என்
தேகம் என்னும் சிறகால் வானைத்
தேய்க்கப் போகின்றேன் – அதன்
ஆகச் சிறந்த பூரிப்பால் நான்
அருவி ஆகின்றேன்!

ஒரு
மூங்கில் காட்டில் துளைகள் வலிமை!
முறுவல் செய்கிறேன் – இசை
வாங்கிக் கொடுக்கும் வெட்டுக் காயம்
வாழ்வில் ருசிக்கின்றேன்!

தினம்
என்னை நானே தோண்டித் தோண்டி
என்னைக் காண்கின்றேன் – அதில்
என்னோடிருக்கும் புதுமை பார்த்து
எகிறிக் குதிக்கின்றேன்!

ஒரு
சொல்லில்லாத வெளியில் மௌனச்
சூட்டை உணர்கின்றேன் – அதன்
எல்லை தெரியத் தேவை இன்றி
எங்கோ நடக்கின்றேன்!

என்
பொம்மை போல எனக்கும் வாழ்வில்
பேதம் தெரியாது – எது
பொய்மை, உண்மை உங்கள் வேதம்
புத்திக்(கு) எட்டாது!

நான்
வரையும் வண்ணம் நீங்கள் சொல்லும்
வட்டம் கொள்ளாது – அதில்
கரையும் என்னை நானே அன்றி
கலைத்தல் நடக்காது!

என்
சிரிப்பைச் சிதைக்க முடியும் ஆனால்
சிலிர்ப்பு சிதையாது – வலி
விருப்பம் ஆகி வாழ்வோர் வழியை
வலிகள் தடுக்காது!!

விவேக்பாரதி
03-09-2022

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன