புயல் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு வழி தேடி திரியும் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கம் பாதுகாப்பாய் வழிநடத்தி இடமளிக்கிறது. அப்படி அந்த கலங்கரை விளக்கம் ஒளிதரவில்லையெனில் பேரலைகளுக்குள் சிக்கிக்கொண்ட படகுகள் சிதைந்து போக நேரிடும். படகுகளுக்கு ஒளியாய் கலங்கரை விளக்கம் இருக்குமெனில், திருநங்கைகளுக்கு ஒளியாய் இருக்கிறது ‘தோழி திருநங்கைகள் காப்பகம்
‘தோழி’ திருநங்கைகள் நலவாரிய அமைப்பானது பல விதங்களில் திருநங்கைகளுக்கு உதவி வருகிறது.
முதலில் சட்டம் சார்ந்து திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும், உதவிகளையும் பெற்றுத் தருகிறது.
இரண்டாவதாக திருநங்கைகளின் சுகாதாரம் மற்றும் நலன் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
மூன்றாவதாக வீடுகளில் திருநங்கைகளுக்கு மறுக்கப்படும் சொத்துரிமையை மீட்டெடுக்கிறது.
நான்காவதாக சமூகத்தில் திருநங்கைகளுக்கு ஏதேனும் அநீதி நேர்ந்தால் அவர்களுக்காக முன் நிற்க்கிறது, தோழி அமைப்பு. தொடர்ந்து திருநங்கைகளுக்கான அமைப்புகள் இருந்தாலும், அவர்களுக்கான காப்பகம் ஓர் கனவாகவே இருந்தது. பல தடங்கல்களை தாண்டி தொடர்ந்து தோழி திருநங்கைகளுக்காக சமூகத்தில் பங்காற்றியதை கண்டு 2018ல் ஜீலை 27 ல் காப்பகம் தொடங்குவதற்க்கான உரிமை வழங்கப்பட்டது.
மனிதனின் அடிப்படை தேவையே உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். ஆனால், விதிகளுக்குட்படாமல் சுயத்தை தேடி பல கட்டமைப்புகளை உடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளிவரும் திருநங்கைகள் முதலில் சந்திக்கும் சிக்கல் தங்குவதற்க்கான ஓர் இடம். திருநங்கைகளுக்கு உறவுகளும் இடமளிக்க மறுக்கிறது, சமூகமும் இடமளிக்க மறுக்கிறது. இந்த நிலையில் தனித்து வீட்டை விடுத்து வெளியே வரும் திருநங்கைகளுக்கு இடமளித்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி வருகிறது தோழி காப்பகம்.
பெரும்பாலும் கிராமப்புறத்தில் இருந்து வெளியே வரும் திருநங்கைகள் முதலில் யாரை தொடர்பு கொள்கிறார்களோ அவர்களுடைய வழியிலேயே பயணிக்க தொடங்குகின்றனர். உதாரணத்திற்கு கடை வசூலுக்கு செல்கிறவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் இவர்களில் யாரை சந்திக்கிறார்களோ, யார் அவர்களுக்கு அடைக்கலம் தருகிறார்களோ அவர்களையே பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். அப்படி புதியதாக வெளிவரும் திருநங்கைகளுக்கு என்று ஓர் காப்பகம் இருந்தால், அவர்கள் சிந்தித்து செயல்பட, சரியான பாதையை தேர்வு செய்ய வழிவகை பிறக்கும். இடம் மட்டுமில்லாது உணவு, அத்தியாவசிய தேவையையும் பூர்த்தி செய்கிறது. திருநங்கைகளின் கல்வி தகுதியை வைத்து அவர்களுக்கேற்ற வேலையும் வாங்கி தரப்படுகிறது. கல்லாதவர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப சுய தொழில் கற்றுக்கொடுக்கப்பட்டு சிறியதாக கடை வைக்க வசதிகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. சில கல்லூரி அமைப்புகளும், நிறுவனங்களும் தாமாக முன்வந்து திருநங்கைகளுக்கு உதவி செய்கின்றனர்.
தோழி திருநங்கைககள் காப்பகம் பல திருநங்கைகளின் வாழ்க்கையை காப்பாற்றி, நல்ல பாதையில் வழிநடத்தி வருகிறது. வழிதவறி நடுக்கடலில் தவிக்கும் படகுகளுக்கு இக்காப்பகம் தன் ஒளியை தந்து அரவணைத்து கொள்கிறது.
நன்றி
வணக்கம்
-அகமகிழ் செய்திகள் பிரிவு,
அணியம்.