்கை. நாம்தான் வாழ வேண்டும். இந்த விஷயத்தில் பொய்கூறுவது தப்பில்லை. அந்த இடத்தில் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக கூறியது. அவர்களும் அதை ஒப்புக்கொள்வார்கள். வரும்போது பான்ட், ஷர்ட்டில்தான் வரவேண்டும். நானே நினைத்தாலும் என்னால் புடவை அணிந்து என்வீட்டிற்கு செல்ல முடியாது. உறவினர்கள் முன் பெற்றோர்கள் கஷ்டப்படக்கூடாது என்று என்னை கஷ்டப்படுத்திகொண்டு அன்று பேண்ட், சர்ட்டில்செல்வேன். பெற்றோர்களுக்காக விட்டுக்கொடுப்பதில் யாரையும் எதிர்பார்க்கக்கூடாது. பெற்றவர்களே ஏற்கும் மனநிலையில் இருந்தாலும், சுற்றியுள்ளவர்கள் ஏதும் சொல்வார்களோ என்ற பயம் என்னைப்பற்றி பெற்றவர்களுக்கும் அவர்களைப்பற்றி எனக்கும் இருக்கும். திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு, பிரச்சாரம், படம் எது வந்தாலும், திருநங்கைகளை புரிந்துகொள்ளும் நிலை ரூரல் பகுதியில் இல்லை.
சானவி எதிர்கொண்ட கஷ்டமான தருணங்களில், நிலைகுலைந்து நின்ற தருணம் என்று ஏதேனும் உள்ளதா?
நிறைய உள்ளது. என் குடும்பம் நடுத்தர குடும்பம்தான். அப்பா, ஆப்ரேட்டராக வேலை செய்தார். அம்மா ஹவுஸ் வைஃப்தான் டெய்லரிங்கும் செய்தார்கள். வீட்டில் வசதி இல்லை என்பதால் கவர்மெண்ட் பள்ளியில் கல்விகட்டணம் கிடையாது என்ற காரணத்தினால் பத்தாம் வகுப்பு வரைபயின்றேன். பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு சேர்வதற்கு கல்விகட்டணம் செலுத்தவேண்டும். வருடத்திற்கு 800 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், பணம் செலுத்துவதற்கு வழி இல்லை. 2007 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புமுடித்தேன். 11ஆம் வகுப்பில் குரூப்தேர்ந்தெடுக்க வேண்டும், அட்மிஷன்போட வேண்டும். ஆனால், அப்போது இருந்த காலகட்டத்தில் என்னிடம் 800 ரூபாய் பணம் இல்லை. எனக்கு மேக்ஸ்குரூப் படிக்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. கம்ப்யூட்டர்சயின்ஸ் குரூப், அதுவும் நன்றாக மதிப்பெண் வாங்கியவர்களுக்குதான் கிடைக்கும். விளையாட்டுத்தனம், வீட்டின் கஷ்டம் அறிந்து யோசித்தல் என்று கவனமில்லாமல் இருந்து 353 மதிப்பெண்கள்தான் வாங்கியிருந்தேன். பிறகு இறுதியாக ஒருமாதம் வகுப்புகள் முடிந்த பிறகுதான் பணம் கட்டிசேர்ந்தேன். பிளான் செய்துபடித்தேன், அதுவும் படிப்பு ஏறவில்லை. அப்போதுதான் பருவமாற்ற நிலைஏற்பட்டு, அழகான பசங்களை பார்த்ததும் அவர்களுடன் பேசவேண்டும், பழகவேண்டும், என்ற எண்ணம் தோன்றியது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அந்தப்பள்ளியில் கே பசங்க நிறைய இருப்பார்கள். படிக்கும்போதே அந்த பழக்கவழக்கங்கள் மாறுபட்டதால் படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள், எனக்கும் அவ்வாறே அமைந்தது. அடுத்ததாக கவர்ன்மென்ட் கல்லூரியில் சேர்ந்தேன். என் வீட்டில் அதிகமாக படித்தது நான்தான். முதல் பட்டதாரி நான்தான். எங்கள் ஊர்பக்கம் கவர்ன்மென்ட் கல்லூரியில் நன்றாக சொல்லிக் கொடுக்கமாட்டார்கள். அதுபடிப்பை ரொம்பவும் பாதிக்கும். அதை நான் விரும்பவில்லை. அப்பாவும் விரும்பவில்லை. அப்பாவும், அம்மாவும் நாங்கள்தான் படிக்கவில்லை, அவனாவது படிக்க வேண்டும் என்றுதான் படிக்க வைத்தார்கள். அப்போது பத்தாயிரம் கட்டி தனியார் கல்லூரியில் படிக்க வேண்டியநிலை. வீட்டின் சூழ்நிலையில் பணத்தை செலுத்த முடியவில்லை. அந்நிலையில் எந்தபாடத்திற்கு குறைவான கட்டணம் உள்ளதோ, அதை தேர்ந்தெடுத்தேன். அனைவரும் பிடித்த பாடத்தை தேர்வு செய்வார்கள். ஆனால் நான், கட்டணத்தை பார்த்து பாடத்தை தேர்வு செய்தேன். வீட்டிற்கு மீண்டும் கஷ்டம் கொடுக்க முடியாது. திறமை உள்ளவர்கள், அறிவு உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். அந்த நம்பிக்கையில் அட்டவணையில், குறைவான கட்டணம் உள்ள பாடத்தை தேர்வுசெய்ய முடிவெடுத்தேன். அதிலும் பிசிக்ஸ், தமிழ் மற்றும் ஆங்கிலம் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் பயில விருப்பம் இல்லை. கடினம் என்று தெரிந்தும், எனக்கு வராது என்று தெரிந்தும் பிசிக்ஸ் தேர்வு செய்தேன். எவ்வளவு படித்திருந்தாலும் பிசிக்ஸ் படித்தால் ஒருகெத்து இருக்கும். அதே சமயம் நாலெட்ஜ் கிடைக்கும். முதல் செமஸ்டரில், அப்பாவால் பணம் செலுத்த முடிந்தது. இரண்டாம் செமஸ்டரில், கடினமாக இருந்தது. அப்பொழுதும், நாளை தேர்வு என்றால் இன்று பணம் செலுத்தினோம். என் கல்லூரியில், பிசிக்ஸ் சென்டர் இருந்தது. அதிலே மாதம் 700 ரூபாய் சம்பளத்திற்கு வேலைபார்த்தேன். எட்டுமணி முதல் மாலை நான்குமணி வரை கல்லூரி வகுப்புகள் நடக்கும். மாலை 4 மணிமுதல் 10 மணிவரை பார்ட்டைம்வேலையாகபணிபுரிந்தேன்.இவ்வாறுதினமும் 5 மணிநேரத்திற்குமாதம் 700 ரூபாய்சம்பளம். இப்படி வேலை செய்து செமஸ்டர் கட்டணங்களை செலுத்தினேன். இதுதான் என்னுடைய கஷ்டமான நிலையாக இருந்தது. பெற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது. பிறகு எம்.எஸ்.சி. படித்தேன். என் நண்பன்தான் படிக்க வைத்தான். அவன்தான் எனக்கு துணையாக இருந்தான். சும்மா இருக்கக்கூடாது என்று கோவையில் ஐந்து மாதம் ஒருஃபேக்டரியில் வேலை செய்தேன். அதில் வருகிற வருமானத்தைதான் வீட்டு கட்டணமாகவுமம் செலவாகும் செய்து வந்தேன். நான் கேம்பஸ் இன்டர்வியூவில் பெரிய ஐடிகம்பெனியில் செலக்ட் ஆகி ஆறுமாதங்கள் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், என் தலையில் பெரிய இடிவந்து விழுந்தது. அப்பாவுக்கு தோல் கேன்சர், உள்பாதத்தில் வந்ததாக தெரியவந்தது. கடவுள் புண்ணியத்தில் இன்ஷூரன்ஸ் பணம் அந்நிலையில் வந்தடைந்தது. அதை வைத்து மருத்துவமனையில் சேர்த்தபோது பாதத்தில் வந்தகேன்சரால் கால் எடுக்க வேண்டியநிலை வந்தது. இப்போது ஆர்டிபிசியல் கால்தான் வைத்துள்ளார். மிகப்பெரிய வேதனையாகவும் கஷ்டத்திலும் நொடிந்துபோன தருணம்.
ஐடி கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டது இனி எல்லா கஷ்டமும் தீர்ந்துவிடும் என்று எண்ணும் நேரத்தில்தான் இது நடந்தது. அந்தநிலையில் அம்மா ஒருவரால் அப்பாவை பார்த்துக் கொள்ளமுடியாது என்பதால் வேலையை விட்டுவிட்டு வந்தேன். அந்த ஒரு மூணுமாதம் நான்பட்ட கஷ்டமும் வேதனையும் யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.
உங்கள் வாழ்வில் நடந்த கஷ்டமான தருணங்களை கூறியுள்ளீர்கள். உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணம் என்றால் எது? இதை எண்ணினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று நினைக்கக்கூடிய தருணம் எது?
என்னை நான் ஒரு பெண்ணாக உணர்ந்த தருணம் தான் மிகவும் சந்தோஷமான தருணம். இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாகநான் நடந்து சென்றதுதான் மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கின்றேன்.
கேட்கவே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. நீங்கள் ஒரு திருநங்கையாக இருந்து நிறைய விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறீர்கள. அதைபற்றி கொஞ்சம் விரிவாக கூறுங்கள்.
ஒரு வருடம் நீட் பயிற்சிக்கு, ஒரு இன்ஸ்டிடுயூட்-ல் டீச் செய்துள்ளேன். ஒரு என்.ஜி.ஓ வில், நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்க ,ஒரு இடம் க்ரியேட் செய்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறேன். டியூஷன் எடுக்க மிகவும் பிடிக்கும். ப்ரொபசராக பணியாற்றியுள்ளேன். நான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று மீண்டும் ப்ரொஃபஸர் வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறேன். அதுமட்டுமில்லாமல், எனக்கு சர்வீஸ் செய்ய மிகவும் பிடிக்கும். பொதுமக்களுக்கு சேவை செய்ய பிடிக்கும். யார் என்னிடம் சோசியல் சர்வீஸ் செய்ய கேட்டாலும் நான் மறுக்காமல் அவர்களுடன் இணைந்து சேவை செய்வேன். உதரணத்திற்கு, ”அணியம்” க்காக நீங்களே கேட்டால் கூட நான் செய்வேன், சேவை செய்ய அவ்வளவு பிடிக்கும்.
Born2Win சானவி, அதைபற்றிகூறுங்கள்.
சிறுவயதிலிருந்தே பிரண்டாக இருந்தாலும், என்னை ஒரு திருநங்கை என்ற காரணத்தினால் நான் தங்கி இருந்த வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள் என்று கூறினால், தயவுசெய்து என்னை பார்க்க வந்துவிடாதே. எனக்கும் பிரச்சனை ஆகும், என்றுகூறும் இந்தகாலகட்டத்தில், “நீவாமா. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிய Born2Win-ஐ செத்தாலும் மறக்கமாட்டேன். எந்நிலையிலிருந்தாலும் நன்றியுடன் இருப்பேன். அது எனக்கு இன்னொரு பிறந்த வீடு.
Born2Win என்பது திருநங்கைகளுக்காக இயங்கிகொண்டிருக்கின்ற ஒன்று. தவறான வழியில் செல்லாமல் இருக்க, தவறான தொழிலில் ஈடுபடாமல் இருக்க, இந்தசமுதாயத்தில் அவர்களை நல்ல நிலையில் வைக்கவேண்டும் என்ற நோக்கில் பலவிஷயங்கள் செய்துகொண்டிருக்கிறது Born2Win. அவர்கள் கண்டெடுத்த முத்துகளில் சானவியும் ஒருமுத்து.
எனக்கு கிடைத்த முத்துதான் Born2Win. அதற்கும் மேல் இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்தது Born2Winதான். அதனால் அனைத்திற்கும் ஒரு படி மேலே தான் வைத்து பார்ப்பேன்.
எல்லாருக்கும் சானவி இப்போது முன்னுதாரணமாக இருக்கிறார்கள். எல்லோரும் வீட்டைவிட்டு வந்ததும், வேறுவழி இல்லை இந்தவழியில்தான் செல்ல வேண்டும் என்று செல்பவர்களுக்கு நடுவில், வீட்டைவிட்டு வந்ததும் தவறான வழியில்செல்லாமல், சொந்தக்காலில் நின்று நம்மால் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் உதாரணம்தான். அதேபோல, சானவி பார்த்து வியந்த ஒருநபர், சானவியின் முன்னுதாரணம் யார்?
ஸ்வேதா மேடம். ஏனென்றால், இன்று வரையும் அவர்களின் வீட்டிற்கு அவர்களைப்பற்றி காட்டாமல், இவ்வளவு ஒரு துணிவு கம்பீரம், இது எதுவுமே அவரது வீட்டிற்கு தெரியாது. எல்லாத்தையும் தாண்டி சாதித்து இவ்வளவு பெரிய ஒரு எல்மெண்ட் நடத்துறாங்க என்பதே பெரிய விஷயம். அவங்கதான் என்னுடைய ரோல்மாடல். அவர்களைப்போல் வரமுடியவில்லை என்றாலும் அவர்களுடன் இருப்பேன்.
கேட்கவே சந்தோஷமாக உள்ளது. நிறையபேர் அவர்களைபோல் ஆகவேண்டுமென்று சொல்வார்கள். ஆனால், அவர்களைப்போல் வரமுடியவில்லை என்றாலும் அவர்களுடன் இருப்பேன் என்பது கேட்கமகிழ்ச்சியாக உள்ளது. அடுத்தகேள்வி, ஒரு திருநங்கையாக இருந்து திருநங்கை சமுதாயத்திற்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயம் என்ன?
திருநங்கையாக மாறிவருவதே வெளிப்படையாக சந்தோஷமா இருக்கவேண்டும் என்பதற்குதான். ஆனால், தற்போது இருக்கின்ற ஒருசில திருநங்கைகளால், அவர்கள் அடிமைத்தனம் தான் படுத்தப்படுகிறார்கள். ஏனென்றால், அந்த இடத்தில் இருந்துதான் நான் வந்துள்ளேன். அடிமைத்தனமாக இருந்துதான் வெளியேவந்தேன். அந்த அடிமைத்தனம் வேண்டாம் என்று சொல்கிறேன். ஏனென்றால், மூத்த திருநங்கை இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு அடிபணிந்து செல்லவேண்டும். இதுவே நார்மல் மக்களாக இருந்தால் அப்படி செய்ய தேவையில்லை. சிலர் திருநங்கையாக உணர்ந்து புதிதாக வெளியேவரும் போது மிகவும் கஷ்டப்படுவார்கள். அதனால், என்னை பொறுத்தவரை இந்த அடிமைத்தனமும் இருக்கக்கூடாது.
யாராக இருந்தாலும் அனைவரையும் சமமாகபார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. திருநங்கை சமுதாயத்தில் சொல்கிறார்கள், அனைவரையும் சமமாகபாருங்கள் என்று. திருநங்கை சமுதாயத்திற்குள் சமபார்வை கிடையாது. சமநிலை இல்லாமல்தான் இருக்கிறது. பெண்ணாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி அதற்கான மரியாதையை கொடுக்கவேண்டும். அது செய்யவேண்டும், இது செய்ய வேண்டுமென்று சொல்லுதல் கூடாது. ஒரு அடிமைத்தனம் ஒழிந்துதான் இவ்வளவுதூரம் நாம் வந்துள்ளோம். ஆனால், இவர்களுக்கு உள்ளே ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கினால், அது தப்பு. ஒருத்தங்க உதவி என்று வருகிறார்கள் என்றால் ஒன்று காப்பாற்ற முடியும் என்று சொல்லுங்கள். இல்லையெனில், இல்லை என்று வெளிப்படையாக சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு நான் காப்பாற்றுகிறேன் மாதமானால் இவ்வளவு கொடு, வருடமானால் இவ்வளவு கொடு என்று கேக்கக்கூடாது. ஏனென்றால், அவர்களுக்கும் குடும்பம் உண்டு. மகன் என்று பிறந்தால் அவர்களுக்கான கடமை இருக்கும். என் பெற்றோர்களை பொறுத்த வரையில் என்னை இன்றுவரை மகனாக தான் பார்கிறார்கள்.அதனடிப்படையிலே நான் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் இருக்கிறது. இப்போது வரை அதைதான் செய்துகொண்டுள்ளேன். நன்முறையில் இருந்து, நன்முறையில் வாழ்ந்து, நல்ல வழியில் சம்பாதித்து அதை செய்து கொண்டிருக்கிறேன். செக்ஸ் அல்லது கை ஏந்துதல் செய்யக் கூடாதென்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன். ஒருநல்ல படிப்புபடித்து இதை செய்யக்கூடாது. அது படித்தவர்களுக்கு மட்டுமல்ல படிக்காதவர்களுக்கும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. கவர்மெண்ட் நிறைய ஸ்கீம் கொண்டுவந்து இருக்கு. ஆனால், கஷ்டப்படாமல் பணம் பார்க்கிறார்கள். அதிலும், ஒருவர் பிச்சை எடுத்து அதை வாங்கிசாப்பிடுகிறார்கள் அல்லவா இன்னொரு திருநங்கை, அது அதைவிடக்கொடுமை. அவர்கள் கடைசியில் செல்லும்போது புண்ணியத்தை அல்ல பாவத்தைதான் சேர்த்து செல்வார்கள். இதைப்போன்ற அடிமைத்தனம் இருக்கக்கூடாது.
அடுத்தகேள்வி, கல்வி என்பது திருநங்கை மக்களோட வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
கண்டிப்பாக. கல்வி மட்டும்தான் எல்லாம். திருநங்கை மட்டுமல்ல நார்மல் மக்களுக்குமே, கல்வி என்று ஒன்று இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக்கொள்ளலாம். அது வாழ்க்கையில் மிகப்பெரியதாக்கத்தை உருவாக்கும். எனக்கு கல்வியால் மாற்றமடைகிறது. ஏனென்றால், நான் எம்.எஸ்.சி.படித்துள்ளேன் என்றால், நாளை ஒரு நிறுவனத்தில் சென்றுநிற்கும் போது, திருநங்கை மக்கள் எம்.எஸ்.சி. படித்துள்ளார், இன்ஜினியரிங் படித்துள்ளார்கள் அதிகமாக படித்துள்ளார்கள் என்னும் போது ஒரு தனித்துவம் கிடைக்கும்.
சானவியின் வாழ்வில் காதல் பற்றிக் கூறுங்கள்…
காதல் ஒரு இன்றியமையாத பகுதி. காதல் இல்லாமல் திருநங்கைகள் இல்லை, திருநங்கைகள் இல்லாமல் காதல் இல்லை. எனக்கு காதல் பூத்தது. நாங்கள் பத்தாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படிக்கிறோம். என்னை எம்.எஸ்.சி. படிக்கவைத்ததும் அவங்கதான். கல்லூரியில் அவர் சேரவில்லை. அந்த இரண்டு வருடகாலமாக உடல் ரீதியாகதான் தொடர்பு இருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பிற்குபிறகு ஸ்டாப் ஆகிவிட்டது. பிறகு பார்த்தால் என் கல்லூரிக்கு எதிரே உள்ள கடையில்தான் வேலை செய்துவந்தார். ஏனென்றால், அவரது வீடும் அதே ஊரில்தான் உள்ளது. அப்போது விட்டுப்போன அந்த உறவு மீண்டும் தொடர ஆரம்பித்து நாள் போகப்போக அதுகாதலாக மாறியது. அவரது வீட்டில் உள்ளவர்கள் ஸ்ட்ரிக்டாக இருப்பார்கள். அவரது குடும்பத்தில் யாரோ காதல் செய்து ஏமாற்றிவிட்ட காரணத்தினால் காதலை முற்றிலுமாக வெறுத்தார்கள். ஒரு ஆண் பெண் காதலையே வெறுத்தார்கள் என்றால், ஆண் ஆண் காதலை எப்படி எடுப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. பின்பு பல பிரச்சனைகளுக்கு பிறகு காதல் செய்தோம். பிறகு கோவை சென்று அவரும் ஒருகம்பெனியில் நானும் ஒரு கம்பெனியில் பணியாற்றினோம். கிட்டதட்ட நான்கு வருடம் ஒன்றாக இருந்தோம். நாங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம். பிறகு வேறு வேலையில் செராக்ஸ்மெசின் இன்ஜினியராக வேலையில் சேர்ந்தான். பிறகு அப்பாவை பார்த்துக்கொள்ள வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். பின்பு, அதே ஊரில் கல்லூரியில் வேலை செய்யும்போது வந்து அவ்வப்போது பார்த்துவிட்டு போவான். கிட்டத்தட்ட ஐந்துவருட காதல். அதுக்கப்புறம் ரோட்டில் ட்ராவல் செய்யும் போது அவனுடைய கல்யாண பேனர் பார்த்தேன். இப்போது இதைசொல்லும் போது சிரிக்கிறேன் என்றால் அன்று அவ்வளவு வேதனை அடைந்தேன். அவனோட பிரண்டு எனக்கும் பிரண்டுதான். அவங்க காலையில் கால்செய்து அவனோட கல்யாணம் இன்று. நீ போகலையா? என்று கேட்டாங்க. இல்ல விளையாடாதீங்க என்றுநான் கூறினேன். அதற்கு முன்னாடி நாள் இரவு கால் செய்து, “மதுரைக்கு கிளம்புகிறேன். என்னுடைய உறவினர் ஒருவருக்கு கல்யாணம். அட்டண்ட் பண்ணிட்டு மாலை வந்துவிடுவேன். நான்கால் செய்தால் எடு. டிரைவிங்ல இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றவன், காலையில் எதார்த்தமாக பேனரை பார்த்துவிட்டேன். பேனரில் பெயர்மட்டும் இருந்தது. ஆனால், நான் நம்பவில்லை. கொஞ்சம் இறங்கி உள்ளே சென்றுபார்க்கும் போது ரிசப்ஷனில் அவனுடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். அந்தநிமிடமே தற்கொலை செய்ய எண்ணினேன். அதைப்பார்த்ததும் மெயின் ரோட்டில் எதுவந்தாலும் பரவாயில்லை என்று எண்ணிநடந்தேன். அன்று என்னுடன் வந்த நண்பர்தான் எடுத்துரைத்தார். நீயும் காதல் கொண்டாய் அவனும் காதல் கொண்டான். ஆனால், இங்கு தாலிகட்டும் தருணம் வரை ஏன் அமைதியாக இருந்தான்?. அப்போது நீ யேசிந்தித்துப்பார். நீ திருநங்கையாக இன்னும் மாறவில்லை. ஆனால், அவனுக்காக மாறினாலும் வாழ்க்கை முழுதும் காப்பாற்றுவான் என்ற எண்ணமும் கிடையாது. அதனால், உன்னுடைய வாழ்க்கையை பார் புத்திமதி சொன்னார்கள். அன்றிலிருந்து மூன்றுநாள் கழித்துதான் சந்தித்தேன் அவனை. ஒரே அழுகை. அவன் சில எக்ஸ்பிளநேஷன் சொன்னான். அது உண்மையா? பொய்யா? என்பது சத்தியமாக எனக்கு தெரியவில்லை. ஆனால், அப்போது “நான் விருப்பம் இல்லாமல்தான் திருமணம் செய்தேன். நான் இப்பொழுதே விட்டுவிட்டு வருகிறேன். செல்வோமா?” என்று கேட்டான். அந்தப் பெண்ணோட வாழ்க்கை? நான் ஒன்றுதான் சொன்னேன். அந்தபொண்ணோட வாழ்க்கையை கெடுத்துவிட்டு, நீ என்னோடு வாழவேண்டும் என்று அவசியம் கிடையாது. நீ நன்றாக இரு, சந்தோஷமாக இரு, உண்மையாக இரு. பாய் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவனோடு இருந்த ஞாபகங்கள் நினைவுகள் அனைத்தையும் விட்டுவிட்டு சென்னைவந்தேன். சென்னை வந்தபிறகு ஒரு உணவகத்தில் ரிசப்ஷனிஸ்டாக வேலைசெய்தேன். அங்கு வேலை செய்யும்போது தான் இன்னொருவன்அ றிமுகமானான். நன்றாக பேசினான். ஆனால், ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்துள்ளான். நான் ட்ரான்ஸ்ஜெண்டர் என்று தெரிந்தும் கூட மிகவும் அன்பாக இருந்தான். அவனிடம் என் கடந்த காலத்தை பற்றி சொல்லிவிட்டேன். ஏனென்றால், ஒருவருடன் பழகும்போது நம்முடைய உண்மைகளை அவரிடம் சொல்லவேண்டும். அவர்களிடம் மறைப்பது தவறு. நாளைக்கு பழகிய பிறகு நீ என்னிடம் மறைத்து விட்டாயே என்று கேட்பது எனக்கு பிடிக்காது. நான் ஒருவரிடம் பழகுகிறேன் என்றாள் என்னைப் பற்றிய 100 சதவீத உண்மைகளை சொல்லிவிடுவேன். அதுசரியோ? தவறோ? தெரியாது. ஆனால், நான் உண்மையாக இருக்கிறேன். இந்தக்காதலும் பணத்திற்காக வந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து இருப்பேன். பணத்திற்காக என்னை காதலித்து, பார்த்துக்கொண்டு இவையெல்லாம் அர்த்தமற்றதாக இருக்கிறது. கால் செய்து பேசினால், என்னை நிம்மதியாக வாழவிடு என்று கூறினான். இதை மறைப்பதற்காக அந்த வேலையையும் விட்டுவிட்டேன், மேலும், நான் ட்ரான்ஸ் என்பதற்காக அவர்களே வெளியே துரத்திவிட்டார்கள். வந்துவிட்டேன்.
இப்போது நிறைய ட்ரான்ஸ்ஜெண்டர்ஸ் காதல் தோல்வியினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதைப்பற்றி தங்களின் அபிப்ராயம்.
என்னைப் பொருத்தவரையில் அது தவறுதான். அவன் என்னை விட்டுவிட்டானே என்ற கவலையில் அரளிவிதையை அரைத்து சாப்பிட்டுவிட்டேன். ஆனால், ஒன்றும் ஆகவில்லை. சரி கடவுள் எதற்காகவோ இதைசெய்கிறார். நான் ஏன் சாகவேண்டும்? என்று விட்டுவிட்டேன். நம்மை ஏமாற்றிவிட்டு நம் பணத்தை வைத்து நன்றாக இருப்பவர்கள் முன், நாம் ஏன் வாழக்கூடாது என்று எண்ணினேன். ஆதலால், என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்தனம் தான். இந்த மாதிரி எல்லாம் இல்லாமல், இருப்பது ஒரு வாழ்க்கை அதை என்ஜாய் செய்துவிட்டு போக வேண்டும். எல்லாமே அடிபட்டு வந்த விஷயம்தான் என்னை இப்படி மாற்றியது. யாரையும் நம்ப கூடாது. முக்கியமாக காதல்… காதல்… காதல்… என்று சொல்லக் கூடிய பசங்களை நம்பக்கூடாது. நூற்றுக்கு 99% இவ்வாறுதான் இருக்கிறார்கள். அந்த ஒரு சதவீதம் ரொம்ப ரேர். அவர்களும் பெற்றவர்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அன்புக்கு ரொம்ப ஏங்குவார்கள். அவர்களை கூட நம்பலாம். ஆனால், இவ்வாறு நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன். நீதான் என் கண்ணேமணியே என்று சொல்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன். பேஸ்புக்கில் எத்தனையோ பேர் என்னை ஃபாலோ செய்கிறார்கள். நீ அழகாக இருக்கிறாய், நான் லவ் பண்றேன் என்று இரண்டு நாட்கள் என்னிடம் ஒழுங்காக பேசுவார்கள். பிறகு நான் மெசேஜ் செய்தால், அதற்கு பதில் மெசேஜ் வரவே செய்யாது.
இதில் அவர்களின் எக்பெக்டேஷன் பார்த்தால் லவ் இல்லை வெறும் செக்ஸ். அதை சொல்வதற்கு காதல் என்பதை கூறதேவையே இல்லையே. இதற்கு நேராகவே, நீ வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் படுக்க வேண்டும் என்று கூறினால் சந்தோஷமே. இதுதான் என்னுடைய அபிப்பிராயம்.
சானவி சமுதாயத்திற்கு பொதுவாக சொல்ல நினைக்கும் விஷயம் என்ன?
இந்த காலகட்டத்தில் நார்மல் மக்கள் அனைவரும் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். எந்த வாய்ப்புகளையும் இழந்துவிடாதீர்கள். இலவசமாக கிடைக்கிறது என்று திருநங்கையின் சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்.
நன்றி சானவி. தங்களை இன்டர்வியூ செய்ததில் மிக்க மகிழ்ச்சி. இதற்குமுன் நல்ல ஜாலியாகதான் பேசிக்கொண்டிருந்தோம். சானவியின் வலிகள் நிறைந்த வாழ்க்கை எனக்கு தெரியாது. இன்னைக்கு அதைபற்றி கேட்கும்போது எனக்கு ஒருநிமிஷம் அந்த வலியை உணரமுடிகிறது. நாங்களும் அந்தகஷ்டங்களை தாண்டிவந்ததால் வலியை அறியமுடிகிறது.
மன்னிக்கவும். கஷ்டப்படுத்துவதற்காக சொல்லவில்லை. பின்னர் யாரும் கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூறினேன். எனக்கு பிளாட்பார்ம் கிடைப்பதற்கு கஷ்டப்பட்டமாதிரி, அவர்கள் கஷ்டப்படக்கூடாது.
நன்றி சானவி. உங்களுடைய பயணம் தொடர்ந்துபயணிக்க வேண்டும். மேலும் திருநங்கை மக்களுக்காக நிறைய செய்யணும். அது என்னுடைய வேண்டுதல். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஆசைப்பட்டது எல்லாமே நீங்க அடையவேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன். அணியமுடன் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாக இவ்வளவு நேரம் செலவழித்து பேசியதற்கு மிக்கநன்றி சானவி.
நன்றி
வணக்கம்
-அகமகிழ்செய்திகள் பிரிவு,
அணியும்.