காமம் ஒரு அழகான விஷயம், அதுவே எல்லைமீறினால் வெறி என்று கூறப்படும். இவனும் அந்த அழகான காமத்தால் ஈர்க்கப்பட்டான், எல்லையும் மீறினான். ஆனால், அது வெறியில்லை. அப்படி என்ன எல்லைமீறினான்?

 

பெண்களிடம் ஈர்ப்பு கொண்ட சராசரி ஆண்கள் போல இவனும் ஈர்க்கப்பட்டான். ஆனால், அந்தஈர்ப்பு காதலை தாண்டி, காமத்தைதாண்டி புனிதமானது. இதை கூறினால் இந்தசமூகம் ஏற்றுகொள்ள மறுக்கிறது. அப்படி என்ன ஈர்ப்பு?

 

ஒரு நாள் அவன் சிறு வயது நண்பனுடன் இருக்கும்போது நடந்த ஒரு சம்பவம். அது ஒரு சராசரியான நாளாகவே இருந்தது, அவன் இவனை முத்தமிடும்வரை! ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு முத்தமா? நம்மில் பலர் இப்படி ஒரு விஷயத்தைக் கேட்டால் முகம் சுழிப்போம், ஏன் என்று உங்களுக்கே தெரியும்.

 

இரு பெண்கள் புகைப்படத்துக்காக முத்தமிட்டால் ஏற்றுக்கொண்ட இந்த சமுதாயம், அதே ஆண்கள் காதலால் இல்லை, ஒருபால் ஈர்ப்பால் இல்லை, இருபால் ஈர்ப்பால் முத்தம் குடுப்பதை கொச்சையாக பார்க்கிறது இந்த சமுதாயம். ஏன் முத்தம் ஒரு அன்பின் வெளிப்பாடாகப் பார்க்கும் பொழுது ஒருபால் முத்தம் மட்டும் என்னபாவம் செய்தது?, அதில் மட்டும் என்ன ஒரு ஒரவஞ்சனை? வெறும் காமத்தால் ஈர்க்கப்பட்டுதான் ஒரு ஆண் இன்னொரு ஆண்மீது முத்தமோ இல்லை உடல் உறவோ வைத்துக்கொள்வான் என்று என்னை சுற்றி இருக்கும் சிலபேர் கூறினர். ஏன் காமமாக இருந்தால் கூட அதில் என்னதவறு என்று அவனுக்கு தோன்றியது? ஒருவன் தன் காம உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் வேறுவழியின்றி ஓருபால் உடலுறவு தேடும்பட்சத்தில் அவனின் காதலும் காமமும் கொண்ட ஒரு அழகிய முத்தத்தை என்னால் எதிர்க்க முடியவில்லை. ஆம், இந்த உலகம் எதிர்பார்க்கும் அந்த சராசரி மனிதன் அவன் இல்லை என்று அவனுக்கு புரிந்தது. இது ஒரு பெருமையான விஷயம் என்று மட்டும்தான் தோன்றியது. அதன் வெளிப்பாடாய் இதோ இந்த சமூகத்தில் என்னுடன் இருக்கும் சகமனிதர்களிடம் சொல்ல வேண்டும் என்று முடிவுசெய்தான்.

 

முதலில் அவன் காதலி. ஆம் ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு இருந்த போதிலும், அவன் ஓரு ஆணிற்கு முத்தமிட்டேன் என்று எப்படி அவளிடம் கூறமுடியும்? மறைப்பதில் இஷ்டமில்லை! அவன் தலையே அறுந்து விழுந்தாலும் சரி, உண்மையே பேசுவேன் என்று முடிவெடுத்தபின் அவளிடம் கூறினான். அந்தபக்கம் போனில் இருந்து என்னபதில் வருமென்று பயத்தோடு இருந்தபோது அவள் சொன்னவார்த்தை “வாவ்”. மகிழ்ச்சி! ஏன் என்றால் மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள். ஆனால், இவள் இப்படி கூறியபின் அவன் யாருக்காகவும் பைசெக்சுவல் என்ற அடையாளத்தை மறைக்கப்போவதில்லை என்று முடிவெடுத்தான். இருந்தபோதிலும் அவன் அவளிடம் கேட்டான், இன்னொருவரை நான் முத்தமிட்டேன் அதில் உனக்கு கோவமோ, வருத்தமோ இல்லையா என்று? அதற்கு அவள் சொன்னபதில் “நீ உன் பைசெக்சுவலிட்டியை எக்ஸ்ஃபோஸ் பண்ணுற, இதுல நான் ஏன் கோபப்படப்போறேன்?”. வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை அவன் எவ்வளவு அதிர்ஷடசாலி என்று! அதன்பின், அவன் நண்பர்களிடம் கூறலாம் என்று முடிவு செய்து அவர்களிடம் கூறினான். ஆனால், அந்த இரவு என்றும் அவனால் மறக்க முடியாது. அவன் அவர்களிடம் கூறியபின் ஒருவன் “ச்சி” என்று சொன்னான், இன்னொருவன் இரண்டு அடி பின்சென்று,”இனிமேலே உன்கிட்ட ஜாக்கிரதையாக இருக்கனும் இல்லைனா எங்களை ரேப்பண்ணிடுவ”, என்று சொன்னான். உடைந்து போனான். அவன் காமம் தலைக்கு ஏறி சுற்றிகொண்டிருக்கும் ஆளில்லை, அவன் காமஉணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இன்னொருவரை ரேப் செய்வதற்கு. அவன் காதலோ இல்லை காமத்தாலோ ஈர்க்கப்பட்டான். ஆனால், அது வெறி அல்ல.. நாம் வாழ இதுசரியான வழி இல்லையென்று கூறினார்கள், அப்போ எது சரியான வழி? சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்ற பெயரில் இந்த உலகத்தில் நடக்கும் அநியாயத்தை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் கூறும்படி இது காமமாகவே இருக்கட்டும், இதில் மற்றவற்களை போல் இல்லாமல் வெறும் பாலினம் என்ற எல்லையை மீறியது தப்பாக அவனுக்கு தோன்றவில்லை. ஒரு ஆண் ஓரு பெண்ணிடம் எதனால் ஈர்க்கப்படுவான்? அவளது கேரக்டர் என்று பொய்சொல்ல வேண்டாம். நம் இந்திய சமுதாயத்தில் பெண்ணின் மார்பகம் ஒரு கவர்ச்சி பொருளாகவே சித்தரிக்கப்படுகிறது…

 

அதன் காரணமாகவே என்னமோ ஒரு ஆண் பெண்ணிடம் கவனிக்கும் முதல் விஷயம் மார்பகம். இதைபடிக்கும் ஆண்களில் ஒரு சில பேருக்கு கசக்கதான் செய்யும். ஆனால், என்ன செய்வது?.. உண்மைகள் இனிப்பாக இருந்தது இல்லை. சரி, நாம் இந்த ஆண்மகனின் கதைக்கு வருவோம். அவனும் மற்ற ஆண்கள்போல் ஓரு பெண்ணை பார்க்கும்போது அவள் மார்பைதான் பார்த்தான், ஆனால், அது காமத்தோடு இல்லை, அந்த மார்பை தொட வேண்டும் என்ற ஆசையோடு இல்லை. இந்த இரண்டும் இல்லையென்றால் வேறு என்ன! அது பொறாமை! ஆம், ஏன் அந்த பெண்போல் எனக்கு மார்பகம் இல்லை என்று அவனுக்கு பொறாமை. சரி இவன் ஒரு ஆண், இவன் ஏன் மார்பகம் வேண்டும் என்று ஆசைப்படுகிறான்? முதலில் அது அவனுக்கு ஒரு அந்தஸ்த்தை கொடுக்கும், அந்த அந்தஸ்து ஒரு ஆண் என்று அவன் வெளியே சொல்லுவதைவிட தன்னை பெருமையாக சித்தரிக்கும் என்று நம்புகிறான். இரண்டாவது பெருமை. ஒரு பெண்ணின் மானம் அவளது மார்பு கிடையாது, அது அவளின் பெருமை என்று கூறினான். ஒரு ஆணாக நீ மார்பு வைத்துக்கொண்டால் அது அசிங்கம், பெருமை இல்லை என்று பலர் கூறியபோதும் அவன் கேட்கவில்லை. ஏன்? இது அவன் சொந்தவிருப்பம். அவன் ஏன் இதை விரும்புகிறான் என்று கேக்க உனக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் அவன் இப்படி இருக்ககூடாது என்று சொல்ல உனக்கு இல்லை, ஒருபொழுதும் இருக்காது. சரி அவன் மார்பால் ஈர்க்கப்பட்டான், அந்த வெளிப்பாடாக அவன் தனக்கும் மார்பு வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், ஒரு பெண்ணிடமிருந்து ஈர்க்கப்பட மார்பு ஒன்று மட்டும்தான் உள்ளதா? யார் கூறியது அவன் மார்பால் மட்டும்தான் ஈர்க்கப்பட்டான் என்று? அவன் மார்பால் ஈர்க்கப்பட்ட முதல் இன்றுவரை அவன் பெண்மை என்னும் அழகிய உணர்வுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். ஆம், நன்றாக யோசித்தால், இதிலென்ன பெண் ஆண், அவனுக்கு பிடித்ததுபோல் வாழ்கிறான் என்று சொல்லலாம். ஆனால், என்ன செய்வது நாம் இந்தசமூகத்தோடு ஒன்றிவிட்டோம். அதனால், இதை ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்மை என்றே கூறிவிடுவோமே! இது ஆண் ஆடை, பெண் ஆடை என்று பிரித்து பார்த்த அவன் ஒருநாள் பெண் ஆடைகள் மீது ஆசைப்பட்டான். ஒரு பெண்ணிற்கு அவள் ஆசைப்பட்ட உடைகளை போட முழுசுதந்திரம் வந்துவிட்டதா என்றுகேட்டால் இல்லை என்ற பதில்தான் வரும். அதுதான் உண்மை. அதே ஒரு ஆண் அவனுக்கு ஆசை என்று புடவைகட்டிக் கொண்டால்? யோசிக்க முடிகிறதா? இந்த சமுதாயம் என்னவென்று கூறும்? அவன் ஒரு திருநங்கையாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுபவன். இல்லை, முழுபெண்மையுடன் இருக்க வேண்டும் என்று அவன் ஆசையுடன் வளர்த்ததாடியை எடுக்கவில்லை, தன் ஆண் குறியையும் எடுக்கவேண்டும் என்று ஆசைப்படவில்லை.

 

மீண்டும் இரண்டாவதுமுறை இந்த சமூகத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்தான். முடிவு ஒன்று எடுத்தான். அவன் இருக்கும்முறை அல்லது வாழும்முறை அவனை மட்டும்தான் பிரதிபலிக்கும், ஆண், பெண் என்று அல்ல மற்றும் உடைகளுக்கு பாலினம் இல்லை என்றான். ஆயிரம்பேர் போல் சமூகத்தின் தாக்கத்தில் ஏற்பட்ட சுவற்றை உடைத்து அதில் இருந்துவெளியே வந்திருக்கிறான்.
யாரிவன்?

 

நன்றி
வணக்கம்
-சே

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன