குயர் (queer) சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தம்மைத் தாமே உணரும் தருணத்தில் வரும் ஒரு தேடல் நம்மைப் போல பிறரும் இருக்கிறார்களா? எங்கே இருக்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? என்பதுதான். தற்போது நாற்பது வயதைத் தாண்டிய (நாற்பதுக்கு மேல் அவருடைய வயதைக் கணக்கிடுவதை நிறுத்திவிட்டார். எனவே அவர் என்றும் நாற்பது!) என்னுடைய நண்பர் அண்மையில் சொன்னார் – அவருடைய பதின்ம வயதின் தொடக்கத்தில், அவர் அவரை உணரும் தருணத்தில் அவரின் அப்பா உபயோகிக்கும் ஒரு மருத்துவ சொற்களஞ்சியத்தில் (Medical Encyclopedia) Gay என்ற பதத்திற்கான பொருளைத் தேடினார். அவர் தன்னைப் பற்றி உணர்ந்த தன்பாலீர்ப்பு எந்தவித எதிர்மறை நீதிகளும் இல்லாமல் அந்த சொற்களஞ்சியத்தில் கொடுக்கப்பட்டிருந்தது அவருக்கு ஆறுதல் அளித்ததாகச் சொன்னார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையுண்டு. தான் உணர்வது சரியா? என்ற குழப்பம் பெரும்பாலும் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஆண்-பெண் இருமைய குடும்ப அமைப்பினால் வருவது. சொந்த வீட்டில் தொடங்கி, உற்றார் உறவினர், அண்டை அயலர், பார்க்கும் திரைப்படங்கள், கேட்கும் பாடல்கள் என அனைத்தும் ஆணாய்ப் பிறந்து ஆணாய் உணர்வோருக்கும் பெண்ணாய்ப் பிறந்து பெண்ணாய் உணர்வோருக்கும் இடையேயான காதல், உறவு, காமம் பற்றியதே. இணையம் என்றால் என்னவென்றே தெரியாத, தொலைக்கட்சியையும் வானொலியையும் மட்டுமே வெளியுலகத் தொடர்புக்காக உபயோகித்து வந்த ஒரு ஊரகப்பகுதியில்தான் என்னுடைய பதின்ம வயதைக் கழித்தேன். என்னுடைய ஒரேயொரு பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள். நான் என்னுடைய பால் மற்றும் பாலீர்ப்பு பற்றிய புரிதல் ஏற்படும் சமயத்தில் எனக்கு அந்த உணர்வுக்கு என்ன பெயரென்றே தெரியவில்லை. நான் பார்த்த எந்தவொரு திரைப்படமும் என் உணர்வுகளைத் திரையில் பிரதிபலித்ததில்லை. தற்போது இணைய வசதி பரவலாக எல்லோருக்கும் கிடைக்கிறது. பெருநகரங்களில் குயர் திரைப்படத் திருவிழாக்கள் நிகழ்கின்றன. கான்ஸ் (Cannes) போன்ற சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் குயர் சம்மந்தப்பட்ட திரைப்படங்களுக்கென்றே பிரத்யேக விருதுகள் (Queer Palm) வழங்கப்படுகின்றன.
2022ம் ஆண்டுக்கான குயர் பாம் (Queer Palm) விருது ஜாய்லேண்ட் (Joyland) திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது. லாகூரில் (Lahore) வசித்து வரும் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஹைதருக்கு (Haider) இரவில் கவர்ச்சிகரமாக நடனமாடும் (erotic dance) ஒரு குழுவில் பின்னணி நடனக் கலைஞராக (background dancer) வேலை கிடைக்கிறது. கவர்ச்சி நடனங்களுக்கு இடையே இடைவேளை நேரத்தில் நடனமாடும் பிபா (Biba) என்ற திருநங்கை நடனக் கலைஞரின் குழுவில்தான் ஹைதருக்கு வேலை. தன் அருமைத் தோழி தன் கண் முன்பே ஒரு மது-கேளிக்கை அரங்கில் (pub) பணத்திற்காக நடனமாடுகையில் சில ஆண் அயோக்கியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து மது-கேளிக்கை அரங்குகளில் நடனமாடுவதை நிறுத்தி, கவர்ச்சி நடன அரங்கில் நடனமாடச் செல்கிறார். ஆனால் அங்கும் அவருக்கு இடைவேளை நேரத்தில் மட்டுமே நடனமாட வாய்ப்பு கிடைக்கிறது. நடன தயாரிப்பின் இடையே ஹைதருக்கும் பிபாவுக்கும் இடையே காதல் மலர்கிறது.
நடன அரங்கின் நிர்வாகப் பொறுப்பு (theatre manager) என்று ஹைதர் வீட்டில் பொய்சொல்கிறான். ஹைதருக்கு வேலை கிடைத்ததைக் காரணம் காட்டி ஹைதரின் மனைவி மும்தாஸ் (Mumtaz) விரும்பிச் செய்துவந்த ஒப்பனைக் கலை (makeup artist) வேலையிலிருந்து நிறுத்தச் செய்கிறார் ஹைதரின் ஆண்மேட்டிமை மனப்பான்மை கொண்ட தந்தை. ஹைதர் தந்தைக்கு இரண்டாம் மகன். மூத்த மகனும் மகளும் அவர்களின் நான்கு பெண் குழந்தைகளுடன் அதே வீட்டில்தான் வசிக்கின்றனர். ஹைதரின் தந்தைக்கு குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு வேண்டுமென்ற அவா. மூத்த மருமகளுக்கோ பிறந்த நான்கும் பெண்குழந்தைகள். மும்தாஸ் இந்த சமயத்தில் கருதரிக்கிறாள். பரிசோதனையில் கரு ஆண்மகவு என்று தெரியவருகிறது. ஆனால் மும்தாஸிக்கு இந்த ஆண்மேட்டிமை கொண்ட கூட்டுக் குடும்ப அமைப்பு, தாம்பத்தியப் பிரச்சனை, தான் விரும்பிய ஒப்பனைக் கலைப் பயிற்சியை தொடரமுடியாமை என அனைத்தும் அவளை விரக்தி நிலைக்குத் தள்ளுகிறது. அனைத்தையும் உதரித் தள்ளி வீட்டை விட்டே வெளியேறக் கிளம்புகிறாள் மும்தாஸ்.
ஹைதரின் கூட்டுக் குடும்ப பினக்குகள் சிடுக்குகள் மெல்லிய நகைப்புகள், நடன அரங்கில் தன்னை நிலைனிறுத்த பிபா எத்தனிக்கும் முயற்சிகள், பிபாவுக்கும் ஹைதருக்கும் இடையேயான காதல் என அனைத்தும் ஒன்றோடொன்று முயங்கிச் செல்லுமாறு எதார்த்தமாக நேரடியாகச் சொல்லப்பட்ட கதை. நேர்த்தியான ஒளிப்பதிவு கதைக்கு மெருகேற்றியிருக்கிறது. பார்க்க பிபா-வின் பால்தன்மையை மையமாகக் கொண்டு கதை நகர்வதாகத் தோன்றினாலும் ஹைதரின் ஒருபாலீர்ப்பும் மும்தாஸின் தாம்பத்திய ஏக்கமும் கதையில் வெளிப்படாமலில்லை.
2022-ல் நான் பார்த்து வியந்த என்னைப் பாதித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கது ஜாய்லேண்ட். இயல்பாகச் சொல்லப்பட்ட பல்வேறு இழைகளைக் கொண்ட கதைக்களம், நேர்த்தியான ஒளிப்பதிவு என எல்லாவற்றையும் தாண்டி இந்தத் திரைப்படம் எனக்கு மிக அணுக்கமான உணர்வைத் தந்தது. கதைக்கும் பாத்திரங்களுக்கும் இம்மியும் அந்நியமாய் உணரவில்லை. என்னதான் குயர் சம்மந்தப்பட்ட கதைக் கருவாயினும் சமயங்களில் திரைப்படங்கள் குறிப்பாக மேலை நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் ஒரு அந்நிய உணர்வைத் தருவதுண்டு. ஆனால் ஜாய்லேண்ட் முழுக்க முழுக்க ஒரு கிழக்காசியத் திரைப்படம்; பாகிஸ்தானியத் திரைப்படம்.
உலக அரங்கில் பல்வேறு விருதுகளைக் குவித்த பாராட்டுகளைப் பெற்ற ஜாய்லேண்ட் திரையிடலுக்கு படம் எடுக்கப்பட்ட சொந்த மண்ணான பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டது நகைமுரண். திரையிடலுக்கான தடையைத் தொடர்ந்து சர்வதேச அளவில் தடையை விலக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் குரலெழுப்பினர். அந்த குரல்களில் குறிப்பிடத்தக்கது மலாலா யுசஃப்சாய்-னுடையது. இவர் ஜாய்லேண்டின் நிர்வாகத் தயாரிப்பாளரும் கூட. “ஜாய்லேண்ட் பாகிஸ்தானின் கலாச்சாரத்திற்கும், உணவுக்கும் உடைக்கும், மிக முக்கியமாக அதன் மக்களுக்கும் எழுப்பட்ட ஒரு காதல் கடிதம்… இந்தத் திரைப்படம் கோடிக்கணக்கான சாமானிய பாகிஸ்தானியர்களின் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது; சுதந்திரத்திற்காகவும் நிறைவாழ்விற்காகவும் ஏங்கும், தான் விரும்புபவர்களின் அன்றாட வாழ்வில் இன்பமயமான தருணங்களை உருவாக்க எத்தனிக்கும் பாகிஸ்தானியர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது” என்று ஜாய்லேண்டின் திரையிடல் தடைக்கு எதிராக வெரைட்டி (Variety) பதிரிக்கையில் எழுதினார் மலாலா. சர்வதேச அளவில் திரையிடலுக்கான தடையை எதிர்த்த குரல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானிய அரசு திரையிடலுக்கான தடையை விலக்கி நவம்பர் 16, 2022 அன்று திரையிட அனுமதி வழங்கியது. ஆனால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திரையிடலுக்கான தடை இன்றும் தொடர்கிறது.
குயர் மக்களுக்கு திரைப்படம் என்பது தன் பிம்பத்தை வெண்திரையில் தேடுவதுதான். நகர்புர, பொருளாதார வசதி படைத்த சாதிளைக் கடந்து கிராமப்புரங்களிலும் பொருளாதார வசதிகளில் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களிடத்தும் குறிப்பாக பெண்களிடத்தும் ஆண்-பெண் பால் சட்டகங்களுக்குள் அடங்காதோரிடத்தும் வெண்திரையைச் சென்று சேரத் தவிக்கும் வலி நிறைந்த ஏக்கம் தோய்ந்த கொண்டாட்டமான நம்பிக்கையளிக்கக் கூடிய எண்ணற்ற குயர் கதைகள் இருக்கின்றன. அவையும் ஒருநாள் வெண்திரையைச் சென்று சேரும்.

Joyland (2022)
Director: Saim Sadiq
Running time: 126 minutes

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன