இப்பொழுதெல்லாம் எந்த சோசியல் மீடியாக்களை பார்த்தாலும் வானவில் தயோலி, வானவில் நண்பர்கள் ,வானவில் தோழி ,கத்திச் சண்டை என்ற வார்த்தைக்கள் இல்லாத இடங்களே இல்லை…..
முன்பெல்லாம் tag your girlfriend,tag your boy friend,tag your anna, thangachi
இப்படிலாம் சகஜமாக மீம் reels பகிர்ந்து கொண்டிருந்த நமது சமூகம் சமீபகாலமாக tag your வானவில் நண்பர் என்று சகட்டு மேனியில் பகிர்கிறார்கள்…
கடந்த காலத்தில் LGBTQ மக்களை பற்றிய எந்த ஒரு பதிவையும் பதிவிட தயக்கம் காட்டிய இந்த மனிதர்கள் தற்பொழுது கேலிக்காகவாது குயர் மக்களை பற்றிய பதிவுகளை பகிர்வது என்னை பொருத்தவரை மகிழ்ச்சியே…
ஒரு சமூகம் கேளிக்காகவாவது குறிப்பிட்ட மக்களைப் பற்றி பேசும் பொழுது தான் காலம் கடக்க அந்த மக்களின் மீது இருக்கும் அந்த அவநம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே விலக ஆரம்பிக்கும்…
மாற்றங்களை உண்டு செய்யும்…
மனிதர்களில் சிலர் குயர் மக்களைப் பற்றி கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் தெரிந்து கொள்ள முற்படுவார்கள்….
அதனால்தான் என்னவோ அந்த மீம்களை பார்க்கும் பொழுது எனக்கு எந்த விதத்திலும் கோபமோ அழுகையோ தயக்கமோ வருவதில்லை..
இன்னும் கொஞ்ச நாளில் இந்த மீம்களில் சில மாற்றங்களை நாம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்…
ஆனாலும், இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொண்ட நான் சென்னையில் நடைபெற்ற அந்த வானவில் சுயமரியாதை பேரணிக்கு செல்ல கொஞ்சம் தயக்கபட்டேன் ….
முன்பை விட இப்பொழுது இந்த பேரணியை பற்றி பலருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது…
பல மீடியாக்கள் கண்டெடுக்ளுக்காக அங்கே குடியேறிருந்தனர்…
அவர்களின் சேனல்களில் ஒரு மாதம் கேலிக்கை வீடியோக்களாக இந்த பேரணியின் வீடியோக்கள் கண்டிப்பாக சென்று சேரும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது…
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா எங்கிலும் பரவலாக இருந்த மொத்த வானவில்களும் ஒன்றாக சென்னையை நோக்கி வந்திருந்தனர்…
எங்கு பார்த்தாலும் பாகுபாடு ,எதிலும் பாகுபாடு காட்டும் இந்த சென்னையின் மையப் பகுதியில் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அத்தனை வண்ணங்களையும் தன்னுடன் அரவணைத்து கொண்டு கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தனது அன்புகளை அடுத்தவருக்கு பரிசளித்த இந்த வானவில் பேரணியில் அனைவரையும் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்….
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்திருந்த வானவில் பேரணிக்கும் இந்த ஆண்டு நடைபெற்ற வானவில் பேரணிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு…
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வானவில் பேரணியில் கூடியிருந்த மக்கள் இந்த ஆண்டு நடந்த பேரணியில் பல மடங்காகி போயிருந்தனர் …
முகத்தை மறைத்து தன்னை வெளி காட்டிக் கொள்ளாமல் வந்திருந்த பலர் இந்த ஆண்டு தனது முகத்தை காட்டி அவர்களின் துணையுடன் கையை கோர்த்து தைரியமாக பேரணியில் நடந்து வந்து கொண்டிருந்தனர்…
பல பெற்றோர்கள் தனது பிள்ளைகளுடன் அந்த இடத்தில் நிரம்பி இருந்தனர்…
அவர்களின் அந்த கட்டற்ற மகிழ்ச்சியை அங்கிருந்து அனைவராலும் காண முடிந்தது…
எங்கு திரும்பினாலும் சிரித்த முகங்களும் ,ஆட்டமும் கொண்டாட்டமுமாக , அந்த பேரணி நிரம்பி வழிந்தது…
பலருக்கு அங்கே என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்…
இந்த சமூகத்தில் மாற்றத்தை என்னால் கண்ணில் நேரடியாக காண முடிந்ததில் எனக்கு பேரானந்தம் .எனது மனதெங்கிலும் மகிழ்ச்சி கூட அந்த இடத்தை விட்டு விலக மனம் இல்லாமல் பிரியாவிடை கொடுத்துட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்…
பொதுவாக இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் குழந்தை பிறப்பதற்கான கோட்பாடுகளை இந்த வானவில் நண்பர்கள், வானவில் கூட்டங்கள் அழிக்க நினைக்கிறார்கள்..
மதங்களுக்கு எதிராகவும் கடவுள்களுக்கு எதிராகவும் கலாச்சாரத்திற்கு எதிராகவும் இவர்கள் செயல்படுகிறார்கள் என்ற கூச்சலை நாள்தோறும் இங்கு உள்ள மக்கள்கள் கூறிக் கொண்டிருந்தாலும் அதனை எல்லாம் விலக்கி வைத்து விட்டு உங்களது வானவில் நண்பரிடம் ஒரு நிமிடம் உட்கார்ந்து பேசினால் அவர்களின் மனநிலையை உங்களால் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியும்…
வெற்று காமத்திற்காக மட்டுமே வானவில் உருவாகினார்கள் என்ற விஷத்தை பரப்பும் விஷமிகளுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை அவர்களின் அப்பாக்களின் தலைமுறைகளிலும் தாத்தாக்களின் தலைமுறைகளிலும் இந்த வானவில்கள் இருக்கத்தான் செய்தார்கள் என்று….
தான் யாரை காயப்படுத்துகிறோம் என்று கூட தெரியாமல் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த மக்களிடையே என்றாவது ஒருநாள் குயர் மக்களை பற்றிய பெரிய மாற்றத்தை என்னால் உணர முடியும் என்ற ஒரு பெரிய நம்பிக்கையுடன் நான் உங்கள் அருண் தர்ஷன்…..

Author – Arun Dharshan
