இந்தியா முழுவதும் தங்களுடைய சட்ட திட்டங்களுக்கு அடி பணியாத பல்வேறு சாதியினரை குற்றப் பரம்பரையினராக வகைப்படுத்தி பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கியது காலனிய அரசு. இது குறித்துத் தமிழிலும் (வேல ராமமூர்த்தியின் “குற்றப் பரம்பரை”) பிற இந்திய மொழிகளிலும் ஏன் வரலாற்று ஆய்விலும் கூட குறிப்பிடத்தக்க புத்தகங்கள் வந்துள்ளன.

 

குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) 1871 இரு பகுதிகளைக் கொண்டது. முதற்பகுதி “பரம்பரையாக குற்றம் புரிபவர்களாகக்” கருதப்பட்ட சாதியினரை அடக்கவும் “சீர்திருத்தவும்” கொண்டுவரப்பட்டது. இரண்டாம் பகுதி முழுக்கவே ஹிஜ்ரா மற்றும் இன்னபிற பால் புதுமையினரை முற்றாக அழித்தொழிக்கக் கொண்டுவரப்பட்டது. இவ்விரு பகுதிகளுக்குமான குறிப்பிடத்தக்க வித்யாசம் என்னவெனில் குற்றப்பரம்பரையினர், சீர்திருத்தத் தக்கவர்களாகக் கருதப்பட்டனர். “இரட்சிப்புப் படை” (Salvation Army) போன்ற கிறிஸ்தவ மதபோதக அமைப்புகள் இத்தகைய குற்றப்பரம்பரையினரை சீர்திருத்தும் நோக்கத்துடனே இந்தியாவில் பணியாற்றின. ஆனால் ஹிஜ்ரா அல்லது காலனியர்களின் மொழியில் “ஆண் தன்மையற்ற மலடர்கள்” (eunuchs) சீர்திருத்தத்துக்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். ஆகவே காலனிய அரசின் எண்ணம் ஹிஜ்ராக்களை முற்றாக அழித்தொழிப்பதே. குற்றப்பரம்பரைச் சட்டம், 1871, பகுதி இரண்டானது வடமேற்கு மாகாணத்தில் (இன்றைய உத்தரப் பிரதேச மாநிலம்) மட்டுமே அமல்படுத்தப்பட்டது. இதற்குக் குறிப்பிடத்தக்கக் காரணம் உண்டு. 1857-ல் காலனிய கம்பெனிக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் பெரும்பாலும் கிளர்ந்தெழுந்தது வடமேற்கு மாகாணத்தில் தான். 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்பே கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சி முடிவுக்கு வந்து இந்தியா காலனிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. சிப்பாய்க் கிளர்ச்சியின் பாதிப்பிலிருந்து மீளாத காலனிய அரசு, மேற்கொண்டு கிளர்ச்சிக்கு வழிகோலும் எந்தவொரு சிறு வாய்ப்புக்கும் இடமளிக்கத் தயாராயில்லை. இதன் வெளிப்பாடே குற்றப் பரம்பரைச் சட்டம், 1871.

 

1830 களுக்குப் பின்பான காலகட்டம் “விக்டோரிய ஒழுக்கவியல்” உச்சத்தில் இருந்த சமயம். மக்களின் நடை உடை பாவனைகள் இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் கடுமையான கண்கானிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டது.  ஆணைப் போல் தோற்றமளித்தாலும் பெண்ணைப் போல் சிகைவளர்த்து உடையணிந்து அணிபூண்டு பொது இடங்களிலும் விழாக்களிலும் ஆடவும் பாடவும் செய்யும் ஹிஜ்ரா சமூகத்தினர் காலனிய அரசின் கண்களை உருத்தினர். அவர்கள் பொது இடங்களில் மட்டுமல்ல இல்லங்களிலும் கூட “பெண்ணின் ஆடைகளை” அணியத் தடைவிதிக்கப்பட்ட்தோடல்லாமல், குதப்புணர்ச்சி, பிறப்புறுப்பறுப்பது போன்றவற்றிற்கும் கடுமையான தடைவிதித்தது காலனிய அரசு. அவர்களின் இல்லங்களிலிருந்த பிறப்புறுப்பு அறுக்கப்படாத குழந்தைகளை கடத்திவரப்பட்டவர்களாகக் கருதி சிறார் சீர்திருத்தப்பள்ளிகளில் அமர்த்தியது. காலாகாலமாக குரு சிஷ்யை-க்கு இடையே நடந்துவந்த சொத்துப் பரிமாற்றத்திற்கும் தடைவிதித்தது. ஹிஜ்ராவாகக் கருதப்பட்ட அத்தனை பேரையும் காவல் நிலைய அளவில் பட்டியலிட்டு அழித்தொழிப்பது காலனிய அரசின் நெடுநாளைய திட்டம். இத்திட்டதிற்கு ஆண்டில் சில நாட்கள் பெண்களைப் போல் உடையணிந்து விரதமிருக்கும் சில கிருஷ்ண சகி-களும் பலிகடாவானார்கள்.

 

ஹிஜ்ரா சமூகத்தினரை முற்றாக அழித்தொழிக்க குறிப்பிடத்தக்க படித்த இந்திய உயர்குடியினரும் ஆதரவு தெரிவித்தனர். சிலர் காலனிய அரசின் ஹிஜ்ராக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதினர். லல்லா பத்ரி பிரசாத், சையத் அஹ்மத் கான் போன்ற குறிப்பிடத்தக்க தலைவர்கள் ஹிஜ்ராக்களை அழிப்பதற்கு ஆதரவாக பத்திரிக்கைகளிலும் எழுதி வந்தனர்.

 

காலனிய மீரட், பனாரஸ் போன்ற பகுதிகளில் ஹிஜிராக்களின் பட்டியலுடன் சேர்த்து அவர்களுடைய வாழ்க்கை, தொழில், சொத்து போன்றவற்றைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்களும் ஆவணப்படுத்தப் பட்டன. இந்த ஆவணங்கள் ஹிஜ்ராக்களின் வாழ்க்கை பற்றி பொது சமூகத்தின் கனிப்புகளுக்குப் புறம்பான முக்கியமான சான்றுகளைத் தருகின்றன. உதாரணமாக பிச்சியெடுத்தல் பாலியல் தொழில் மட்டுமல்லாமல் ஹிஜிராக்கள் விவாசாயம், கால்நடை வளர்ப்பு, பெட்டிக்கடை வணிகம் போன்றவற்றையும் செய்து வந்துள்ளனர். தங்களைப் போன்ற பால்புதுமையினரோடு மட்டுமல்லாமல், கைம்பெண்கள், ஆண் கனவர்களுடனும் வாழ்ந்துள்ளனர்.

 

 

குற்றப் பரம்பரைச் சட்டத்தின் உச்ச கட்டத்தில் கிட்டத்தட்ட 1400 ஹிஜ்ரா சமூகத்தினர் குற்றவாளிகளாகப் பதியப்பட்டிருந்தினர். சில முதிய ஹிஜ்ராக்கள் காலப் போக்கில் மறைய பெரும்பாலானோர் அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க பக்கத்து மாகாணங்களுக்குச் சென்று மறைந்தனர். என்னதான் குற்றப் பரம்பரைச் சட்டம் 1911-ல் வழக்கொழிந்தாலும் சுதந்திரத்திற்குப் பின்பான இந்திய மாகாணங்கள் குறிப்பாக ஹைதராபாத் மற்றும் கர்நாடக மாநிலங்கள் காலனிய சட்டத்தின் அடியொற்றி பால்புதுமையினரை குற்றவாளிகளாக வகைப்படுத்த முயன்றுள்ளன.

 

காலனிய பொது மனப்பான்மையில் சாமனியன் என்பவர் ஆண் அல்லது பெண்ணாக, ஆண் எனில் பெண்ணையோ, பெண் எனில் ஆணையோ மணம் புரிந்து ஓரிடத்தில் நிரந்தரமாகக் குடியிருந்து பொருளீட்டுபரே. இந்த வரையரைக்குப் புறம்பாக உள்ள அனைவரும் ஒழுக்கத்திற்குப் புறம்பானவர்களாக, குற்றம் செய்பவர்களாக, வாழவே தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். ஹிஜ்ரா சமூகத்தினர் தங்களுடைய பால் உணர்வுகளை வெளிப்டுத்திய ஒரே காரணத்திற்காக காலனிய ஆட்சியில் குற்றவாளிகளாக்கப்பட்டு எண்ணவொனாத் துயருற்றனர்.

 

குற்றப்பரம்பரைச் சட்டத்தின் பெரிதும் விவாதிக்கப்படாத பகுதி இரண்டைப் பற்றி வரலாற்றாய்வாளர் ஜெஸிகா ஹின்ச்சி (Jessica Hinchy) எழுதி 2019ல் கேம்பிரிட்ஜ் பல்கலைப் பதிப்பகத்தின் வாயிலாக வெளியான Governing Gender and Sexuality in Colonial India: The Hijra, c. 1850-1900 என்ற புத்தகம் இந்திய பால்புதுமையினர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்.

ஆனந்த்

மேலும் படிக்க

Comments

  • Avatar

    சேஷாசலம்

    09/02/2023 at 5:34 காலை

    1830 களில் கொண்டுவரப்பட்ட ஹிஜ்ரா அழித்தொழிப்பு என்பது 1860 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் 377 என்று இதனை வகை படுத்துதிறந்து. திருமணம் உறவு வைத்துக் கொள்ளத் தடை மீறினால் குற்றம் என்கிறது காலனிய அரசு…..

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன