வீட்டின் முன் கதவு திறந்திருந்தது,

உண்மையை சொல்லு டி, என்ன நடந்தது. நாளைக்கு மறுபடியும் அவனை பார்க்க போவியா? சொல்லு  உன் பிளான் என்ன. சொல்லி தொல!  என அம்மாவை கேள்விக் கேட்டு  தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார் அப்பா.

அப்பா  அம்மாவின் முடியை பிடித்திருந்தார். அவரின் பிடியில் இருந்து வெளியே வர முயற்சி செய்து கொண்டிருந்தார்,  ஆனால் அப்பா  அழுத்தமாக பிடித்து கொண்டிருந்ததால் அம்மாவால் பிடியில் இருந்து விடுவித்து கொள்ள இயலவில்லை. அவர் பிடித்த அழுத்தத்தில்  அம்மாவின்  முடி பிச்சிக் கொண்டு  வந்தது. அவளின் கண்ணில்  அத்தனை வலியும் வேதனையும் தெரிந்தது.  எவ்வளவு  நேரமாக சண்டையினால்  அழது கொண்டிருந்தாள் என்று அப்பொழுதுதான்  தெரிந்தது.

நான் என் பள்ளிகூட பையை கீழே போட்டு விட்டு ஓடி போய் அவரை தள்ளி விட்டேன். அவர் அம்மாவை  விட்டுவிட்டு சுவற்றில்  சாய்ந்தது போல  நின்றார்.

நான்  அம்மாவை கூட்டி கொண்டு  படுக்கை அறையில்  அனுப்பி கதவை பூட்டி விட்டேன். ஓடி போய் முன் கதவுகளையும் மூடினேன். அப்பாவிடம் என்னாச்சு என்று கேட்டேன். நான் அவரிடம் ஏன் நீங்கள் எப்பொழுதுமே‌ சண்டை போட்டு கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் அம்மாவை காதலிக்கவே இல்லையா என்று கேட்டேன்.

அவர் எந்த அசைவும் இல்லாமல் என் கண்ணையே பார்த்து கொண்டு இருந்தார், எனக்கு எதுவுமே புரியவில்லை, அவரும் எதுவும் சொல்லவில்லை. அவரோ பொறுமையாக நாற்காலியில் உட்கார்ந்தபடி சிகரெட் பெட்டியை எடுத்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை பொறுமையாக எடுத்து  உதட்டின் நடுவில் வைத்து பற்ற வைத்தார்.

அவர் ஏதாவது சொல்வார் என நினைத்தேன், ஆனால் அவர்  எதுவும்  பேசவில்லை, அறை முழுக்க புகையால நிரம்பியது மட்டும் தான் நடந்தது. அவர் பதட்டமாவதை பார்க்க முடிந்தது, என்னால் சும்மா இருக்க முடியவில்லை, மெதுவாக  நான் பேச ஆரம்பித்தேன். எனக்கு இந்த வாழ்கையே பிடிக்கவில்லை. நீங்கள் இரண்டு பேரும் ஏன் இன்னும் ஒன்றாக இருக்கிறீர்கள்? உங்களின் சண்டையினால்  என் வாழ்க்கையில் என்ன  நடக்கிறது என்பதை  கூட உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று நான் சொன்னதும்,  டம் என்ற ஒரு சத்தம். நாற்காலியை பலமாக அவர் அடித்த சத்தம் அது. சற்றும் தாமதமில்லாம்  அவரின்  அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார்.

நான் அந்த கதவையே நிலையில்லா ஏக்கத்தோடு, மன வலியோடு, அன்புக்கும் அரவணைப்புக்கும்  ஏங்கிய படி பார்த்து கொண்டிருந்தேன்.

 

ஏன் இந்த வாழ்கை இப்படி இருக்கிறது என்றபடியெல்லாம்

தலையில பல சிந்தனைகள், பெட்ரூம் கதவை தட்டினேன், அம்மா வெளியே நிலைமை மோசமாக இல்லையென சொன்னேன். அம்மா மெதுவாக கதவை திறந்தார்,  கண்களை துடைத்தபடி,

என்னை பார்த்த அடுத்தமாத்திரத்தில், அழுகையை நிறுத்த முடியாமல் மறுபடியும் கண்கள் கண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தது அவளுக்கு,

 

“நான் ஏன் இன்னும் இந்த மனுஷன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்,

என் ரெண்டு பசங்க இல்லன்னா எப்பவோ செத்து போயிருப்பேன்,

என் வாழ்கை ஏன் இவ்வளவு மோசமா இருக்கு,

எந்நேரமும் யாரு வீட்டுக்கு வந்தா?

எவன் கூட இருந்தன்னு கேட்டு என்னை பாடா படுத்துறான், இவன். அந்த மாதிரி எதை பத்தியும் யோசிக்க கூட எனக்கு நேரம் இல்ல, நான் சொல்ற எதையும் நம்ப மாட்டான் என்னை வாட்டி வதைக்கிறான். நீ தயவு செய்து கல்யாணம் பண்ணிக்காத, பண்ணிக்கிட்டா இந்த மாறி ஒருத்தன் வருவான். நான் தெளிவா இருந்திருக்கணும், என்னை பெத்தவங்க நல்லவங்களா இருந்திருக்கணும், அவங்க என்னை இந்த பாழுங் கிணற்றுல தள்ளி விட்டுட்டாங்க, இப்போ நான் தான் அவஸ்தை பட்டுட்டு இருக்கேன், அப்போவே நான் என் அப்பாவிடம் சொன்னேன், நான் உங்க கூடவே இருந்து உங்களை பார்த்துக்குறேன்னு ஆனா என்னை தொறத்திட  இப்படி பண்ணிட்டாங்க, இப்போ நான் மாட்டிக்கிட்டேன்” என நிறுத்தாமல் பேசிக் கொண்டே  இருந்தார், என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றையெல்லாம் கேட்க முடியவில்லை.

அம்மா நிறுத்துங்கள்,  எனக்கு  கஷ்டமாக இருக்கிறது, நீங்கள் சொல்வதை மறுபடியும் மறுபடியும் கேட்க முடியவில்லை, நீங்கள் இரண்டு பேரும் பிரச்சினையை பேசி தீர்த்துவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் இல்லையா? நீங்கள் இரண்டு பேரும் ஏன் இப்படி இருக்கிறீர்கள்,  அவர் ஏன் உங்களை இப்படி நடத்துகிறார்? எனக்கு தெரியவில்லை, என்ன என்று  தெரிந்தால் நன்றாக இருக்கும்.

“அவரோட அக்கா தங்கச்சிங்க பேச்சை கேட்டு என்னை அடிமை மாதிரி நடத்துறாரு. என்னை இப்படி துன்புறுத்துவது அவரோட வேலையா இருக்கு. நான் வலுவிழந்து இருக்கேன், என் படுக்கையிலே படுத்து தூங்க வேணும் ஆன பயமா இருக்கு”.

சரி நீங்கள்  என் அறையில் தூங்குங்கள்.

 

நீ என்கூட தூங்குவியா? என்கூட இங்கேயே இருப்பியா?

இல்ல அம்மா,

நான் பள்ளி வேலையாக என் தோழியை பார்க்க போக வேண்டும். கொஞ்சம் நேரத்திலேயே வந்துவிடுவேன், அது வரைக்கும் நீங்க இங்கேயே இருங்க, நான் சீக்கிரம் வந்து விடுவேன்.

பள்ளி உடைகளை வேகமாக மாற்றிவிட்டு அதையே பார்த்தபடி இருந்தேன். அது மிகவும் அசௌகரியம் மிக்க சுடிதார். 10 மணி நேரத்துக்கு தினமும் அதையே உடுத்திட்டு இருக்க வேண்டும், ஞாயிறு கிழமைகளை தவிர. எக்க சக்க பின்கள் குத்தி மார்பகங்களை மறைக்க வேண்டும், அந்த உடையில். அதில்  இருக்கும் ஒரே நல்ல விஷயம் ஜோபி மட்டும் தான். வேகமாக எல்லா பின்களையும் அதில்  வைத்து கொண்டு  உடையை கொடியில் போட்டு விட்டேன். என் புத்தகம், பேனா, மிதிவண்டி சாவி எல்லாம் எடுத்து கொண்டு வேகமாக முன் கதவிற்கு சென்றேன்.

பேனாவை புத்தகத்தில் வைத்து விட்டு பின்னாடி இருக்கிற கேரியரில் வைத்துவிட்டேன். பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தை நோக்கி புறப்பட்டேன்.

அங்கே தனிமையான இடத்தை கண்டு பிடித்து, வண்டியை நிறுத்திவிட்டு புத்தகத்தை எடுத்து கொண்டு மரத்துக்கு கீழே உட்கார்ந்து எழுதுவதற்கு தயாரானேன். ஒரு புது பக்கத்தை எடுத்து எழுத ஆரம்பித்தேன்..

 

“என் இராணியே…”

 

நன்றி

வணக்கம்

-மது

 

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன